Published : 18 Jan 2025 09:12 PM
Last Updated : 18 Jan 2025 09:12 PM
உறக்கம் வராத சில இரவுகளில் நாம் என்ன செய்யலாம்? இரவோடு மழையும் உடனிருந்தால் மழைச் சத்தத்தைக் கேட்டபடி பொழுதை இனிதாகக் கழித்துவிடலாம். ஆனால், மழையற்று நீளும் இரவில் உறக்கம் பிடிக்காத நிலையில் நல்லதொரு புத்தகம் படிக்கக் கிடைத்தால் அது அற்புதக் கணமாகிவிடும். அல்லது வெகுநாள் பார்க்க நினைத்த படம் ஒன்றினை ஓடிடி தளத்தில் பார்க்கக் கிடைத்தால் அது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துவிடும். திரைப்படங்கள் நம்மை ஈர்க்கும் காரணம், அது தரும் பரவசம் மட்டுமல்ல, அவை நம் நினைவுகளை மீட்டும் இசைக்கருவியாக மாறுகிறது.
ஒரு திரைப்படத்தின் காட்சி எவ்வகையிலோ நமக்கு நெருக்கமாகிவிடுகையில் நமதான கற்பனைத் திரையில் வாழ்ந்து பார்க்க விழைவோம். திரைப்படங்கள் நிகழும் காலத்தின் சலனச்சாட்சியாய் உள்ளன. அவை வாழ்க்கையின் வெவ்வேறு சாத்தியங்களைத் துல்லியமாக காட்சிப்படுத்துகின்றன. பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் கோரும் படங்கள் உலகெங்கிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலுள்ள ‘அவர் லவ்வர்ஸ்’ (Our Lovers) அத்தகைய ஒரு படம். 2016-ஆம் ஆண்டில் வெளியான இந்த ஸ்பானிய மொழித் திரைப்படத்தை எழுதி இயக்கியவர் மிகேல் ஆஞ்சல் லமாடா. எடுவர்டோ நோரிகோ, மிச்செல் ஜென்னர், பெலே மார்டினெஸ், அமாயா சலாமங்கா, கபினோ டியாகோ உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
கார்லோஸ் (எடுவர்டோ நோரிகோ ) ஒரு புத்தகக் கடைக்குச் செல்கிறான். அங்கு புத்தகம் மட்டுமல்லாமல் காபி மற்றும் மது வகைகளும் கிடைக்கும். புதிதாக ஏதாவது முயற்சிக்கலாம் என்று பிராந்தி சிறிதளவு அருந்துகிறான். பெயருக்கு ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ஐரின் (மிச்செல் ஜென்னர்) அவனை சிறிது நேரமாக கவனித்துக் கொண்டிக்கிறாள். அவன் இருக்கையில் அமர்ந்ததும் அவனும் அவளைப் பார்க்கிறான். ஐரீன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவனருகில் வந்து பேசத் தொடங்குகிறாள்.
நாம் முன்பே சந்தித்து இருக்கிறோமா என்று அவன் கேட்க, இனி தெரிந்து கொள்ளலாம் என்கிறாள் ஐரீன். புதிருடன் அவன் தன் பெயரைச் சொல்ல முயல, அவனைத் தடுத்து அவனிடம் ஒரு விசித்திரமான விளையாட்டை முன்மொழிகிறாள் அவள். அதற்கான சில விதிமுறைகளையும் சொல்கிறாள். இந்த புதிர் விளையாட்டில் ஒருவர் பெயரை மற்றவர் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை, அலைபேசி எண்களை அறிந்து கொள்ள அவசியமில்லை, ஒருவர் மற்றவர் பற்றி எவ்வித கேள்விகளையும் கேட்கக் கூடாது, முக்கியமாகக் காதலில் விழுந்துவிடக் கூடாது, முதல் சந்திப்பு ஒத்துவந்தால் அடுத்தடுத்த சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்று சொல்ல, கார்லோஸுக்கு இது இன்ப அதிர்ச்சியாகிறது. உடனடியாக ஒப்புக் கொள்கிறான். இருவரும் அவரவரை அழைத்துக் கொள்ள ஒரு புனைப்பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
கார்லோஸ் ஒரு திரைக்கதை எழுத்தாளன். அவனுடன் பணியாற்றும் நண்பன் கிருஸ்டபோலிடம் அன்று நடந்தவற்றைப் பற்றி சொல்ல, தன் புதிய கதைக்கு சுவாரஸ்யமான சம்பவங்கள் கிடைத்துவிட்டது என்று கூறி தொடர்ந்து ஐரீனுடன் பழகச் சொல்கிறான். அவன் எழுத்தாளன் மற்றும் ரசனைக்காரன், அவள் தேர்ந்த வாசகி, அழகி, எனவே முதல் சந்திப்பிலேயே நெருங்கிவிடுகிறார்கள். காதல், இலக்கியம், வாழ்க்கைத் தத்துவம், சினிமா என்று பல விஷயங்களைப் பற்றி உரையாடத் தொடங்குகிறார்கள்.
கார்லோஸ் தான் நேசிக்கும் இலக்கியத்தை சரியாக படைக்க முடியாமல் தோல்வியுற்ற கலைஞனாக மனவருத்தத்தில் இருப்பதை அறிந்த ஐரீன் அவனுக்குச் சில யோசனைகளைச் சொல்கிறாள். அவனுடைய புதிய படைப்பான “சார்லஸ் ஃப்யூகோவஸ்கியும் கபோட்டியும் நரகத்தில் சந்திக்கையில்” என்ற கதையை வேறுவிதமான கோணத்தில் தொடரச் சொல்கிறாள். பூங்கா, அருங்காட்சியகம் என்று அவர்கள் இருவரும் கைகோத்து நகரைச் சுற்றத் தொடங்குகிறார்கள். நாட்களும் பொழுதுகளும் அவர்களுக்கு இனிமையாகக் கழிகின்றன.
ஒரு கட்டத்தில் கார்லோஸ், ஐரீனை முன்பே சந்தித்துள்ளதாகக் கூற, அவள் வியப்படைகிறாள். அதே காபி கடையில் அவள் முன்னாள் காதலன் ஜோர்ஜுடன் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கண்ணீருடன் கிளம்பிச் சென்றதைக் கூற, அவள் முதலில் அதிர்ச்சியுற்று பின்பு ஒப்புக் கொள்கிறாள். இருவரும் அவர்களின் கற்பனை விளையாட்டை முடித்துக் கொண்டு எதார்த்தத்துக்கு தரை இறங்கி வருகிறார்கள். மெல்லிய மன நெருக்கம் ஏற்பட்டு காதலில் விழுகிறார்கள். ஆனால், கடந்த கால பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக அவர்கள் வெளிவந்திருக்கவில்லை.
கவிஞனான ஜோர்ஜ், ஐரினை இரண்டு முறை பிரிந்து சென்று அவளை காயப்படுத்தியவன். மூன்றாம் முறையும் அவன் அவளைப் பிரிந்த அந்த நாளில்தான் கார்லோஸை சந்திக்கிறாள். தன்னுடைய துயரை மறக்கவே அவனிடம் பேசத் தொடங்கியிருந்தாள். கார்லோஸுக்கும் ஒரு பிரச்சினை இருந்தது. எட்டு ஆண்டுகள் காதலித்து மணந்த அவனுடைய மனைவி மாரியா காரணம் எதுவும் சொல்லாமல் அவனை இரண்டு மாதங்கள் வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியிருக்கிறாள். தங்களின் மகளுக்காகவேனும் சேர்ந்து வாழலாம் என்று அவன் வற்புறுத்திக் கேட்க, மாரியா அவனுடனான அலுத்துப் போன வாழ்க்கையைத் தொடர விரும்பவில்லை என்று சொல்லிப் பிடிவாதமாகப் பிரிகிறாள்.
ஐரீனை ஏன் ஜோர்ஜ் பிரிந்தான் என்பதையும், ஐரீனை கார்லோஸுடன் பார்த்து அவனை திரும்ப வரும்படி அழைத்த மாரியாவுடன் அவன் மீண்டும் இணைந்தானா என்பதையும் மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையில் கூறியிருக்கிறார் இயக்குநர். மனித உணர்வுகளிலேயே மிகவும் தீவிரமானது காதல், கோபம் மற்றும் அச்சம். இவ்வுணர்வுகளை மிகச் சிறப்பாகக் காட்சியளித்த படம் ‘அவர் லவ்வர்ஸ்’. துரோகம், இழப்பு, துயரார்ந்த நினைவுகள், விரைந்தோடும் காலம், தனிமை இவையெல்லாம் இப்படத்தின் உள்ளடுக்குகள்.
நவீன வாழ்க்கைமுறையில் ஆண் மற்றும் பெண் எதிர்ப்பாலின ஈர்ப்பு அல்லது புரிந்துணர முடியாத ஏதோவொரு காரணத்தால் காதல் மற்றும் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் சில காலத்திலேயே அவர்களுக்கு அவ்வுறவு சலித்துவிடுகிறது. தீவிரமான காதல் ஒருவர் மற்றவரை நன்கறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நிகழும். மேலும் நம்பிக்கையுடன் முழுமையாக தங்களை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டும். கதை மாந்தர்களின் உரையாடல்கள் மூலம் ஆண், பெண் உறவைப் பற்றி ஆழமாக அலசும் மற்றுமொரு திரைப்படம் இது எனலாம்.
இப்படத்தில் அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தனர். ரசனையான, புத்திசாலித்தனமான உரையாடல்கள் படத்தின் தரத்தை அதிகரித்துள்ளது. நவீன காபி கடைகள், புத்தகக் கடைகள், நீண்ட தெருக்கள், இயற்கை எழில்மிக்க பூங்காக்கள் போன்ற இடங்களில் காட்சிகள் ரம்மியமாக கலைநேர்த்தியுடன் படமாக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படம் ‘Before Sunrise’ உள்ளிட்ட சில திரைப்படங்களை நினைவூட்டினாலும் கதை சொல்லும் முறையிலும், காட்சியமைப்புகளாலும் ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டுக்களையும் பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT