Last Updated : 17 Feb, 2025 08:59 PM

 

Published : 17 Feb 2025 08:59 PM
Last Updated : 17 Feb 2025 08:59 PM

OTT Pick: The Mehta Boys - இந்த உறவு மவுனமாய் போவது ஏன்?

அம்மா- மகன் சென்டிமென்ட் படங்கள் நம்மூரில் ஏராளம். அதிலும் தந்தை - மகன் சென்டிமென்ட் படங்கள் தவமாய் தவமிருந்து, வாரணம் ஆயிரம், அப்பா, சந்தோஷ் சுப்ரமணியம், எம்டன் மகன், கேடிபில்லா கில்லாடி ரங்கா, அசுரன், இந்தியன், கிரீடம் என விரல்விட்டு எண்ணிவிடக் கூடியவைதான்.

எப்போதும் தன்னைவிட தன் மகன் நன்றாக வர வேண்டுமென அதிகமாக விரும்பும் தந்தையும், தன்னை தந்தை முன் நிரூபிக்க போராடும் மகனுமே அதில் அதிகம். இந்த விருப்பமும், போராட்டமும் அதிகமாகி இருவரும் பேசாமல் வாழ்வதை பலரும் சகஜமாக பார்க்கலாம். அப்படி தந்தை - மகன் உறவை சினிமாத்தனம் இல்லாமல், இயல்பாக கண்முன் கொண்டு வந்திருப்பதே ‘தி மேத்தா பாய்ஸ்’ (The Mehta Boys). அமேசான் ப்ரைமில் தமிழ் டப்பிங்கில் காணக் கிடைக்கிறது.

மும்பையில் வசிக்கும் இளம் ஆர்க்கிடெக்ட் அமேய் (அவினாஷ் திவாரி) தனது தாய் மறைவால் சொந்த வீட்டுக்குச் செல்கிறார். அவருக்கும் அப்பா போமன் இரானிக்கும் ஏழாம்பொருத்தம். அங்கிருந்து அப்பா போமன் இரானியை அமெரிக்காவுக்கு அவரது மகள் அழைத்து செல்ல முடிவு எடுக்கிறார். சில குளறுபடிகளால் இரண்டு நாட்களுக்கு தனது மகனின் மும்பை வீட்டில் தங்கும் சூழல் அப்பாவுக்கு ஏற்படுகிறது. அதில் சில குழப்பங்கள் ஏற்பட தந்தையும் மகனும் அன்பை உணர்கிறார்களா என்பதே படத்தின் கதை.

நடிப்பில் நமக்கு நன்கு பரிச்சயமான போமன் இரானி இயக்கியுள்ள முதல் திரைப்படம் இது. மனைவி இழப்பு, மகன் வளர்ச்சியை பார்க்க துடிக்கும் யதார்த்தம், பல இடங்களில் வசனமின்றி கண், முகம் என அனைத்திலும் சூழலையும் காட்சி தன்மையையும் வெளிப்படுத்தி அனுபவசாலி என்பதை தயக்கமின்றி நிரூபித்திருக்கிறார் .

வீட்டில் லைட் போட்டு வைப்பதில் தொடங்கி தனது பயத்தை வெளிப்படுத்துகிறார் அவினாஷ் திவாரி. அலுவலகத்தில் தயக்கம், சிக்கலில் இருந்து வெளிவருவதில் பின்னடைவு, தன்னால் முடியும் என அப்பாவிடம் காட்ட துடிப்பது என மகனாக வாழ்ந்திருக்கிறார். அவர்களை இணைக்க துடிக்கும் அக்கா, மகனின் காதலி என அனைத்து பெண்களின் பங்கும் குடும்பச்சூழலை தயக்கமின்றி வெளிப்படுத்துகின்றனர்.

குடும்பத்தில் அப்பா - மகனை இணைக்கும் புள்ளிகளே பெண்கள்தான் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மகன் வளர்ச்சியை காணத்துடிக்கும் தந்தை, அவனை கைவிட்டுவிடாமல் குழந்தையாய் பார்க்க துடிப்பதும், அதை எதிர்த்து நான் வளர்கிறேன் என காட்டும் மகனும் என போமன் இரானியும், அவினாஷ் திவாரியும், இரு எல்லைகளுக்குச் செல்கின்றனர்.

காரை மகன் ஓட்டினாலும், ஹேண்ட் பிரேக்கை தந்தை வைத்திருக்கும் காட்சி அதற்கு ஓர் உதாரணம். தன் மகன் வளர்ந்து விடுவான் என்ற நம்பிக்கை தந்தைக்கு ஏற்பட்டவுடன் தோன்றும் அன்பை மகனும் உணர்வதை பார்ப்பது அனைத்து தந்தைகளுக்கும் க்யூட் ஆனதுதான். நிஜமான அப்பா- மகனின் வாழ்க்கையை சினிமாத்தனமில்லாமல் ரசிக்க வைக்கிறது இந்த ‘தி மேத்தா பாய்ஸ்’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x