Published : 27 Feb 2025 08:32 PM
Last Updated : 27 Feb 2025 08:32 PM
நெருக்கடிகள் மிகுந்த ஒரு போர்ச் சூழலிலிருந்து தப்பித்து உயிர் வாழ்ந்தால் போதும் என்பதுதான் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்க முடியும். ஆனால் அதையும் மீறி பெருகிவரும் வெள்ளத்தை எதிர்த்துப் போராடி கரைசேர வேண்டும் என்ற வகையில் எதாவது சாதிக்க வேண்டும் என்கிறது 'தி ஸ்விம்மர்ஸ்' (The Swimmers 2022) திரைப்படம்.
சிரியா நாட்டின் கடும் போர்ச்சூழல். எப்போது எங்கு குண்டு விழும், துப்பாக்கியின் கணைகளுக்கு யார் இரையாவார்கள் என்றெல்லாம் கணிக்க முடியாது. உயிருக்கு உத்தரவாதமில்லாத இந்த நகரத்தில்தான் பள்ளிப் படிப்பை முடித்த நிலையில் வளரிளம் பெண்களான யுஸ்ரா மார்டினி மற்றும் சாரா மார்டினி சகோதரிகள் இருவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற கனவை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
ஒரு தேசிய நீச்சல் வீரரான அலி சுலிமான் வழிகாட்டுதலில் அவரது மகள்களான மார்டினி சகோதரிகள் பயிற்சி பெற்று வளர்கிறார்கள். அந்தப் பயிற்சியும் ஈடுபாடும் அவர்களது வாழ்க்கைக்கே உதவும் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும் என்ற லட்சியமும் மதில்சுவர் விரிசலில் கிளைத்த ஆலஞ்செடியாக வேர்விடுகிறது.
2015-ல் ஒருநாள் டமாஸ்கஸ் நகரின் ஒரு நீச்சல் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே ஆங்காங்கே வெடி சத்தம். அபாயகரமான ஸ்கை ராக்கெட் ஒன்று குளத்தில் விழுகிறது. பலரும் குளத்திலிருந்து தப்பியோட, யுஸ்ரா மார்டினி நீருக்கடியில் கிட்டத்தட்ட வெடிக்கப்போகும் ஸ்கை ராக்கெட் அருகே சிக்கிக் கொள்கிறாள். அந்த ஆபத்தான நிலையிலிருந்து காப்பாற்றப்பட்ட பிறகு இனியும் இங்கு முறையான பயிற்சி பெற இயலாது என்பது அவர்களுக்கு புரிய வருகிறது.
ஒலிம்பிக்கில் பங்கேற்க தங்களது திறமைக்கு தகுதி உள்ளதா அறிந்துகொள்ள சொந்த நாட்டில் அதற்கான சூழல் இல்லை என்பதால் பெர்லின்தான் செல்ல வேண்டும். அதற்காகவென உள்ள ஒலிம்பிக் அகாடமியில் சேர்ந்து முறையான பயிற்சி பெற்ற பின்னர்தான் ரியோடி ஜெனிரோவில் நடைபெறும் 2016 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் நுழைய முடியும் என்றெல்லாம் தெரியவர, நாங்கள் நிச்சயம் பயிற்சிக்காக ஜெர்மன் செல்வோம், ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் நுழைவோம் என்பதில் அந்த நீச்சல் சகோதரிகள் மேலும் உறுதியாக இருக்கிறார்கள்.
இதனால் வீட்டிலேயே குழப்பம் ஏற்படுகிறது. நீச்சல் கற்றுக்கொடுத்த தந்தையே குழந்தைகளை அனுப்ப விருப்பமில்லாதவராக இருக்கிறார். மோசமான வழிப்பயணத்தில் எதாவது ஆகிவிட்டால் என்ற அச்சம்தான் அவருக்கு. அம்மாவோ அவர்களுக்கு நிச்சயம் எதுவும் ஆகாது. நினைத்ததை சாதிப்பார்கள் என்று உத்வேகம் அளித்து அலி சுலிமானை சமாதானப்படுத்தி மகள்களுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். அவர்கள் தனது உறவினர் ஒருவருடன் புறப்பட்டே விடுகிறார்கள். ஆனால் அந்த இளைஞரும் வழிநெடுக முழுமையாக துணை வரவில்லை.
போர் நடந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டிலிருந்து வெளிநாடு செல்வது அவ்வளவு எளிதானா ஒன்றா என்ன? எல்லை கடந்து செல்ல முயன்றபோது ஏற்பட்ட மோசமான சூழலிலிருந்து அவரகள் சிக்கியவர்கள் மீண்டார்களா? ஜெர்மனியில் பயிற்சிபெற அனுமதி கிடைத்ததா? அவர்களை போட்டியில் சேர்த்துக்கொள்ள ஒலிம்பிக் குழு உடன்பட்டதா போன்றவற்றை அவர்களுடன் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் அகதிகளுடனும் திகிலான அனுபவங்களுடன் நம்மையும் கைகோத்து அழைத்துச்செல்கிறார் இயக்குநர் ஷாலி எல் ஹொசைனி.
இப்படம் நடைபெறுகிற காலம் 2015. ஆனால் படம் தொடங்குவது 2011-ல்தான். பெண் குழந்தைகளின் தந்தையான அலி சுலிமான் தனது வீட்டில் உறவினர்கள் சூழ்ந்திருக்க தனது மூன்று பெண்களையும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வீராங்கனைகளாக்கப் போவதாக சூளுரைக்கிறார். உற்சாகம் பொங்க அனைவரும் கைதட்டி வரவேற்கிறார்கள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு என படம் தொடர்கிறது. 2015-ல் யுஸ்ரா மார்ட்டினிக்கு வயது 17. அதனாலேயே பல முக்கியமான இடங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. 2016-ல் சாரா மார்ட்டினிக்கு 18 வயது நிறைவடைந்த நிலையில் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்கம் வெல்கிறார். ஆனால், இந்த லட்சியமும், அதற்கான முயற்சிகளும் போராட்டங்களும் சாதாரணமானதல்ல என்பதை இப்படம் ஐரோப்பாவை நோக்கிய சிக்கல் மிகுந்த பயணங்கள் வழியே நமக்கு காட்டப்படுகிறது.
அதாவது, நீச்சல் சகோதரிகள் ஒலிம்பிக்கிற்காக ஜெர்மனி நோக்கி செல்லும் பயணம் தனியாக அல்ல, அகதிகளுடன்தான் என்பது மிக மிக முக்கியமானது. இப்படத்தில் சிரிய அகதிகளை மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் எரித்திரியா போன்ற நாடுகளின் அகதிகளும் அவர்களுடன் வெவ்வேறு வழிகளில் ஜெர்மனியை நோக்கி பயணிக்கிறார்கள். அவர்களில் குழந்தையுடன் வரும் கணவரைப் பிரிந்த ஆப்பிரிக்க இளம் பெண்மணி ஒருவரின் தோழமை அற்புதமானதாக மாறுகிறது. இறுதிக் காட்சிகளில் ரியோ டி ஜெனிரோ விளையாட்டு அரங்கிற்கே வந்து நேரில் யுஸ்ரா மார்டினியை வாழ்த்தியது கண்ணீரை வரவழைக்கக் கூடியது.
போட்டியில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பின்போது தான் சிரியா நாட்டின் பிரதிநிதியாகத்தான் போட்டியில் பங்கேற்பேன் என்று உறுதியாக யுஸ்ரா கூறிவிடுகிறார். ஆனால் தற்போதுள்ள ஒரு அகதியாக மட்டுமே பதிவாகியுள்ள இவரது பெயரில் அவ்வாறான வாய்ப்புக்கு இடமில்லை என்கிறார்கள். வேறு வழியின்றி சிரியா உள் நாட்டுப் போர் அகதிகளுக்கான பிரிவில் தான் அவர் போட்டியில் பங்கேற்க வேண்டிய சூழல்.
தங்கம் வென்ற பிறகு, மார்டினி சகோதரிகள் பெற்றோரையும் தங்கையையும் தங்களுடன் சேர வேண்டி குடும்ப மறு ஒருங்கிணைப்புக்கு (ReUnion) விண்ணப்பிக்கிறார்கள். இதன் அடிப்படையில் எல்லாம் சாத்தியமான பிறகு அடுத்த ஒலிம்பிக்கில் அவர் சிரியா நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு அனுமதி வழங்கியது.
யுஸ்ரா மார்டினி மற்றும் சாரா மார்டினியாக இருவரும் எப்படி சகோதரிகளோ, அவ்வாறே இப்படத்தில் அவர்களின் பாத்திரங்களை ஏற்று திறம்பட நடித்துக் கொடுத்த மனால் இசா மற்றும் நடாலி இசா ஆகியோரும் கூட நிஜ வாழ்க்கை சகோதரிகள்தான் என்பதும் ஒரு கூடுதல் ஆச்சரியம். தற்போது யுஸ்ரா மார்டினி மட்டும் கடைசி சகோதரியும் பெற்றோருடன் ஜெர்மனியில் தனியே வீடு எடுத்து தங்கி வசிப்பதாக தகவல். ஆனால் சாரா மார்டினி அகதிகளைக் காப்பாற்றும் தன்னார்வலராக பணியாற்றிவருகிறார்.
இப்படத்தில் இதைத்தாண்டி இன்னும் முக்கியமாவை சிலவறை இங்கு குறிப்பிடலாம். 1. ஐரோப்பா நோக்கி வரும் மில்லியன் கணக்கான அகதிகள் நிலை. 2. அகதிகள் சட்டவிரோத குடியேறிகளாக நடத்தப்படும் சூழலிலிருந்து அவர்களை காப்பாற்றி சர்வதேச சட்டத்தின்படி அவர்களுக்கு உள்ள உரிமைக்காக போராடும் ஒரு சமூக ஆர்வலராக மாறும் யுஸ்ரா மார்ட்டினியின் சகோதரியான சாரா மார்ட்டினியின் கதை.
இவற்றை மைய இழையாக வைத்துதான் இயக்குநர் ஒரு வீராங்கனையின் கதையாக திரைக்கதையை எழுதியுள்ளார். சிரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் எரித்திரியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக ஐரோப்பா நோக்கி செல்வதாக உள்ள கள யதார்த்தம் இப்படத்தில் காட்டப்படுகிறது.
அத்தகைய பயணம் ஒருபோதும் சுகமான பயணம் அல்ல. இவ்வாறு நாட்டின் எல்லைப் பகுதிகளை கள்ளத்தனமாக கடக்கும் காடுமேடு கடல், நதி போன்ற பயணங்களில் செல்வதை டாங்கி ரூட் என்கிறார்கள். கழுதை போல் பல நாள் கடந்து செல்வதால் இப்படி செல்வதை டாங்கி ரூட் என்கிறார்களாம். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சட்ட விரோத குடியேறிகளாக அடையாளங்காணப்பட்ட இந்தியார்கள் கைது செய்யப்பட்டு ஓட்டல்களில் அடைத்து வைத்திருந்து ராணுவ விமானத்தில் நாடு கடத்தியபோது கூட இவர்கள் பலரும் டாங்கி ரூட்டில் சட்டவிரோதமாக வந்தவர்கள் என்றே குறிப்பிடப்பட்டது.
இத்தகைய டாங்கி ரூட் பயணங்களில் ஏற்படும் சிரமங்களை 'ஸ்விம்மர்ஸ்' படத்திலும் பலவிதமான காட்சிகளின் வழியே நம் கண்கள் விரியும் விதமாக அல்ல சிவக்கும் விதமாக காட்டிய ஒளிப்பதிவு இயக்குநர் கிறிஸ்டோபர் ரோஸின் பணி அளப்பரியது.
இப்படி அகதிகளாக வருபவர்கள் வழியெங்கும் பணம்பறிக்கும் கடத்தல்காரர்களைச் சமாளிக்கிறார்கள், இன்னொரு நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக ஒரு புதர்க்காட்டில் இறக்கிவிட்டுச் செல்லும் காட்சிகள் ஏராளம். துருக்கிக்கும் கிரேக்கத்திற்கும் இடையிலான கடல் ஏஜியன் கடலில் சின்னஞ்சிறு கடத்தல் காரர்கள் காசு வாங்கிக்கொண்டு இவர்களை ஏமாற்றுவதற்காக வென்று டிங்கி படகில் ஏற்றி அனுப்பிவைக்கும் காட்சியில் பதட்டத்தின் சிறு புள்ளியைத் தொடுகிறோம்.
