Published : 23 Jan 2025 04:23 PM
Last Updated : 23 Jan 2025 04:23 PM
கவ்பாய் (Cowboy) கதைகளை நம்மூர் காமிக்சில் படித்திருப்போம். அந்தகால ஹாலிவுட் படங்களில் பார்த்து ரசித்திருப்போம். செவ்விந்தியர்கள் அமெரிக்காவின் பூர்வ குடிகள் என்பதை மாற்றி பல படங்களில் வில்லன்களாக சித்தரித்திருப்பார்கள். உண்மையில், ஆக்கிரமிப்பு செய்த வெள்ளையர்களை நல்லவர்களாக காட்டியிருப்பார்கள். அதை உடைத்து இரு தரப்பிலும் நல்லோரும் அல்லோரும் உண்டு என நிரூபித்து, உண்மையான வரலாற்றுs சம்பவத்துடன் கற்பனையை கலந்து விவரித்துள்ளது இந்த 'அமெரிக்கன் பிரைம்வல்' வெப் சீரிஸ் (American Primeval Web series).
இதுவொரு பயணம் சார்ந்த கதைதான். ஆனால், அந்தப் பயணம் அக்கால அமெரிக்காவின் உண்மையான சூழலை நம் கண்முன் கொண்டுவருகிறது. மொத்தம் 6 எபிசோடுகள் உள்ளன. அதில் அமெரிக்க நிலத்தில் நடந்த வன்முறை மோதலை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அமெரிக்கப் படைகள், பூர்விக பழங்குடியினரான செவ்விந்தியர், மோர்மன் போராளிகள், குடியேறிய ஆங்கிலேயர் ஆகியோரிடையே ஏற்படும் மோதல்களைத்தான் இயக்குநர் பீட்டர் பெர்க், இந்த வெப் சீரிஸ் பயணத்தினூடே அழகாக விவரித்திருக்கிறார்.
அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவிலிருந்து, சாரா (பெட்டி கில்பின்) தனது மகன் டெவோனுடன் (ப்ரெஸ்டன் மோட்டா) தனது கணவனிடம் செல்வதற்காக புறப்படுகிறார். அவருக்கு உதவி கிடைப்பதில் ஏற்படும் சிறிய தாமதத்தால், சிரமம் ஏற்படுகிறது. அப்போது ஷோஷான் பழங்குடியினரால் வளர்க்கப்பட்ட இசாக்குக்கு (டெய்லர் கிட்ச்) உதவ முன்வருகிறார். அப்போது மோர்மன் போராளிகள், அமெரிக்க ராணுவம், பயங்கரமான பழங்குடியினர், கொள்ளையடிக்கும் கும்பல் என பயணம் செல்கிறது.
இதன் நடுவே காதலுடன் வாழும் தம்பதிகளின் பிரிவும் தேடலும் துயரமாய் நகர்கிறது. குடியேறிகளை படுகொலை செய்து மதத்தை பாதுகாக்க மோர்மன் ஆலயம் மேற்கொள்ளும் முயற்சிகளும் நடக்கிறது. இதனிடையே, பூர்வ பழங்குடியின சிறுமியும் இணைந்து கொள்கிறார். கடும் குளிர், பயணத்தின் ஒவ்வொரு அடியும் தங்களது வாழ்வை நகர்த்துவதற்காக எதிர்கொள்ள வேண்டிய வன்முறைச் சூழல் என விரிகிறது இத்தொடர்.
நிறத்தால் உயர்ந்ததாக கருதும் மனிதர்களின் உண்மை முகமும், மவுண்டன் மெடோஸ் படுகொலையும் அதிர்ச்சியை உருவாக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அச்சம்பவத்தில், ஃபிரீ காம் யங் தேவாலயமும் அதன் தலைவரும் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக புத்தகங்களில் உண்டு. அதை அடிப்படையாக வைத்து, இந்த வெப் சிரீஸை தொடங்கி இருக்கிறார் இயக்குநர். அதனுள் செவ்விந்தியர்கள் வாழ்விடங்களை அபகரிக்கும் வெள்ளையர்கள். வெள்ளையர் வாழ்விடங்களை அபகரிக்கும் தேவாலயக் குருமார்கள். கடவுள் பெயரை சொல்லி அப்போதே அமெரிக்காவில் நடந்த பல்வேறு சம்பவங்கள் என அனைத்தையும் கலந்து கட்டி நம்மை கட்டிப் போடுகிறது.
அமெரிக்காதான் மிக சிறந்த நாடு என கருதும் இக்கால தலைமுறையினருக்கு அவர்களின் உண்மை முகத்தை இந்த சீரிஸ் வெளிச்சமிட்டு காட்டுகிறது . நெட்ஃபிளிக்ஸில் தமிழ் டப்பிங் உடன் காணக் கிடைக்கிறது. 1800-களில் நடந்த அமெரிக்க வரலாற்றை அறிய உதவும் இந்த வெப் சீரிஸை தவறவிடக்கூடாது என்றாலும் மிகையல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT