Last Updated : 10 Mar, 2025 04:04 PM

 

Published : 10 Mar 2025 04:04 PM
Last Updated : 10 Mar 2025 04:04 PM

Love Under Construction: காமெடியுடன் பழமைவாதத்தை தகர்க்கும் நுண் அரசியல் அனுபவம் | ஓடிடி திரை அலசல்

பாலு மகேந்திராவின் ‘வீடு’ திரைப்படத்தை நம்மால் எக்காலத்திலும் நினைவு கூர்ந்திடாமல் இருக்க முடியாது. அதில் வீடு கட்டும் முயற்சியும், அதனுள் ஒரு காதலும் இருக்கும். அதில் முக்கிய விஷயத்தை சேர்த்த நவீன வெர்ஷன்தான் மலையாளத்திலிருந்து தமிழ் டப்பிங்குடன் வந்துள்ள வெப் சீரிஸ் தான் ‘லவ் அண்டர் கன்ஸ்ட்ரக்‌ஷன்’. வீடு கட்டுமானமும், காதல் உருவாக்கத்திலும் உள்ள பழமைவாதத்தை தகர்க்கும் நுண் அரசியலை காமெடியுடன் கலந்து தந்துள்ளார் இயக்குநர் விஷ்ணு ராகவ்.

துபாயில் வேலைபார்க்கும் வினோத் (நீரஜ் மாதவ்), தனது அம்மாவுக்காக சொந்த ஊரில் வீடு கட்டும் முயற்சியை துவக்குகிறார். அவருக்கு ஊரில் இருக்கும் தனது அம்மாவின் அக்காவான தனது பெரியம்மா பையன் பப்பட்டன் (அஜூ வர்கீஸ்) உதவுகிறார். பெண்கள் என்றால் கட்டுப்பாடுடன் இருக்க நினைக்கும் தனது தாயின் விருப்பங்களை அப்படியே அஜூ வர்கீஸ் பிரதிபலிக்கிறார்.

பப்பட்டனின் போன் பழுதாகிவிட துபாயிலிருந்து போனை வாங்கி பப்பட்டன் வசிக்கும் ஃபிளாட் செக்ரட்டரி பெண்ணான கவுரியிடம் (கவுரி கிஷண்) வினோத் தந்து அனுப்புகிறார். அதன்பிறகு வினோத்துக்கும், கவுரிக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஊரில் வீடு கட்டும் பணி மும்முரமாக நடக்கும்போது வினோத் வேலை பறிபோகிறது. அதன்பிறகு சொந்த ஊருக்கு திரும்பி வீடு கட்டும் பணியோடு கவுரி உடனான காதலைத் தொடர்ந்து திருமணம் செய்ய முயல்கிறார். வீடு கட்டும் பணியால் அவரது சேமிப்பு முற்றிலும் கரைகிறது. அத்தியாவசிய பணத்தேவைக்கு நகை தந்து கவுரி உதவுகிறார்.

இச்சூழலில் பதிவு திருமணம் செய்ய இருவரும் முடிவு எடுக்க, பப்பட்டன் உதவுகிறார். பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் லிஸியை (ஆன் ஜமீலா சலீமை) அவர் சந்திக்கிறார். இருவருக்கும் இடையில் புரிதல் ஏற்படத் தொடங்குகிறது. இச்சூழலில் வீடு கட்டி முடித்தார்களா? இரு ஜோடியும் இணைந்தார்களா என்பதே திரைக்கதை.

வெப் சீரிஸ் என்றாலே கொலை, சஸ்பென்ஸ், அனைவரும் பார்க்க முடியாத சம்பவங்கள் என்பது அதிகரித்த சூழலில் அழகான காதல், வீடு கட்டும் என குடும்ப வெப் சீரிஸாகவும் அப்பிரச்சினைகளில் உள்ள பழமைவாதத்தை தகர்ப்பை காமெடியுடன் நகர்த்தியுள்ளார் இயக்குநர். தங்களது விருப்பங்களையும், பழமைவாதத்தையும் குழந்தையிடம் திணித்தால், அது அவர்களைதான் திண்டாடச் செய்யும் என்பதையும், அதை சுமக்காமல் தவிர்ப்பதே சிறந்த வாழ்க்கைக் களம் என்பதை காமெடியுடன் புரியவைக்கிறார் விஷ்ணு ராகவ்.

தனது அம்மாவின் கனவுக்காக வீடு கட்ட தனது சேமிப்பை இழப்பதுடன், அவரது கனவை நனவாக்க பதிவு திருமண நாளில் கூட ஓடும் சூழலை வினோத் வெளிப்படுத்துகிறார். காதலில் தனக்கான இடம் காதலனின் முக்கியத்துவத்தில் எங்குள்ளது என்பதை விளக்கி காதலின் உன்னதத்தை பற்றி வகுப்பெடுத்து முக்கிய முடிவு எடுத்து கவுரி கலக்குகிறார். இவர்கள்தான் சீரிஸின் ஹீரோ - ஹீரோயினாக இருந்தாலும் அவர்களையும் முந்தி செல்கிறார்கள் பப்பட்டன் - லிஸி இணை.

தனது அம்மாவின் எண்ணங்களை பிரதிபலிப்பதில் இருந்து தொடங்கி ஃபெமினிஸ்ட்டான லிஸியை சந்தித்த பிறகு தனது எண்ணங்களிலும், பெண்களை பார்க்கும் கோணத்தில் ஏற்படும் மாற்றத்தை எளிதாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறார் பப்பட்டன். முக்கிய இடத்தில் வரும் லிஸி - பப்பட்டன் போடும் டான்ஸுக்காகவே பலமுறை பார்க்கலாம்.

திருமண உறவில் அடக்கி ஆள்வது, அதனால் பெண்கள் பாதிப்பது, ஆண்களும் துன்புறுவதை உணர்த்துவதுடன், உண்மையான ஃபெமினிஸ்ட்டுகளின் கருத்தே ஆண்களும் மகிழ்வுடன் வாழத்தான் என்பதை காட்சிப்படுத்தியுள்ளது ஹைலைட். முக்கிய கேரக்டர் மட்டுமில்லாமல் ஹீரோ, ஹீரோயின் பெற்றோர், கான்ட்ராக்டர், வீடு கட்டும் தொழிலாளிகள், பத்திரப் பதிவு அலுவலக ஊழியர்கள் என அனைவரும் கவர்கிறார்கள்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குடும்ப வாழ்வை துன்புறுத்தும் பழமைவாதத்தில் சிக்காமல் இயல்பான வாழ்க்கையை காதலுடன் வாழ காமெடியுடன் நுண் அரசியலை புரியும் வகையில் எடுத்துள்ளதே அழகு. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இதை பார்க்கலாம். ட்ரெய்லர் லிங்க்...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x