Published : 20 Jan 2025 02:49 PM
Last Updated : 20 Jan 2025 02:49 PM
கரோனா காலகட்டத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த வெப் தொடர் ’பாதாள் லோக்’ (Paatal Lok). ஹதி ராம் சவுத்ரி என்ற சாதாரண போலீஸ்காரரை சுற்றி நடக்கும் இந்த த்ரில்லர் தொடர் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்தியாவிலிருந்து வெளியான மிகச் சிறந்த தொடர்களின் பட்டியலில் எப்போதும் இடம்பெற்றிருக்கும் இதன் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகியுள்ளது.
நாகலாந்து மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் டெல்லியில் ஒரு ஹோட்டல் அறையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டு கிடப்பதுடன் கதை தொடங்குகிறது. போன சீசனில் ஜூனியர் லெவல் போலீஸ் அதிகாரியாக இருந்து பின்னர் ஏசிபி ஆக பதவி உயர்வி பெற்ற இம்ரான் அன்சாரி (இஷ்வக் சிங்) இந்த வழக்கை விசாரிக்க தொடங்குகிறார். இன்னொரு பக்கம் தன் கணவனை காணவில்லை என்று ஒரு பெண் புகாரளித்ததையடுத்து அந்த வழக்கை விசாரிக்கிறார் ஹதி ராம் சவுத்ரி (ஜெய்தீப் அஹ்லாவத்). முடிச்சுகள் மெல்ல மெல்ல அவிழத் தொடங்கும்போது இந்த இரண்டு வழக்குகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. இதன் பின்னர் ஜெட் வேகம் எடுக்கும் திரைக்கதை பின்னர் எங்கு சென்று முடிந்தது என்பதை ப்ரைம் வீடியோவில் பார்க்கவும்.
இந்திய வெப் தொடர்களில் உள்ளடக்க ரீதியாக தரமானவற்றை விரல் விட்டு எண்ணிவிடலாம். கதாபாத்திர வடிவமைப்பு, திரைக்கதை, எடிட்டிங் என எல்லா வகையிலும் நேர்த்தியான படைப்பாக போற்றப்பட்ட ‘பாதாள் லோக்’ முதல் சீசனின் வழியில் எந்தக் குறைகளும் சொல்லமுடியாத வகையில் மீண்டும் ஒரு தரமான வெப் தொடராக வெளியாகியுள்ளது இந்த சீசன் 2.
நாயகன் ஹதி ராம் சவுத்ரி, இம்ரான் அன்சாரி உள்ளிட்ட வெகுசில கதாபாத்திரங்கள் தவிர முதல் சீசனுக்கும் இந்த சீசனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. முற்றிலும் ஒரு புதிய பாதையை பிடித்து அதில் நேர்த்தியாக பயணித்திருக்கின்றனர் திரைக்கதை எழுத்தாளர் சுதிர் சர்மாவும், இயக்குநர் அவினாஷ் அருணும்.
கதை முழுவதுமே கிட்டத்தட்ட நாகலாந்தில்தான் நடக்கிறது. வடகிழக்கு பகுதிகளில் நடக்கும் உள்ளரசியல், அங்கு வாழும் மக்கள், இனக்குழுக்களில் போராட்டம் போன்றவற்றை இவ்வளவு வேறு ஜனரஞ்சக படைப்புகள் பேசியிருக்குமா என்பது சந்தேகமே. ஒரு சாதாரண புகாராக தொடங்கும் ஒரு சிறிய வழக்கு மெல்ல மெல்ல ஒவ்வொரு எபிசோடிலும் மிகப் பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுப்பதை காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. முதல் சீசனைப் போல சில ‘ரா’வான விஷயங்கள் இதில் மிஸ்ஸிங் என்றாலும், இந்த சீசன் ‘பாதாள் லோக்’கின் அடிப்படையிலிருந்து எந்த இடத்திலும் நழுவவில்லை. முதல் எபிசோடிலிருந்து இறுதி எபிசோடின் கிளைமாக்ஸ் வரை எந்த இடத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக செல்கிறது.
ஜெய்தீப் அஹ்லாவத் வழக்கம்போல அட்டகாசமான நடிப்பு. முந்தைய சீசனைப் போலவே இதையும் ஒற்றை ஆளாக தாங்கிப் பிடிக்கிறார். தன்னுடைய திரை ஆளுமையில் மற்ற கதாபாத்திரங்களை பின்னுக்குத் தள்ளிவிடுகிறார். இந்த சீசனில் மற்றொரு சர்ப்ரைஸ் திலோத்தமா ஷோம். நாகலாந்தில் போலீஸ் அதிகாரியாக வரும் அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இஷ்வக் சிங், அனுராக் அரோரா ஆகியோரும் குறைகள் இல்லாத நடிப்பை வழங்கியுள்ளனர்.
தொடர் முழுக்க ரத்தம், வன்முறை, கொலை என சென்றாலும் ஆங்காங்கே முகத்தில் லேசான புன்னகையை கொண்டு வரும் காட்சிகள் ஈர்க்கின்றன. குறிப்பாக இம்ரான் அன்சாரி குறித்த ஒரு விஷயத்தை ஹதிராம் தெரிந்து கொள்ளும்போது வரும் காட்சி ஓர் உதாரணம். அதில் ஹதிராம் பேசும் வசனங்கள் அப்ளாஸ் ரகம். அதேபோல ஹதிராமின் மனைவிக்கும் தாயை இழந்த ஒரு சிறுவனுக்கும் இடையிலான பிணைப்பு எமோஷனலாக காட்சிப்படுத்தப்பட்ட விதம் சிறப்பு.
பல இடங்களில் சிஸ்டத்தை கேள்வி கேட்பதாக வைக்கப்பட்டுள்ள வசனங்கள் முகத்தில் அறைகின்றன. குறிப்பாக சிஸ்டம் ஓர் ஓட்டைப் படகு என்பதாக வரும் வசனங்கள் மற்றும் ‘நான் பாதாள லோகத்தின் நிரந்தர குடியிருப்புவாசி’ என்ற ஜெய்தீப் சொல்வது உள்ளிட்ட வசனங்கள் எப்போதும் மனதில் நிற்கக் கூடியவை. தமிழ் டப்பிங்கிலும் இவை சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.
த்ரில்லர் விரும்பிகளுக்கு முதல் சீசன் போலவே இதுவும் ஒரு நல்ல தீனி. முதல் சீசன் பார்க்காதவர்களும் கூட லேசான அறிமுகங்களை மட்டும் தெரிந்து கொண்டு தாராளமாக இதனை பார்க்கலாம். நேர்த்தியான மேக்கிங், ஷார்ப் ஆன வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட உணர்வை தருகிறது ‘பாதாள் லோக்’ சீசன் 2.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT