Last Updated : 28 Feb, 2025 09:53 PM

 

Published : 28 Feb 2025 09:53 PM
Last Updated : 28 Feb 2025 09:53 PM

Pagglait: இந்தியப் பெண்ணின் ‘டார்க்’ பக்கமும், ‘காமெடி’ சமூகமும் | ஓடிடி திரை அலசல்

நம் வாழ்வின் பேரின்பத் தருணத்தில் முதலில் சம்பவிப்பது கால நிர்ணயம் செய்ய முடியாத அணுவைக் குறுக்கிய அளவிலான மவுனமாகத்தான் இருக்கும். அதுபோலவே நம் வாழ்வில் பெருந்துன்பம் நிகழும்போது, அதைத் தொடர்வது ஒருவித விடுதலையாகத்தான் இருக்கும். அப்படியாக ஒரு பெண் வாழ்வின் பெரும் துக்கம் என்று இந்தச் சமூகம் கருதும் பேரிடிக்குப் பின்னர் நேரும் விடுதலைதான் ‘பாக்லாயத்’ (Pagglait) திரைப்படம்.

இந்திப் படங்களா... எப்போதாவதுதான் பார்ப்பேன் என்பவர்களுக்குக் கூட ‘பாகல்’ என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்திருக்கும். ஆம், ‘பாகல்’ என்றால் இந்தியில் ‘மனம் பிறழ்ந்தவர்’ என்று அர்த்தம். இப்படத்தின் தலைப்பு மனம் நெருக்கடியைச் சந்திக்கும்போது ஒரு பெண்ணுக்கு ஏற்படும் ஞானோதயத்தை சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சூட்டப்பட்டுள்ளது. இதை நாயகியே ஒரு வசனம் மூலம் படத்தில் நியாயப்படுத்தியிருப்பார்.

இந்திய சமூகத்தில் அதுவும் மதம், சடங்குகள் என கட்டுபட்டுக் கிடக்கும் ஒரு நடுத்தர வர்க்க வடக்கத்திய குடும்பத்தில் ஓர் இளம் விதவையின் விடுதலை வேட்கையும், அவளின் விடுதலையும் வெகு நிச்சயமாக பைத்தியக்காரத்தனமாக மட்டுமே பார்க்கப்படும் என்பதுதான் பாக்லயத்தின் ஒன் லைனர் எனலாம்.
சான்யா மல்ஹோத்ரா இதற்கு முன்னரும் பல திரைப்படங்களிலும் ‘நடிக்கத்தானே செய்ய வேண்டும். இதே செய்கிறேன்’ என்று அகஸ்மாத்தாக வாழ்ந்து காட்டியவர். அதையே இந்தக் கதையிலும் செய்து காட்டியிருக்கிறார்.

படத்தில் சான்யாவின் பெயர் சந்தியா கிரி. கணவரின் பெயர் அஸ்திக் கிரி. படத்தின் துவக்கமே துக்க வீட்டில்தான். இறந்தவர் ஆஸ்திக் கிரி (25+ வயசிருக்கலாம்). அஸ்திக்கின் இறப்புக்காக வீட்டில் 13 நாட்கள் துக்கத்துக்கு தயாராகிறார்கள். ஈமக் கிரியைக்காக ஆஸ்திக்கின் இளைய சகோதரர் அலோக் கிரிக்கு மொட்டை அடித்து 13 நாட்கள் ஒருவேளை உணவருந்தி, புகை, மது எல்லாம் தள்ளிவைத்து தரையில் படுத்து சகல சடங்குகளையும் முன் நின்று முடிக்க வேண்டும் என்ற குடும்பக் கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

துக்க வீட்டுக்கு முக்கிய சொந்த பந்தங்கள் எல்லாம் ஒவ்வொருவராக வந்து சேர்கின்றனர். தொடர்ந்து விரியும் காட்சிகள் அனைத்துமே ஆஸ்திக்கின் குடும்பம் சடங்கு சம்பிரதாயங்களை எவ்வளவு கடுமையாக பின்பற்றக் கூடியவை என்பதை உறுதிப்படுத்துவதற்கானவை எனப் புரிந்து கொள்ளலாம். திருமணமாகி 5 மாதங்களில் இந்த துக்கம் நிகழ்ந்தது மட்டுமேதான் நமக்குச் சொல்லப்படுகிறது. ஆஸ்திக் எப்படி இறந்தான் என்ற காரணமெல்லாம் காட்டப்படவில்லை. அடுத்த கனமே மாடியில் இருக்கும் ஆஸ்திக் கிரியின் அறையில் சந்தியா கிரி படுத்திருக்கிடப்பதைக் காண்பிக்கிறார்கள். நாம் எதிர்பார்ப்பது போல் சந்தியா அழுது வீங்கிய முகத்தோடு இல்லை. சொல்லப்போனால், அவள் எவ்வித சலனமும் இல்லாமல் இருக்கிறாள்.

கணவர் இறந்துவிட்டானா, திருமணமாகி ஐந்து மாதங்களிலேயே நாம் கணவனை இழந்துவிட்டோமா என்ற கவலையோ, பதற்றமோ இல்லை. வேறு எதிர்பார்ப்பும் எதுவும் இருப்பதுபோல் இல்லை. எதிர்காலத் திட்டம் இருப்பதாகவும் தோன்றவில்லை. தன்னை ஆரத்தழுவிக் கொள்ளும் அன்னையிடம் கூட வழக்கமான விசாரிப்புகளை வீசி திகைக்க வைக்கிறாள் சந்தியா. கூடவே, மாமியாரிடம் பெற்றொருக்கு தேநீர், எனக்கு பெப்சி என்று ஓட்டல் ஆர்டரைப் போல் சொல்கிறாள். சந்தியாவின் நடவடிக்கைகளில் எல்லோருமே திகைத்துத்தான் போகிறார்கள்.

வந்திருந்த சொந்த பந்தங்களில் ஒருவர் இது திடீர் அதிர்ச்சி ஏற்படுத்திய மனநல பாதிப்பு என்று ஆங்கிலத்தில் உளவியல் சார்ந்த பெயர்களை உருட்டிவிடுகிறார். நாமும் சரிதான் சந்தியாவுக்கு அதிர்ச்சியில் புத்தி பேதலித்துவிட்டதுபோல்! அதுதான் படத்தின் தலைப்பு இப்படி வைக்கப்பட்டுள்ளது போல என்று நாம் யோசிக்கும்போது ஆஸ்திக்குக்கு ஒவ்வொரு நாளும் சடங்கு நடக்கும்போதும் சந்தியா ஒவ்வொருவிதமாக உளவியல் ரீதியாக மாற்றத்தை எதிர்கொள்கிறாள்.

மாற்றம் என்பதைக் காட்டிலும் மீள் உருவாக்கம் அடைகிறாள். அவளுடைய மன மாற்றப் பயணத்தில் அவளது தோழி நாசியா சயீத் கூட இருக்கிறார். சந்தியா கிரியின் வைதீகமான குடும்பத்தில் நாசியாவை உள்ளே அனுமதிப்பதில் இருக்கும் தயக்கங்கள் தொட்டு அவளுக்கென்று தனி தேநீர் கோப்பை கொடுக்கப்படுவது வரை சமூக அடுக்குகள் பற்றி பிரச்சார நெடியின்றி சொல்லிச் செல்கிறார் இயக்குநர் உமேஷ் பிஸ்த்.

நாசியா சயீத் வந்தபின்னர் தான் சந்தியா கணவரின் இறப்பை எப்படிப் பார்க்கிறாள் என்பதே நமக்குத் தெரிகிறது. தோழியிடம் வெளிப்படையாகவே சந்தியா சொல்கிறாள், “என்னால் அழ முடியவில்லை. எனக்கு அழுகையே வரவில்லை. மாறாக, அதிகமாகப் பசிக்கிறது. எனக்கு பெப்ஸி, சிப்ஸ் சாப்பிடத் தோணுது” என்கிறார்.

இதற்கிடையில், ஒவ்வொரு நாளும் ஆஸ்திக்குக்கு சடங்குகள் நடக்கின்றன. அதனை தன் அறையின் சாளரம் வாயிலாகவே கவனிக்கும் சந்தியா பெரிதாக ஈடுபாடு காட்ட மறுக்கிறாள். அதேவேளையில் ஆரம்பத்தில் சடங்குகளைச் செய்வதை ஆஸ்திக்கின் தம்பி அலோக் கடமையே என மேற்கொள்வதைவிடுத்து ஆன்மிக போதனைகளால் அதில் கொஞ்சம் சிரத்தைக் காட்டத் தொடங்குகிறான்.

ஒன்றிரெண்டு நாட்கள் செல்ல சந்தியாவைப் பார்க்க கணவர் கிரியின் அலுவலகத்தில் இருந்து உடன் வேலை பார்ப்பவர்கள் வருகின்றனர். அவர்களில் அகன்ஷா என்ற இளம் பெண்ணை மட்டும் அழைத்துச் செல்கிறார். அங்கு அக்கன்ஷாவிடம் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்கிறார். தன் கணவருக்கும் அகன்ஷாவுக்கும் இருந்த காதல் பற்றி கேட்கிறார். அது எவ்வளவு ஆழமானது என அரிய முற்படுகிறார். அது தங்களின் திருமணத்துக்குப் பின்னரும் கூட தொடர்ந்ததோ என சந்தேகம் கொள்கிறாள். ஏனெனில், திருமணமான குறுகிய காலகட்டத்தில் ஆஸ்திக் - சந்தியா காதலிக்கவில்லை. காதலின் சுவடே அறியாததுதான் ஆஸ்திக்கின் மறைவு எவ்வித வெற்றிடத்தையும் சந்தியாவுக்கு ஏற்படுத்தவில்லை என்பது நமக்கு அங்கே புரிகிறது.

அதன்பின்னர் பானிபூரி சாப்பிட, அக்கன்ஷாவுடன் வெளியே செல்ல என சந்தியா ஆர்வத்துடன் வெளியே செல்கிறாள். எதனால் அக்கன்ஷாவை காதலித்ததுபோல் தன்னை ஆஸ்திக்கால் காதலிக்க இயலாமல் போனது என்று தேட முயற்சிக்கிறாள். அதில் அக்கன்ஷாவை உளவியல் ரீதியாகவும் சங்கடப்படுத்துகிறாள். காதல் இல்லாத திருமணம் எவ்வளவு அர்த்தமற்றது என்பதை சந்தியா புரிந்து கொள்கிறாள்.

இந்தியச் சமூகத்தில் இன்னமும் பெரும்பாலான திருமணங்கள் ஏற்பாடு திருமணங்களாகத்தான் இருக்கின்றன. இப்போதெல்லாம் ப்ரீ வெட்டிங் ஷூட் கூட செய்கிறார்கள் என்று யாரேனும் வரிந்துகொண்டு வரலாம். ஆம், செய்கிறார்கள்தான். எப்போது?! இருவீட்டாரால் நிச்சயக்கப்பட்ட பின்னர் இவனை, இவளை நேசிக்கலாம் என பச்சைக் கொடி காட்டப்பட்ட பின்னர்தான் செய்கிறார்கள். காதலுக்கு அரங்கேற்றம் நடத்திவைக்க அதன்படி சலங்கைகளோடு ஆடுகிறார்கள் என்று கொள்ளலாமா?!

இந்த சம்பிரதாயங்களில் கட்டமைக்கப்பட்ட திருமணத்தைதான் சந்தியா கேள்விக்கு உள்ளாக்குகிறாள். அக்கன்ஷா - ஆஸ்திக் உறவு பற்றி எல்லாம் தெரிந்து கொண்ட பின்னர் ஒரு நாள் ‘ஆஸ்திக்கை நான் மன்னித்துவிட்டேன்’ என்று நாசியாவிடம் கூறுகிறாள். சந்தியாவின் கோபம் திருமண உறவுகளை திணிக்கும் சமூகத்தின் மீது திரும்புகிறது.

இந்திய, அமெரிக்க சமூகம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க வேண்டாம். பொதுவாக, இந்த உலகமே ஆணாதிக்க சமூகம்தான். அதிலும் சந்தியா கிரியின் குடும்பம் அதன் உச்சங்களின் ஒரு சின்ன சாட்சி. ஆஸ்திக் கிரி, சந்தியாவை காதலிக்கவில்லை என்றாலும் கூட தான் எடுத்த லைஃப் இன்சூரன்ஸுக்கு ஒற்றை வாரிசாக சந்தியாவை நியமித்துவைத்திருக்கிறார். மொத்தப் பணமும் சந்தியாவுக்கு வழங்கப்பட அங்கே ஆணாதிக்க குடும்பத்தின் தாண்டவங்கள் சிறிது, பெரிது, கொடிது என வகை, வகையாக விரிகின்றன. சந்தியாவின் மாமனார் இன்சூரன்ஸ் அலுவலகத்துக்கே சென்று அதனை எப்படி தங்கள் பெயருக்கு மாற்றலாம் என முயற்சிக்கிறார். லஞ்சம் கொடுத்தாவது செய்யலாம் என உறவுகள் தூண்ட அதையும் முயற்சித்து வெட்கிப் போய் வருகிறார்.

மறுபுறம் இழவு வீட்டுக்கு வந்த ஆஸ்திக்கின் சித்தப்பா மகனை கட்டிவைத்து பணத்தை வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று குடும்பத்தினர் யோசனையை செயல்படுத்த முயற்சிக்கிறார் சந்தியாவின் மாமியார். இதையெல்லாம் அறிந்து ‘நீங்கள் மறுமணம் செய்யப்போகிறீர்களா? அப்படியென்றால் உங்களை நானல்லவா அதிகம் நேசிக்கிறேன்” என்று அண்ணன் மனைவியை தனதாக்கிக் கொள்ளும் ஆவலை அன்பென்று சொல்லிச் செல்கிறான் அலோக்.

இப்படி ஆதிக்க சிந்தை நிறைந்த ஆண்கள், ஆணாதிக்கத்துக்கு பழக்கப்பட்ட பெண்கள் எனப் பலரும் அந்தப் பணத்துக்காக பல முயற்சி செய்கின்றனர். ஆனால், சந்தியா சுயமாக முடிவெடுக்கிறார். அந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை மாமனாரின் நிதி நெருக்கடியைக் கண்டு முடிவு செய்துவிடுகிறாள்.

இதெல்லாம் அறியாமல் திருமணம் நிமித்தமாக எல்லோரும் துரத்த, சந்தியாவுக்கு ஒரு யோசனை வருகிறது. தனக்காக மாமியார் பரிந்துரைத்த உறவுக்காரப் பையனுக்கு தன் மேல் காதலா? இல்லை, தனது பணத்தின் மீது காதலா என சோதிக்கிறாள். அந்தப் பரீட்சையின் முடிவு, காதலில்லா வாழ்க்கையை ஏற்கத் தேவையில்லை என்ற துணிச்சலை அவளுக்குத் தருகிறது.

கடைசி நாளில் மிகப் பெரிய சடங்கு நடக்க அன்று ஹோம குண்டத்தின் முன் அமரும்போது நாசியாவையும் சில சடங்குகளை குடும்ப உறுப்பினர் போல் செய்யவைக்கிறார். இங்கே எல்லோரும் பரந்த மனம் கொண்டவர்கள் என்று கூறி, அவர்களின் மத பேதத்தைக் குத்திக் காட்டிவிடுகிறார். முன்னர் ஒருநாள் நாசியாவுக்கு தனியாக டீ க்ளாஸ் கொடுக்கப்படுவதை பூசி மெழுகியவள், அன்று எல்லோரின் முன்னிலையும் சமத்துவம் பேசுகிறாள். அந்தச் சடங்கு முடிந்த கையோடு சந்தியா வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.

சுற்றிலும் நடப்பது எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஆஸ்திக்கின் தந்தைவழிப் பாட்டியிடம் மட்டும் சந்தியா தான் நினைத்ததை எல்லாம் பேசுகிறாள். காரணம் மற்றவர்கள் எல்லோரும் முன்முடிவுகளைக் கொட்டலாம், விமர்சனங்களை வீசலாம் ஆனால் ஆஸ்திக்கின் பாட்டிக்கு உஷா என்ற பெயரைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியாது. அதனால் வீட்டை விட்டு வெளியேறுவதையும் பாட்டியிடம் வெளிப்படையாகச் சொல்கிறாள் சந்தியா. “எப்போது ஒரு பெண் புத்தியைப் பயன்படுத்தி முடிவெடுக்கிறாளோ, அப்போது அவளை இச்சமூகம் பைத்தியக்காரி என்று கூறும்” எனக் கூறுகிறாள்.

இந்த ஒற்றை வரிக்கு அவ்வளவு கனம் இருக்கிறது. சந்தியாவின் மனநிலையை பிரதிபலிப்பதோடு, இந்தச் சமூகத்தில் முற்போக்குத்தனமாக இயங்க விரும்பும் பெண்கள் எப்படிப் பார்க்கப்படுகிறார்கள் என்ற அவலத்தையும் திரைப்படம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மூன்று கடிதங்களை எழுதிவைத்துவிட்டுச் செல்கிறாள். ஒன்று மாமியாருக்கானது. அதில் மொத்தப் பணத்தையும் ஆஸ்திக்கின் தந்தைக்கு ஒரே செக்காக எழுதி பாட்டியின் தலையணையின் கீழ் வைத்திருப்பதாகவும், தனக்கு வேலை கிடைத்துவிட்டதால் அதனை நோக்கிச் செல்வதாகவும், இனி ஆஸ்திக் இடத்தில் இருந்து கவனித்துக் கொள்வேன் என்று நம்பிக்கையைச் சொல்லிச் செல்கிறாள்.

இன்னொரு கடிதத்தை அம்மாவுக்கு எழுதிவைக்கிறாள். அதில் எப்போதும் எனக்கு திருஷ்டி கழிப்பீர்கள். இன்று எனக்கான திருஷ்டி கழிந்துவிட்டது. நான் படித்தபடிப்புக்கு வேலை தேடிச் செல்கிறேன் என்று எழுதிவைக்கிறார்.

அண்ணன்தான் இல்லையே நாமே அந்த காலி இடத்துக்கு ஒரு துண்டு போட்டு வைப்போம் என்று கூறிய அலோக் கிரிக்கும் ஒரு குறுந்தகவல் அனுப்புகிறாள். உனக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள். அவளுக்காகவாவது உன் ஆங்கிலத்தை மேம்படுத்திக் கொள். நான் உன் அண்ணனின் லேப்டாப்பை எடுத்துச் செல்கிறேன். அது இனிமேல் என்னை உயர்த்த எனக்குத் தேவைப்படும் எனச் சொல்கிறாள். இறுதியில், பேருந்தில் தன் பயணத்தைத் தொடங்குகிறாள் சந்தியா. அதுதான் அவள் வாழ்வின் திருப்புமுனையாகிறது.

நாடகத்தன்மை தலைதூக்காமல், பிரச்சார நெடி இல்லாமல், யாரையும் புண்படுத்தாமல் கூட சமூகத்தில் நிலவும் பல்வேறு அவலங்களையும் ஒருசேர கேள்வி எழுப்ப முடியுமா என்றால் முடியும் என்று கேள்வி கேட்டு நிற்கிறாள் பாக்லாயத் சந்தியா கிரி!

இந்தப் படம் 2021-லேயே வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இப்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. டார்க் காமெடி ஜானரில் ஒரு சோஷியல் சென்ஸ் உள்ள படம் பிடிக்கும் என்றால், இதை நீங்கள் நிச்சயமாகப் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x