லைஃப் ஜாக்கெட் அணிந்துகொண்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 அகதிகளுடன் இவர்கள் இருவரும் செல்லவேண்டிய நிலையில் பாதிவழியில் மோட்டார் நின்றுவிட படகு கடலில் மூழ்கும் நிலை ஏற்படும்போது பதட்டம் ஒருதீயென பற்றிக்கொள்கிறது. சிறந்த நீச்சல் வீராங்கனைகள் என்ற நிலையில் இன்னும் நீச்சல் தெரிந்த இன்னும் சிலரையும் இணைத்துக்கொண்டு கடலில் நீந்தியே கரைசேர்ந்த கதை அவ்வளவு நல்ல கதை அல்ல.
கரையேறி நடந்துவரும்போது, கடலின் ஓரம் லட்சக்கணக்கான லைஃப் ஜாக்கெட்கள் சிவப்பும் மஞ்சளுமாக மலையென குவிந்து கிடக்கும் காட்சியின் லட்சக்கணக்கான அகதிகளின் பயணத்தை நம் மனம் அதிர்ந்து பொருத்திப் பார்க்கிறது. நமக்கே அந்த காட்சி கண்டு மனம் கொந்தளிக்கிறது. கிரேக்கத்தில் செல்லும் சாலையில் இவர்கள் தாகத்தில் தொண்டை வறல குடிக்க தண்ணீர் கேட்டாலும் அங்கிருக்கும் சிறு உணவு விடுதிகளில் தர மறுக்கும் மனிதர்களை நாம் காண்கிறோம். ஆனால் இதற்கென உதவி செய்வதற்கான தொண்டு நிறுவனங்களில் இத்தகையோருக்கு உணவு, உடை, காலணிகள் போன்றவையும் உதவியாக கிடைக்கிறது என்பது சற்று ஆறுதலான செய்தி.
எல்லாவற்றையும் கடந்து ஜெர்மனிக்கு செல்லும்போது அகதிகளாக வருபவர்களை அந்நாட்டு அதிகாரிகள் ஜெர்மனி உங்களை வரவேற்கிறது என்ற பதாகை ஏந்தி வரவேற்கும் காட்சி நமது எல்லா ரணங்களையும் ஆற்றுகிறது. உண்மையில் அகதிகளுக்கான வாழும் தெய்வமான ஜெர்மனி அதிபர் ஏஞ்சலினா மெர்கலின் புண்ணியத்தில் அங்கு அகதிகள் முகாம் ஒரு விருந்தினரைப்போல தங்கவைத்து உபசரிக்கும் தன்மையை உலகமே அவரை வணங்கி வாழ்த்த வேண்டும்.
ஆனால் இன்று அதற்கும் வேட்டு வைக்கும்விதமாக ஜெர்மனியின் புதிய பிரதமராகும் பிரெட்ரிக் மெர்ஸ் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவேன் என்று கூறி ஓட்டு வாங்கி வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்றுள்ளார். இவ்வாறு உலகமெங்கும் அகதிகளை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி வெளியேற்றினால் அவர்களின் நிலை என்ன என்ற எண்ணமே மேலிடுகிறது. வருங்காலத்தில் அகதிகள் தஞ்சம் புகுவதற்கான இடம் என்பது கேள்விக்குறியாகும் நிலையில் உலகில் வீழ்த்தப்பட்டவர்களின் அறத்தைத் தாங்கி நிற்கும் இடம் எங்கே என்ற கேள்வியையே எழுப்பி நிற்கிறது.
இதனைப் பற்றி இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு யுஸ்ரா மார்டினி தெரிவிக்கும்போது, ''வேண்டுமென்றே குறிப்பிட்டுத்தான் இக்காட்சிகளை வைத்தோம். ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கியது என்னுடையது ஒரு கதை என்றால் வாழ்க்கையில் அகதிகளாக திரியும் லட்சக்கணக்கான மக்களை நான் சந்தித்தேன் என்பதையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும் என விரும்பினேன்” என்று ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
வாழ்வில் சாதிக்கத் துடிப்பவர்களின் கதையாக மட்டுமின்றி, சமகால போர் அரசியலால் பாதிக்கப்படும் மக்களின் வேதனைமிகுந்த பேரவலத்தின் சாட்சியாகவும் இத்திரைப்படம் விளங்குகிறது. இத்திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT