சிக்கலில் 2 சிட்டுகள்! - ‘பாராசூட்’ வெப் சீரிஸ் விரைவுப் பார்வை


சிக்கலில் 2 சிட்டுகள்! - ‘பாராசூட்’ வெப் சீரிஸ் விரைவுப் பார்வை

இரண்டு முக்கிய சம்பவங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் எதிர்பாரா புள்ளியிலிருந்து சூடுபிடிக்கிறது ‘பாராசூட்’ இணையத் தொடரின் கதை. டிஸ்னி ஹாட் ஸ்டாரின் தமிழ் ஒரிஜினல் வரிசையில் வெளியாகியிருக்கும் இத்தொடரின் உருவாக்கத் தரம், திரைக்கதை, அது பெற்றோர்களுக்குத் தரும் செய்தி, நடிகர்களின் பங்களிப்பு, ஒளிப்பதிவு, இசை என அனைத்து அம்சங்களிலும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. குறிப்பாகச் சிறார் நடிகர்களை இயக்குநர் ராசு ரஞ்சித் பயன்படுத்தியிருக்கும் விதத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.

எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் தொழிலாளியான சண்முகம் (கிஷோர்), குறைந்த வருவாய்க்கு நடுவிலும் தனது 11 வயது மகன் வருணையும் (சக்தி) 7 வயது மகள் ருத்ராவை (இயல்) தனியார்ப் பள்ளியில் படிக்க வைக்கிறார். பிள்ளைகளை அடித்து வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சண்முகம் உருவாக்கும் அழுத்தம், குழந்தைகளின் செயலில் வெளிப்படுகிறது.

அப்பாவின் எக்ஸெல் மோட்டர் சைக்கிளில் தங்கையை ஏற்றிக்கொண்டு பறக்கிறான் வருண். பயண வழியில் ஒரு விலையுயர்ந்த இறக்குமதி மோட்டார் சைக்கிள் திருடப்படும் சம்பவத்துக்குள் இக்குழந்தைகள் எப்படி சம்பந்தப்படுகிறார்கள், தொலைந்து போன அவர்களைப் பெற்றோர்களும் காவல் துறையும் மீட்டெடுத்தார்களா என்பதை விவரிக்கும் திரைக்கதை, பாராசூட்டை விட வேகமாகப் படபடத்துப் பறக்கிறது யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ஓம் நாராயணனின் ஒளிப்பதிவும் திரை அனுபவத்துக்குள் மூழ்கடிக்கின்றன.

FOLLOW US

WRITE A COMMENT

x