Published : 08 Mar 2025 05:09 PM
Last Updated : 08 Mar 2025 05:09 PM
மலக்கப்பாரா வனப்பகுதியில் செல்போனில் வீடியோ ஒன்றை நேரலையில் பகிர்ந்து தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் வாக்குமூலத்தின்படி எலும்புக்கூடு ஒன்று கண்டெக்கப்படுகிறது. அது யார்? எப்படி அங்கு வந்தது? - இந்தப் புதிருக்கான விடைதான் 'ரேகாசித்திரம்' படத்தின் ஒன்லைன்.
ராமு சுனில், ஜான் மணித்திரக்கல் எழுதியிருக்கும் இப்படம், வழக்கமான காட்சிகளுடன் தொடங்கினாலும், இயக்குநர் ஜோஃபின் டி.சாக்கோவின் நேர்த்தியான மேக்கிங் படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறது. ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தை, 1985-ல் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த ‘காதோடு காதோரம்’ படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்ஸை ரீகிரியேட் செய்த விதத்தில், படத்தின் எழுத்தாளர்களும் இயக்குநரும் கவனிக்க வைத்திருக்கின்றனர். இந்த கிளைக்கதை காவல் துறை மேற்கொள்ளும் விசாரணையை உண்மைக்கு நெருக்கமாக உணர வைத்திருக்கிறது. வலிந்து திணிக்கப்படாத சண்டைக் காட்சிகள், பதறவைக்கும் திகில் காட்சிகள் இல்லாமல் இயல்பாக செல்லும் கதையோட்டம் ரசிக்க வைக்கிறது.
பணியின்போது ஆன்லைன் ரம்மி விளையாடியதால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் காவல் அதிகாரி விவேக் கோபிநாத் (ஆசிஃப் அலி). இதனால், அவர் மலக்கப்பாரா என்ற தொலைதூர மலைகிராம காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். அவர் அங்கு பணியில் சேர்ந்த முதல் நாளே, காட்டுப்பகுதியில் ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பெண்ணின் உடலை அந்த இடத்தில் புதைத்தாக லைவ் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
அந்த இடத்தில் காவல் துறை சோதனை செய்ய எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. அந்த எலும்புக் கூடு யாருடையது? கொலை எப்படி நடந்தது? யார் கொலை செய்தது? தற்கொலை செய்தவருக்கு இதில் என்ன தொடர்பு இருக்கிறது? அவரது நண்பர்கள் என்ன ஆனார்கள்? - இவற்றுக்கான விடைகள்தான் 'ரேகாசித்திரம்' திரைப்படத்தின் திரைகதை.
அப்பு பிரபாகரின் கேமராவில் மலக்கப்பாராவை சுற்றிப்பார்ப்பது கண்களை குளிர்விக்கிறது. முஜீப் மஜீத்தின் இசையும், ஷமீர் முகமதுவின் கட்ஸ் என படத்தின் தொழில்நுடப்க் கலைஞர்களின் உழைப்பு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. அதேபோல், படத்தில் நடித்துள்ள அத்தனை கதாப்பாத்திரங்களின் பங்களிப்பும், படத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. நடிகை அனஸ்வர ராஜன், மனோஜ் கே.ஜெயன், சித்திக், ஜெகதீஷ், சாய் குமார், இந்திரன்ஸ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இருப்பினும், நாயகன் ஆசிஃப் அலியின் நடிப்பு அவரை உற்றுநோக்க வைக்கிறது. தொடர்ச்சியாக போலீஸ் கதாப்பாத்திரங்களில் நடித்தாலும், சலிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்தப் படத்தில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அம்சம், நாயகனும் வில்லனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் காட்சி. மற்ற படங்களைப் போல இருவரும் மாறி மாறி கத்திக் கூப்பாடு போட்டு, இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிடும் காட்சிக்கெல்லாம் வேலையே இல்லை. ஹுரோவை பழிவாங்கிவிட்டு வில்லன் ஒருமுறையும், க்ளைமாக்ஸுக்கு கொஞ்சம் முன்னதாக ஹீரோ ஒருமுறை வில்லனையும் பார்க்கும் காட்சிகள் இருக்கும். அந்த இரண்டு பார்வைகளும் அவ்விரு கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்கள், திறமை, உழைப்பு என அனைத்தையும் பார்வையாளர்களுக்கு கடத்திவிடும். அந்தக் காட்சிகள் படத்தில் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில், குடும்பத்துடன் வார விடுமுறையில் காண நல்லதொரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரைப்படம். தமிழ் டப்பிங் உடன் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT