The Zone of Interest: ஆஷ்விட்ஸ் வதை முகாம் அருகே ஒரு சொர்க்கம் | ஓடிடி திரை அலசல்


The Zone of Interest: ஆஷ்விட்ஸ் வதை முகாம் அருகே ஒரு சொர்க்கம் | ஓடிடி திரை அலசல்

சோன் ஆப் இன்ட்ரஸ்ட் (The Zone of Interest) ஆங்கிலம் அல்லாத பிரிட்டிஷ் சினிமாவின் முதல் படம் என்ற வகையில் சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பெற்ற படம். வழக்கமான இரண்டாம் உலகப் போர் கதைதானே என்று சாதாரணமாக கருதிவிடமுடியாத படம் இது. என்றாலும் பார்வையாளனோடு மிகவும் நெருக்கமாக ஒன்ற வைக்கும் வகையில் திரைப்படத்தின் காட்சிகள் பலவற்றையும் வித்தியாசமாகவே அமைந்துள்ளார் இயக்குநர் ஜோனாதன் கிளேசர். இப்படத்தின் காட்சிகளில் உதாரணத்துக்கு ஒன்று...

பின்கட்டு கதவுகளை மூடி அங்குள்ள கூடத்தில் விளக்குகளை அணைத்து கடைசி அறைக் கவை மூடி விளக்கை அணைத்துவிட்டு நெடிய வராந்தாவிற்கு வந்து இந்தப் பக்கமும் ஒரு அறை அந்தப் பக்கமும் ஒரு அறை அந்தப் பக்கமும் ஒரு அறை அவற்றையும் விளக்கை அணைத்து கதவை மூடிக்கொண்டு வராந்தாவில் உள்ள விளக்கையும் அணைத்துவிட்டு அதற்கு அடுத்து பெரிய ஹாலுக்கு வந்து அதன் விளக்கையும் அணைத்து அதன் அத்தனை அறைகளையும் மூடி விளக்குகளை அணைத்துவிட்டு, நடை அல்ல ரேழியில் நடந்து வந்து பக்கவாட்டில் உள்ள ஒரு விளக்கையும் அணைத்துவிட்டு...

‘நிறுத்துங்க... மெய்யழகன் படத்தின் முன்பாதி தொடக்கத்தில் உள்ள காட்சியை சொல்கிறீர்களா? நீங்கள் சொல்ல வந்தது சோன் ஆப் இன்ட்ரஸ்ட் படத்தில் வரும் காட்சி என்பது நினைவிருக்கட்டும்’ என்று சொல்வது புரிகிறது. சற்று பொறுங்கள்... மெய்யழகனில் தொடக்கத்தில் வரும் இத்தகைய ஒரு காட்சி ஒரே ஒரு வித்தியாசமாக சோன் ஆப் இன்ட்ரஸ்ட் படத்தின் பின்பாதி தொடக்கத்தில் வரும் அவ்வளவுதான்.

அப்படியென்றால் மெய்யழகனும் (2024), சோன் ஆப் இன்ட்ரஸ்ட் (2023) படங்களை ஒரே மாதிரியானவையா? இல்லை, இல்லை அது அப்படியில்லை. மெய்யழகன் ஹீரோ தன் வீட்டு மாடியில் வரும் கிளிகளுக்கெலலாம் உணவளித்து அவை வயிறார உண்டு அவை வானைநோக்கி பறந்துசெல்வதை பார்த்து மனம் மகிழ்பவன். கிட்டத்தட்ட வண்ணதாசன் கதைகளில் வரும் நல்ல மனம் படைத்த மனிதர்களைப் போல. ஆனால் சோன் ஆப் இன்ட்ரஸ்ட் இல் இடம்பெறும் ஹீரோ ஆஷ்விட்ஸ் (auschwitz) வதை முகாமை உருவாக்கியவன். லட்சக்கணக்கானவர்களை கொன்றொழிப்பதில் தன் திறமையை வெளிப்படுத்தியவன். இதற்கு பாராட்டு தெரிவிக்கும்விதமாக ஆஷ்விட்ஸ்க்கு அடுத்த வதைமுகாம் ஒன்றிற்கு சென்று அங்கு 700,000 லட்சம் ஹங்கேரியர்களை கொல்வதற்கான நடவடிக்கையை 'ஹோஸ் ஆபரேஷன்' என்றே அவனது பெயரிலேயே ஜெர்மனி அழைக்கிறது என்றால் என்னவகையான டெர்ரர் மனஇயல்பு இந்த மனிதனுக்கு என யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஆஷ்விட்ஸ் முகாமை உருவாக்கி ஹிட்லரின் நன்மதிப்பைப் பெற்று சாதாரண தளபதியாக இருந்தவன் மேலும் வேறு முகாம்களை உருவாக்கவும் லட்சக்கணக்கானவர்களை கொன்றொழிக்கவும் டெபுட்டி இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு அமைந்த ஒரு மனிதனைத்தான் இப்படத்தின் நாயகனாக இயக்குநர் வடித்திருப்பதால் ரத்தம் தெறிக்குமே என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. இரண்டாம் உலகப்போர் தொடர்பாக பியானிஸ்ட், லைப் இஸ் பியூட்டிபுல், அன்னி பிராங்க், கட்டின், ஃபேட்லெஸ், போன்ற படங்கள் பதைபதைக்கும் காட்சிகளைக் கொண்டவை.

இப்படத்திலோ பூந்தோட்டம், இளந்தென்றல், நதிக்கரையில் வீற்றிருக்கும் பசியமரங்களின் அழகு, சில்லென்ற மழைத்தூறல் என மாறுபட்டு வந்திருக்கிறது. ஸோன் ஆப் இன்ட்ரஸ்ட் திரைப்படம் ஒருவகையான அச்சுறுத்தும் ஈனஸ்வரமான இசைக்கோர்வையின் சுருதியோடு தொடங்குவதே ஒரு இருட்டான திரையை முன்னிறுத்திதான். கிட்டத்தட்ட இரண்டரை நிமிடம் மனதில் ஒருவித அச்சத்தைத் தோற்றுவிக்கும் அத்தகைய இசையோடு கறுப்புத்திரை நம்மெதிரே தோன்றுகிறது.

இப்படியொரு படத்தை எடுத்ததற்காக என்னை மன்னித்துவிடுங்கள் என நீடித்த நிமிடங்களில் கருப்புத்திரை வாயிலாக, கோருகிறாரா இயக்குநர் எனத் தெரியவில்லை. எனினும், உயிரிழந்த ஆத்மாக்களுக்கான அஞ்சலியாக அந்தக் கருப்புத்திரையை நாம் புரிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அதைத் தொடர்ந்து பறவைகளின் ஓசையுடன் கருப்புத்திரை நிறைவடைய அதைத் தொடர்ந்து வரும் படத்தின் முதல் காட்சியில் ஆற்றில் குடும்பத்தோடு நீந்தி விளையாடும் காட்சி... பறவைகளின் ஓசை மட்டும்தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

ஸோன் ஆப் இன்ட்ரஸ்ட் படத்தின் பின்னணி ஓசைகளுக்காகவே ஆஸ்கர் அளிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு சொல்ல வேண்டியுள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படம், மற்றும் சவுன்ட் ஆகிய பிரிவுகளில் இரண்டு ஆஸ்கர்களை வென்ற படம் இது. இவை தவிர, கிராண்ட் பிரிக்ஸ் உள்ளிட்டு உலகின் எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது இப்படம்.

ஆஷ்விட்ஸ் வதைமுகாமில் மனிதர்களை நாஜி அதிகாரிகள் என்னஎன்னவெல்லாம் செய்து துன்புறுத்துகிறார்கள் என்பதை நாம் காண இயலாது. ஏனெனில் படம் நடப்பது அதன் அருகான ஒரு வீட்டில். ஆனால் பின்னணி ஓசைகளை வைத்து அங்கு நடப்பதை நாம் ஊகித்துக்கொள்கிறோம். யூதர்களை, இட்லர் அதிருப்தியாளர்களை என்று அழைத்துவரப்பட்ட கைதிகளை எரிக்கும் மெஷினின் சத்தம், நாஜிக்களால் கொடூரமாக நடத்தப்படும் அந்தக் கைதிகளின் அலறல் மிகவும் சன்னமாக, ஆட்களை சுட்டுக்கொல்லும் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு சத்தம். இது படம் முழுவதும் தொடர்கிறது, ஆனால் இந்த வீட்டிற்குள் வசிப்பவர்கள் பணியாட்கள், விருந்தினர்கள் என பலரும் ஆளாளுக்கு பல்வேறு வேலைகள். கிட்டத்தட்ட 17 பேர் அவர்கள் யாவரும் மதிலுக்கு பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த கவலை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

ஹிட்லரின் நன்மதிப்பைப் பெற்ற இந்த கமாணடர் ருடால்ப் ஹோஸ் வாழ்க்கை குறித்த திரைக்கதையின் போக்கில் எந்தவித மாறுபாடும் அல்ல; அது இயல்பாக இருக்கிறது. அந்த இயல்புதான் நமக்கு எரிச்சலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இத்திரைப்படம் தனது தனித்த பாணியிலான கதைசொல்லல் முறை ஒரு பெரிய சலனத்தை ஏற்படுத்திவிட்டது. போரின் கொடூரத்தை பரிசோதனை முயற்சியில் சொல்லக்கூடிய படங்களை அவந்த் கார்டே மூவ்மென்ட் படங்கள் என்கிறார்கள்.

1920-க்கு பிறகு உருவானது இந்த சினிமா இயக்கம். எது எப்படியோ பக்கத்து தெருவில் சாவு விழுந்தால் கூட நமக்கெல்லாம் சாப்பாடு கூட இறங்காது. என்னவோ ஒரு மாதிரியாக இருப்பதுண்டு. ஆனால் பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் சிறு நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடி, தோட்டத்தைப் பராமரித்து பொழுதை கழித்தபடி வாழ்பவர்கள் ஆஷ்விட்ஸ் முகாமில் லட்சக்கணக்கானவர்களை கொன்று எரியூட்டிய தீயின் அந்த புகை வாசனையில் உணவை எடுத்து உண்டு... இப்படித்தான் போகிறது அவர்கள் வாழ்க்கை...

படத்தில் Mica Levi அமைத்த இசை என்று எடுத்துக்கொண்டால்.... மொத்த படத்திலும் முதலில் கருப்புத்திரையின்போது இசைக்கப்படுகிறது, இரண்டாவதாக குழந்தையின் கனவுக் காட்சிபோலத் தோன்றும் ஒரு காட்சியில் அது கனவல்ல, அக்குழந்தை சுடுகாடு போன்ற ஒரு பகுதிக்குச் சென்று தோட்டத்திற்கு உரம் போடுவதற்காக கொட்டிக்கிடக்கும் பிணச் சாம்பலை பையில் அள்ளி வருகிறாள்.

அவள் சாம்பல் குவியல்களுக்கு அருகே ரயில்வே ட்ராக் பகுதியில் நடந்துவந்து நிறுத்தியிருக்கும் சைக்கிளில் வீட்டுக்கு திரும்புவதுபோன்ற ஒன்று அந்த ஈனஸ்வர வயிற்றைக்கலக்கும் இசை, மூன்றாவதாக, படம் முடிவதற்கு முன்பாக... காட்டப்படும்காட்சியில் இன்னொரு முகாமில் குவிக்கப்பட்டுள்ள கொல்லப்பட்டவர்களின் உடைமைகளை காட்டும்போது... என மூன்று இடங்களில் மட்டும்தான் இசை வருகிறது. ஆனால் இந்த மூன்று இசையும்கூட ஒரு ஈனஸ்வரத்தில் அச்சுறுத்தும்விதமாக நம்வயிற்றில் புளியைக் கரைக்கும் ஒருவகை இசைக்கோர்வைதான்.

மற்றபடி படம் முழுவதும் பறவை சத்தம், துப்பாக்கி சுடும் சத்தம், நாய்க்குரைப்பு, ஆந்தை அலறல், யூதர்களை வதைமுகாமிற்கு ஏற்றி வரும் ரயிலின் ஓசை.. என அதன் இயற்கை பின்னணி ஓசையாகவே இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் ஒரிஜினல் லொக்கேஷனில்தான் படமாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படத்தின் சிறப்பு. கமாணடர் ருடால்ப் ஹோஸ் குடும்பம் வாழ்ந்ததாகக் காட்டப்படும் இடமும் அதே இடம்தான். தற்போது ஆஷ்விட்ஸ் முகாம் போலவே அவர்கள் வீடும் தோட்டமும் பார்வையாளர்களுக்காக அருங்காட்சியகமாக மாறியுள்ளது. மக்கள் பார்வையிட்டு வருகிற இடம் அது.

இப்படத்திற்காக அந்த இடத்திற்கே ஓராண்டு சென்று அப்பகுதியில் தங்கியிருந்து சுற்றிலும் உள்ள பல இடங்களுக்கும் சுற்றிப்பார்த்து ஆய்வு செய்து பல்வேறு ஓசைகளை பதிவுசெய்துகொண்டுள்ளார் இயக்குநர் கிளேசர். இப்படத்தின் ஒலிப்பதிவு முழுக்க இயக்குநரின் அளப்பரிய களப்பணியில் பெற்ற நுண்ணிய கவனிப்பிலிருந்து உருவானவை ஆகும்.

வேறு ஒரு தருணத்தில் தனது குழந்தைகளை ஆற்றுக்கு குளிக்க அழைத்துச்சென்று நீராடிக்கொண்டிருக்கும்போது கையில் ஒரு மனித சிதைவு தட்டுப்பட்ட உடன் குழந்தைகளை இழுத்துக்கொண்டு, அங்கிருந்து மழையில் நனைந்துகொண்டு படகில்அழைத்து திரும்பி வீட்டுக்கு ஓடிவந்து அனைவரையும் மருந்துகள் போட்டு தானும் குளித்து மீளும் காட்சியில், 'மனித எச்சங்களின் பாதிப்பு வெறும் தொடுதலிலேயே இவர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சி ஒவ்வாமை ஏற்படுகிறது' என்று இயக்குநர் நமக்கு கோடிட்டு காட்டும் இடம் அது.

ஒலிப்பதிவுக்கு இணையானது இப்படத்தில் Lukasz Zal ஒளிப்பதிவு. ஆஷ்விட்ஸ் தோட்ட வீட்டின் அழகுகளை அந்த பழங்கால வீட்டின் கட்டிட கலையழகை, ஓடிச்செல்லும் நதியைக் காட்டுவதில் மழைக்காட்சிகளில் மிளிர்கிறது சூழல்அழகுகளின் அவரது எளிய ஒளிப்பதிவு.

வதை முகாம் உயரதிகாரி கமாண்டர் ருடால்ஃப் ஹோஸ் பாத்திரம் ஏற்று நடித்துள்ள James Wilson நடிகரும் பாடகரும் ஆவார். white ribbon படத்தில் அறிமுகமாகி ஏராளமான ஜெர்மன் படங்களில் நடித்தவர். முக்கியமாக ஹிட்லர் காலத்திலேயே அவரது போர்தாக்குதல்களை எதிர்த்து களமிறங்கிய எல்சர் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக அவர் நடித்ததற்காக ஜெர்மனி மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். இப்படத்தில் ஜேம்ஸ் வில்சன் தோற்றம் உண்மையான ருடால்ப் போலவே அமைந்தது உச்சபட்ச ஆச்சரியம்.

ஸோன் ஆப் இன்ட்ரஸ்ட் படத்தில் ஓர் உயரதிகாரி எவ்வளவு மென்மையாக தனது குடும்பதினருடன் செலவிடுவார்... தனது மனைவியுடன் அன்பொழுக பழகுவார் வேலைக்காரர்களுடன் சப்ஆர்ட்டினேட்களுடன் எவ்வாறு கண்ணியமாக சொற்களை கையாள்வார் என்பதை பார்த்துப் பார்த்து செதுக்கியுள்ளார் இயக்குநர். உயரதிகாரி ருடால்ப் ஒவ்வொரு நாளும் வதை முகாம்களுக்கு குழந்தைகளிடம் மனைவியிடம் டாடா காட்டிவிட்டு குதிரையில் செல்வது அவர்களுக்கு இரவு தூங்கும் நேரக் கதைகளைச் சொல்வது, குதிரை சவாரிக்கு அழைத்துச் செல்வது, மேய்ச்சல் வேலைகளில் ஈடுபடுவது, எல்லோரிடமும் ஸ்மார்ட்டாக நடந்துகொள்வது என வெகு இயல்பாக நடித்துள்ளார்.

மனைவி ஹெட்விக்காக நடித்துள்ள Sandra Hüller அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். Anatomy of a Fall படத்தில் சிறந்த நடிக்கைகாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.

Sandra Huller இப்படத்தில் Anatomy of a Fall படத்தின் நடிப்போடு ஒப்பிடும்போது இரண்டாவதுஇடத்தில் தான் இருக்கிறது என்றாலும் அவரது presence ஸோன் ஆப் இன்ட்ரஸ்ட் படத்தின் மைய இழையாக ஊடுருவி பாய்கிறது. வீட்டில் நிறைய வேலைக்கார பெண்மணிகள் இருந்தாலும் 5 குழந்தைகளின் தாய் என்றே நினைக்காமல் அந்த அகண்ட வீட்டின் எல்லாப்புறங்களிலும் ஓடியாடி எப்போதும் சுறுசுறுப்பாக வீட்டுப் பணிகளை மேற்கொள்வது, குழந்தைகளை பராமரிப்பது, தோட்டத்தில் அழகான மலர்ச்செடிகளை வளர்த்து தனது கைக்குழந்தையை அங்கே சென்று அத்தனை மலர்களின் பெயர்களைச் சொல்லி குழந்தையை அருகில் சென்று காட்டுவது என இல்லத்தரசியின் அக்கறையுடன் ஹெட்விக் என்ற பாத்திரத்தில் தோன்றுகிறார் சான்ட்ரா ஹல்லர்.

தனது தாய் விருந்தினராக வந்திருந்தபோது அவரை அழைத்துச்சென்று தோட்டத்தில் விளைந்துள்ள பல்வேறு காய்கனிகளின் பெயர்களைச் சொல்லி அவற்றை தான் எப்படியெல்லாம் வளர்க்கிறேன் என்று சொல்வதோடு இது என்னைப்பொறுத்தவரையில் இது கடவுளின் தோட்டம்தான் என்கிறார். இந்த இடத்தில் இருந்துகொண்டு எப்படி இப்படியெல்லாம் பேசமுடிகிறது என்று தோன்றும் நமது பொறுமைஉணர்ச்சியை உலுக்கிப்பார்க்கும் உணர்வோடு அவரது நடிப்பு அமைந்திருக்கும்.

இப்படத்தில் ஆஷ்விட்ஸ் தலைவரான உயரதிகாரியான ருடால்ப் ஹோஸ்க்கு திடீரென பதவி உயர்வு இடமாறுதல் அறிவிப்பு வரும். இந்த தகவலை அறிந்ததும் மனைவியுடன் எப்படி சொல்வது என நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். தோட்டத்தில் குழந்தைகளின் விளையாட்டில் மூழ்கிய தருணங்களில் மனைவி ஹெட்விக்கை தனியே தோட்டத்தின் இன்னொரு பகுதிக்கு யாருமற்ற இடத்தில் அமர்ந்து அவருடன் தனது பணிமாறுதல் குறித்து பகிர்ந்துகொள்கிறார்.... அந்த மாறுதலை அவர் ஏற்கக் கூடாது என Sandra Hüller வாதிடும் மிக மிக முக்கியமானது.

ஹோஸ் தனது மனைவியுடன் விவாதம் செய்யஇயலாத நிலையில் வீட்டின் கொல்லைப்புற தோட்டத்திலிருந்து வெளியேறி ஆற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருக்க நீரின் ஒரு கரையின் அருகே தண்ணீரில் மிதவைப் பலகையில் இருவரும் வந்து நின்றபடி அவர்கள் விவாதம் கடும் சலசலப்பை ஏற்படுத்தும். ''நம்ம வீட்டு தோட்டத்தை நான் உருவாக்கிய விதம்... அதில் நமது குழந்தைகளின் உலகம்... எனது உலகம்.. இவற்றை நினைத்துப் பாருங்கள்...

இதுமாதிரி வேறு எங்குமே அமையப்போவதில்லை. இது ஒருவகையில் எனக்கு சொர்க்கம் மாதிரி... என் ஆர்வத்திற்குரிய ஒரு இடம் இது... (ஆர்வத்திற்குரிய மண்டலம்: The Zone of Interest) இதை விட்டுவிட்டு உங்களோடு பெர்லின் அருகே ஓரனியன்பர்க் முகாமிற்கு வரச்சொல்கிறீர்கள்... என்னால் முடியாது. ஹோஸ் நான் உங்களை மிஸ் செய்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்'' என்று கதறிவிட்டு அவர் அங்கிருந்து வீடு திரும்பிவிடுவார். அவர்கள் நடந்துவரும் இடமெல்லாம் ஆஷ்விட்ஸ் முகாமின் மதில் பகுதியை ஒட்டிய பிரதான சாலையாக இருக்கும்.

உலகையே கொன்று குவிக்கும் இடத்திற்கு அருகில் இந்த பெண் அமைத்த தோட்டம் சொர்க்கம் என்று சொல்வது மிகவும் வினோதமான ஒன்று. ஒருவகையில் அது உண்மைதான். உயரதிகாரிகளின் மனைவிமார்கள் பலரும் இப்படிப்பட்ட தங்கள் அரசு அலுவலகங்கள் வழங்கியுள்ள ஆடம்பரமான பல குடியிருப்புகளின் தோட்டங்களில் உலா வருவதும் உறவினர்களை அழைத்து தனது தோட்டத்தில் விளையும் காய்கனிகளைப் பற்றி பெருமையாக பேசுவதும் என்னவோ இயற்கையான ஒன்றுதான். இப்படத்தில் இங்கு நாம் பகிரும் காட்சிகள் ஒன்றிரண்டைத் தவிர ஏராளமான காட்சிகள் அமைந்துள்ளன. அவை பார்வையாளருடன் மிகப்பெரிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளக் கூடியவை.

ஆனால் எண்ணற்ற எவ்வளவு காட்சிகள் என்றாலும் நமக்கு இப்படத்தில் மீட்சியே இல்லையோ என்றுதான் தோன்றிவிடுகிறது. ஆனால் அதை தகர்க்கும் இடமும் படத்தில் வருகிறது. அதுதான் இப்படத்தை வேறொரு உயரத்திற்கு கொண்டுசெல்கிறது. ஆஷ்விட்ஸ் அதிகாரிக்கு 5 குழந்தைகள். அதில் கைக்குழந்தைக்கு அடுத்ததாக உள்ள சிறுவன் வீட்டில் தனியே தாயம்போன்ற புள்ளிவைத்த காய்களை வைத்து ஏதோ விளையாடிக்கொண்டிருப்பான். அந்த நேரத்தில் உயிரை உருக்கும் கதறல் சத்தம் இவனுக்குக் கேட்கும். இவனால் அந்த ஆட்டத்தை ஒழுங்காக விளையாடமுடியாது... மீண்டும் கவனத்தை செலுத்த முற்பட மீண்டும் இன்னொரு அலறல் சத்தம்... அடுத்தடுத்து உயிரை இழக்க நேரும் அலறல் சத்தங்களின் அணிவகுப்பு... தன் கையில் இருந்த விளையட்டு காய்களை போட்டுவிட்டு சன்னலில் வந்து ஸ்கிரீனை விலக்கி அவன் சற்று தொலைவில் எதோ ஒரு காட்சியை காண்பான்!

உண்மையில் அந்தக் காட்சி கூட நமக்கு காட்டப்படாது. அந்த கொடூரத்தைக் கண்டவாறே அவன் சொல்வான்... “தயவுசெய்து இன்னொரு முறை இப்படி செய்யவேண்டாம்.'' -- உண்மையில் அந்த கோரிக்கை அவனுக்கே கேட்டதா என்பது சந்தேகம்தான். இப்படம் அமேஸான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x