Sector 36 - உலுக்கிய உண்மைச் சம்பவமும், உறைய வைக்கும் த்ரில் அனுபவமும் | ஓடிடி திரை அலசல்


Sector 36 - உலுக்கிய உண்மைச் சம்பவமும், உறைய வைக்கும் த்ரில் அனுபவமும் | ஓடிடி திரை அலசல்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் டெல்லியின் குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அந்தக் குழந்தைகள் எங்கே சென்றனர், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் ‘செக்டர் 36’ (Sector 36) திரைப்படத்தின் ஒன்லைன்.

2005-06 உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். பொதையன் ராய் சவுத்ரி எழுதி, ஆதித்யா நிம்பல்கர் படத்தை இயக்கியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் உறையச் செய்த தொடர் கொலை வழக்கை ஆதித்யா நிம்பல்கர் டீல் செய்திருக்கும் விதம் அசர வைக்கிறது. 2006-ல் துவங்கி 2023 வரை, 17 வருடங்களாக நீதி தேவதையின் தராசில் மேலும் கீழுமாய் அசைந்தாடிய ஒரு வழக்கை 123 நிமிட திரைப்படமாக்கிய விதம் நேர்த்தி. உண்மைச் சம்பவம் என்பதால் ஆயிரம் ஆயிரம் கிளைக் கதைகள், செய்திப் பதிவுகள் இருந்தாலும், மெயின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு நெடியேறாத கற்பனைகளைத் தூவி மிரளச் செய்திருக்கிறார் இயக்குநர். படத்தின் மேக்கிங் ஸ்டைலிலும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார்.

டெல்லியின் செக்டர் 36-ல் உள்ள தொழிலதிபர் பஸ்ஸியின் (ஆகாஷ் குரானா) வீட்டின் பணியாளர் பிரேம் சிங் (விக்ராந்த் மாஸே). இவர் டிவியில் ஒளிபரப்பாகும் குரோர்பதி நிகழ்ச்சியின் மிகத் தீவிரமான ரசிகர். தனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் ஒரு கோடியை வெல்லும் முனைப்பு கொண்டவர். அதேசமயம் அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளைக் கடத்தி வந்து மிக கொடூரமான முறையில் கொலை செய்யும் இரக்கமில்லாத மனநோயாளி. கொலை செய்யப்பட்டவர்களின் உடலுறுப்புகளை விற்கவும் செய்கிறார்.

இந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் ஊழல் காவல்துறை அதிகாரி ராம் சரண் பாண்டே (தீபக் தொப்ரியால்). குழந்தைகள் காணாமல் போனதாக புகாரளிக்க வருபவர்களை உதாசீனப்படுத்துவதோடு, லஞ்சமாக தான் வாங்கிய தொகையில் கொஞ்சத்தைக் பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் திணித்து வாயடைக்க செய்து விடுகிறார். இதனிடையே ஒருநாள் ராம்சரண் பாண்டேவின் மகளை கடத்த முயற்சி நடக்கிறது. ராம்சரண் பாண்டே மகளை காப்பாற்றினாரா? கொலையாளியை கைது செய்தாரா? உயர் அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனரா, இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.

பிரேம் சிங் கதாப்பாத்திரத்தில் விக்ராந்த் மாஸே கலங்கடித்திருக்கிறார். காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்கும் காட்சி அதற்கு சான்று. படம் முழுக்கவே அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது. தீபக் தொப்ரியால் ஊழல் கறைபடிந்த காவல் துறை அதிகாரியாகவும், ஒரு பெண் குழந்தையின் தந்தையாகவும் வரும் தனது கதாப்பாத்திரத்துக்கு மிகசிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார். இவர்கள் இருவரைத் தாண்டி படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்டர்ஸ்களும் படத்தை கவனிக்க வைக்கின்றனர்.

படத்தின் ஒளிப்பதிவாளர் சவுரப் கோஸ்வாமி, பின்னணி இசையமைப்பாளர் கேத்தன் சோதா, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அடங்கிய டெக்னிக்கல் டீம் இந்தப் படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கின்றனர். நீதிக்கான தேடலில் எளிய மக்களின் கடைசி புகலிடம் அவர்களுக்கு வழங்கும் முடிவை சமரசமின்றி காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் இயக்குநர் ஆதித்யா நிம்பல்கர் ஈர்த்திருக்கிறார். குழந்தைகள் மீது அதீத அன்புடையோர், இளகிய மனம் படைத்தோர், வன்முறைக் காட்சிகளை விரும்பாதவர்கள் இப்படத்தை தவிர்ப்பது நல்லது. தமிழ் டப்பிங் உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

நிதாரியில் உண்மையில் என்ன நடந்தது? - கடந்த 2006-ல், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்த நிதாரியில் ரிம்பா ஹல்தர் 14 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த விசாரணையில் மொணீந்தர் சிங் பாந்தர் என்ற தொழிலதிபரும், அவருடைய வீட்டுப் பணியாளர் சுரேந்தர் கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் வசித்த, நொய்டாவின் செக்டர் 31, டி5 என்ற வீட்டின் அருகே மேற்கொண்ட சோதனையில் சில மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. சுரேந்தர் கோலி சிறுமிகளை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களைக் கொன்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவருக்கு மனித மாமிசம் உண்ணும் பழக்கம் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில் கடத்தி வரப்பட்ட சிறுமிகளை மொணீந்தர் சிங் பாந்தரின் வீட்டில் வைத்து சுரேந்தர் கோலி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் சிபிஐ 2007-ல் 19 வழக்குகளைப் பதிவு செய்தது. சிபிஐ காவலில் எடுத்து விசாரித்த போது தோண்டியெடுக்கப்பட்ட 17 எலும்புக்கூடுகளில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 10 பேரின் உடல்களை சுரேந்தர் சிங் புகைப்படங்களை வைத்து அடையாளம் காட்டினான். 5 குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் அடையாளம் காட்டினர். காணாமல் போன குழந்தைகள் குறித்த புகாரை ஏற்க மறுத்தும், உரிய விசாரணை நடத்தாத காவல்துறையைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அரசு சார்பில் நால்வர் குழுவை அமைத்து அப்போதைய முதல்வர் முலாயம் சிங் உத்தரவிட்டார்.

நால்வர் குழுவின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட 17 பேரில் 10-க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள் என்பதும், ஒரு சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. டிஎன்ஏ பரிசோதனையின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இக்குழுவின் பரிந்துரையின் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு எஸ்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 6 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல், தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரிதினும் அரிதான சிறுமி ரிம்பா ஹல்தர் கொலை வழக்கில் 2009-ம் ஆண்டு பிப்.13ம் தேதி இருவருக்கும் மரண தண்டனை விதித்து காஸியாபாத் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மேலும் சில சிறுவர், சிறுமிகளின் வழக்குகளின் அடிப்படையில், 2010 மே 4ம் தேதி, 2010 செப்.27ம் தேதி, 2010 டிச.22ம் தேதி மற்றும் 2012 டிச.24ம் தேதிகளில் சுரேந்தர் கோலிக்கு மேலும் 4 தூக்கு தண்டனைகள் உட்பட 5 தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டது. மேல் முறையீடு, கருனை மனு, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றமென 17 வருடங்கள் நீண்ட இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மொணீந்தர் சிங் பாந்தர் மற்றும் சுரேந்தர் கோலியை 2023-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, குற்றம்சாட்டப்பட்வர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களைத் தவிர போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இருவரையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு வெளியான நேரத்தில், தனது 7 வயது மகளை இழந்த தாய் துர்கா பிரசாத், “வாழத்தகுதியற்ற இரண்டு அரக்கர்களை இந்த நீதிமன்றம் வேண்டும் என்றால், விடுதலை செய்திருக்கலாம். ஆனால், கடவுளின் நீதிமன்றத்தில், நிச்சயம் இவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்று கூறியிருந்தார். நாட்டை உலுக்கிய இந்த உண்மைச் சம்பவத்தின் உறைய வைக்கும் த்ரில் அனுபவம் தான் 'Sector 36' திரைப்படம்!

FOLLOW US

WRITE A COMMENT

x