Last Updated : 14 Mar, 2025 08:21 PM

 

Published : 14 Mar 2025 08:21 PM
Last Updated : 14 Mar 2025 08:21 PM

Narayaneente Moonnaanmakkal: உறவுச் சிக்கல்களின் ஆழம் பேசும் படைப்பு | ஓடிடி திரை அலசல்

மருத்துவர்கள் கைவிரித்துவிட மரணப் படுக்கையில் கிடக்கும் தாய்க்கு கடைசி வழியனுப்புதலுக்கு தயாராகும் மூன்று மகன்களை பற்றிய கதையே ‘நாராயணீண்டே மூனாண்மக்கள்’ (Narayaneente Moonnaanmakkal). இஸ்லாமிய பெண் ஒருவரை திருமணம் செய்ததால் குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டு, பின்னர் லண்டனில் செட்டில் ஆன பாஸ்கர் (சுராஜ் வெஞ்சரமூடு), தந்தையின் இறப்புக்குப் பிறகு குடும்ப பாரத்தை தனி ஆளாக சுமந்த மூத்த சகோதர் விஸ்வன் (அலென்சியர் லே லோபஸ்), நாற்பதை நெருங்கியும் திருமணம் செய்யாமல் இருக்கும் சேது (ஜோஜு ஜார்ஜ்).

வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்புகள் அறுந்து போன மூவரும் தாயின் மரணப்படுக்கையில் ஒன்று சேருகின்றனர். கடந்த கால கசப்புகள், பாகப் பிரிவினை போன்ற விஷயங்களை மூவருக்கும் இடையிலான உறவின் ஆழம் குறித்து உணர்வுபூர்வமாகவும், இதயத்தை தொடும் வகையிலும் பேசியிருக்கிறது ‘நாராயணீண்டே மூனாண்மக்கள்’

மலையாள சினிமாவில் உறவுச் சிக்கல்களை பேசும் ஃபீல்குட் படைப்புகள் ஏராளம் உண்டு. அந்த வரிசையில் அமைதியாக, எந்த ஆரவாரமும் இல்லாமல் மூன்று தலைசிறந்த நடிகர்களை கொண்டு ஓர் அட்டகாசமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் சரண் வேணுகோபால். அம்மாவின் மரணத்துக்காக காத்திருக்கும் வீடு, அத்தனை பேர் இருந்தும் வீட்டில் எந்நேரமும் குடிகொண்டிருக்கும் வெறுமை போன்றவற்றை மிக நுணுக்கமாக, பார்ப்பவர்களின் மனதை விட்டு எளிதில் அகன்றுவிடாத அளவுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்.

சுராஜ், அலென்சியர், ஜோஜு ஜார்ஜ் மூவரும் தங்களின் தனித்துவமான நடிப்பின் மூலம் படத்தின் உயிரோட்டத்தை தக்கவைக்கின்றனர். கதாபாத்திரங்களின் தன்மையை உள்வாங்கி போட்டி போட்டு நடித்து மனம் கவர்கின்றனர். குறிப்பாக, மூன்று சகோதரர்களில் எப்போதும் அவமானம் தாங்கிம், ஒருவித வெகுளித்தனம் கலந்த கதாபாத்திரமாக வலம் வரும் ஜோஜு ஜார்ஜ் ஈர்க்கிறார். படம் முழுக்க பெரிதாக எதுவும் பேசாத அவர், கிளைமாக்ஸில் பொங்கி எழும் காட்சியில் வியக்க வைக்கிறார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக படம் முழுக்க ஸ்கோர் செய்வது கார்கி ஆனந்தனும், தாமஸ் மேத்யூவும். இருவருக்கும் இடையே தயக்கத்துடன் தொடங்கும் ஈர்ப்பு, காதலாக மாறும் காட்சிகளில் இருவரது நடிப்புமே அருமை.

கேரள படங்களுக்கே உரிய கண்ணுக்கு இதமான ஒளிப்பதிவை அப்பு பிரபாகரின் கேமரா தருகிறது. ராகுல் ராஜின் பின்னணி இசை, படத்தின் கலர் கிரேடிங், லைட்டிங், சவுண்ட் டிசைன் என தொழில்நுட்ப அம்சங்களும் படத்தோடு நம்மை மிக இயல்பாக ஒன்றச் செய்து விடுகின்றன. படத்தின் பிரச்சினை என்று பார்த்தால், வழக்கமான மலையாள படங்களின் மீது வைக்கப்படும் தேவையற்ற நீள ஷாட்களும், இழுவையான காட்சிகளும் தான். ஆனால் கதையின் ஓட்டத்தோடு பார்க்கையில் அவை தனியா துருத்திக் கொண்டு தெரியவில்லை.

மற்றொன்று, படத்தில் சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகளுக்கு இடையிலான ஈர்ப்பு என்ற விஷயம் சற்றே ஓவர்டோஸ் ஆகிவிட்டது போன்ற உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. படத்தின் தொடக்கம் முதல் நடிகர்களின் நல்ல நடிப்பின் வாயிலாக மெல்லிய ஈர்ப்பாக காட்டப்படும் அந்த உறவை, இரண்டாம் பாதியில் இவ்வளவு அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருப்பது புதிய விவாத அலையைத் தோற்றுவிக்கிறது

குடும்ப உறவுகளில் இருக்கும் முரண்பாடுகள், ரத்த உறவுகளுக்கு இடையிலான பொறாமைகள் உள்ளிட்ட விஷயங்களை படம் பேசினாலும், அதையெல்லாம் தாண்டி உறவுகளுக்கிடையே இருக்கும் ஒருவித மெல்லிய பிணைப்பை படம் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சுபமா அல்லது சோகமா என்று சொல்லமுடியாத யாரும் எதிர்பார்க்காத ஒரு க்ளைமாக்ஸ் காட்சி. கடைசி 20 நிமிடங்கள் வரும் அந்தக் காட்சி நம்மை ஒருவித கலவையான உணர்வுகளுக்குள் புகுத்தி விடுகிறது. அதேபோல படத்தில் ஆங்காங்கே படத்தில் வரும் மதம், சாதி தொடர்பான ‘நச்’ வசனங்கள் போகிற போக்கில் ஆணியாய் இறங்கும் வகையில் எழுதப்பட்டுள்ள விதம் பெரிய ப்ளஸ்.

சுயபரிசோதனை, உறவுகள், காதல், தாய்மை போன்றவற்றை பேசும் இந்தப் படம், முடிந்த பிறகும் நம் மனதை தைக்கும். சில குறைகள் இருந்தாலும் பாசாங்கற்ற உணர்வுபூர்வமான ஒரு படத்தை எதிர்பார்ப்பவர்கள் நிச்சயம பார்க்கலாம். அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x