Published : 17 Feb 2025 04:36 PM
Last Updated : 17 Feb 2025 04:36 PM
காதலின் தீவிரத்தையும், சமகால சமூகச் சூழலையும் பின்னிப் பிணைந்து நல்ல திரை அனுபவத்தைத் தரக்கூடிய கன்னட திரைப்படத்தின் இரு பாகங்கள் குறித்த விரைவுப் பார்வை இது.
Sapta sagaradaache ello - Side A: ஹேமந்த் எம்.ராவ் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி மற்றும் ருக்மிணி வசந்த் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து 2023-ம் ஆண்டு வெளியான கனமான காதல் உணர்வை வெளிப்படுத்தும் கன்னட திரைப்படம்தான் ‘சப்த சாகரடாச்சே எல்லோர் - சைட் ஏ’. இப்படத்துக்கு சரண் ராஜ் இதயத்தை வருடும் இசையமைத்து, அத்வைத் குருமூர்த்தி கதையின் ஒவ்வொரு அசைவுக்கு உயிரூட்டிய ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது மனு மற்றும் பிரியா எனும் காதலர்களின் உன்னதமான காதல் பயணம். சிலருக்கு காதல் என்பது சின்னச் சின்ன சண்டைகள், தவறான புரிதல்கள், பிரேக்-அப், மீண்டும் பேட்ச்-அப் போன்ற தருணங்களால் நிறைந்ததாய் இருக்கும். ஆனால், மனுவுக்கோ பிரியாவின் கனவை நனவாக்குவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் உந்துதலைத் தருகிறது. காதலுக்காக சிறை வரை செல்லும் தைரியம் கொண்டவன். அவனது பயணம் காதலின் எல்லையை சோதிக்கிறது.
காதலனை தடுத்து நிறுத்த பிரியா முயல்கிறாள். ஆனால் அவளது முயற்சிகள் வீணாகி விடுகின்றன. இயக்குநர் காதலை ‘ரோஸ் கொடுத்தல்’ அல்லது ‘ப்ரொபோஸ் செய்தல்’ என்ற வழக்கமான காதல் டெம்ப்ளேட்களில் பிடித்து வைக்காமல், ஆழமான உணர்வுகளுடன் சொல்லியிருப்பது இந்தத் திரைப்படத்தின் தனித்துவம். சிறை வாழ்க்கையும், அதன் இருள் சூழ்ந்த பக்கங்களும் மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
Sapta sagaradaache ello - Side B: பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மனு (ரக்ஷித் ஷெட்டி) சிறையிலிருந்து விடுதலையாகிறார். வெளியுலகுக்கு மீண்டும் அடியெடுத்து வைக்கும் அவரின் மனதில் ஒரே எண்ணமே - ஒரு நீண்டகால காதல் தேடல். அந்தப் பயணத்தில், சுரபி (சைத்ரா ஜே. ஆச்சார்) எனும் புதுமுகம் அவனுடன் சந்திக்கிறது. மேலும், கடந்த காலத்தில் சிறையில் அறிமுகமான பிரகாஷ் என்பவரும், அவரின் வாழ்க்கைப் பாதையில் ஒரு முக்கியமான குறிக்கோளாக அமைகிறார்.
முன்னோக்கி செல்லும் அவனது முயற்சிகள், எதிர்பாராத முறையில் வாழ்க்கையை மாற்றும் திருப்பங்களை ஏற்படுத்துகின்றன. கடந்த கால நினைவுகள், எதிர்காலத்தின் கோட்பாடுகள் - இதன் இடையில் மனு சந்திக்கும் உணர்வுப் போராட்டம் என்ன என்பதை உணர்வுபூர்வமான திரைக்கதையின் மூலம் கூறியுள்ள இயக்குநரின் முயற்சிக்கு கிட்டியுள்ளது வெற்றி. இப்படமும் ப்ரைம் ஒடிடி தளத்தில் காணக் கிடைகிறது. நேரமும் சூழலும் வாய்ப்போர் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு பாகங்களையும் பார்த்து நல்ல திரை அனுபவத்தைப் பெறலாம். குறிப்பாக, இவ்விரு பாகங்களுமே உணர்வுகளைத் தாண்டி நம் வாழ்வில் முக்கிய அங்கமாக உணர்த்தும் இன்னொரு விஷயமும் உண்டு. அது... பணம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT