Published : 27 Feb 2025 04:02 PM
Last Updated : 27 Feb 2025 04:02 PM
ஜெர்மனியிலிருந்து மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பாக வெளியாகியுள்ளது சயின்ஸ் பிக்ஷன் லிமிடட் வெப் தொடரான ‘கசாண்ட்ரா’.
புதிய வீட்டுக்கு குடிவரும் குடும்பத்தினர் அங்கு 1970-களில் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோ இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். ஆரம்பத்தில் குடும்பத்தினரின் அன்பை சம்பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ரோபோவின் நடவடிக்கையில் மெல்ல மாற்றம் தென்படத் தொடங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரோபோவால் ஏற்படும் பிரச்சினைகள் பின்னர் பெரிய சிக்கல்களை கொண்டு வருகிறது.
மொத்தமே ஆறு எபிசோட்களைக் கொண்ட இந்தத் தொடரில் ரோபோவாக லவினியா வில்சன் நடித்திருக்கிறார். தன்னுடைய மர்மமான நடவடிக்கையால் பார்வையிலேயே அடிவயிற்றில் புளியை கரைக்கும்படியான சிறப்பான நடிப்பு. டெக்னோஹாரர் வகையில் ஹாலிவுட்டில் ஏராளமான படைப்புகள் வெளியாகியிருந்தாலும் ஜெர்மனியிலிருந்து ஒரு விறுவிறுப்பான த்ரில்லராக ‘கசாண்ட்ரா’ வந்துள்ளது. 1
960-70களை பற்றி காட்டப்படும் ப்ளாஷ்பேக் காட்சிகள் தொடருக்கும் பலம். எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாத வகையில் சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர் பெஞ்சமின் கட்ஸே. லவினியா வில்சன் தவிர்த்து, மினா டாண்டர், மைக்கேல் க்ளாம்மர், ஃப்ரான்ஸ் ஹார்ட்விக் என தொடரில் நடித்துள்ள அனைவருமே நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர். இசை, கேமரா என தொழில்நுட்ப அம்சங்கள் பாராட்டத்தக்கவைதான் என்றாலும் குறிப்பிடத்தக்க உழைப்பு அந்த வீட்டை வடிவமைத்த ஃப்ராங்க் போலிங்கரின் குழுவினருடையது.
பெரும்பாலான காட்சிகள் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டவை என்பதால் மிகவும் அந்த வீட்டின் நிறங்களும், ஒளி அமைப்புகளும் அமைக்கப்பட்ட விதம் சிறப்பு. முதல் பாதியில் ஃபீல் குட் பாணியில் செல்லும் தொடர் இரண்டாம் பாதியில் ‘டார்க்’ ஆக மாறும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தொடர். நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT