ப்ரீமியம்
Rewind 2022 | ஓடிடியில் தவறவிடக் கூடாத 10 மலையாள படங்கள்


Rewind 2022 | ஓடிடியில் தவறவிடக் கூடாத 10 மலையாள படங்கள்

2022-ல் வெளியாகி தற்போது ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கும் முக்கியமனா 10 மலையாளத் திரைப்படங்கள் இவை: கூமன் (Kooman), படவெட்டு (Padavettu), ரொசார்க் (Rorschach), பால்து ஜான்வர் (Palthu Janwar), ஒரு தெக்கன் தள்ளு கேஸ் (Oru Thekkan Thallu case), தள்ளுமாளா (Thallumaala), நா தான் கேசு கொடு (Nna thaan case kodu), அவியல் (Aviyal), சல்யூட் (Salute), வெயில் (Veyil). இவை குறித்து சற்றே விரிவாக...

  • Kooman: 'த்ரிஷ்யம்' சீரிஸ் படங்களின் தொடர் வெற்றி மற்றும் '12th Man' படத்தை அடுத்து இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘கூமன்’ (Kooman). படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.ஆர்.கிருஷ்ணகுமார் எழுதியிருக்கிறார். ஜீத்து ஜோசப்பிற்கு உரிய களமான க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெற்றியை மீண்டும் தன்வசப்படுத்தியிருக்கிறார். நாயகன் எவ்வளவு புத்திக்கூர்மையான போலீஸ் என்பதை படத்தின் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களுக்கு விவரித்திருக்கும் இடம் அருமை. இயக்குநரின் சிக்னேச்சர் பிராப்பர்ட்டீஸ்களான மலைக் கிராமம், போலீஸ் ஸ்டேசன், டீக்கடை இம்முறை வெவ்வேறு கதைமாந்தர்களுடன் நிகழ்கால கேரள - தமிழக எல்லைப் பகுதியில் நிகழும் குற்றச் சம்பவங்களைப் பேசியிருக்கிறது. | விரிவாக வாசிக்க > Kooman: திருடன் - போலீஸ் விளையாட்டுடன் திகைப்பூட்டும் அனுபவம்!
  • Padavettu: இயக்குநர் லிஜு கிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கும் மலையாள திரைப்படம் 'படவெட்டு' (Padavettu). விபத்தில் பாதிக்கப்பட்டு சோம்பேறித்தனமாக நாட்களைக் கடத்தும் ஒரு இளைஞனின் கதையை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அரசியல்வாதிகளின் சூழ்ச்சி மிக்க அரசியல் விளையாட்டுகளால் பாழடிக்கப்படும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை கலந்து கதை சொல்லியிருக்கும் விதம் பாராட்டத்தகுந்தது. நிவின் பாலியின் கடந்த கால வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். இந்தக் குறை தவிர, படம் முழுக்க ஆடியன்ஸை எங்கேஜிங்காக வைத்த விதத்தில் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெறுகிறார் இயக்குநர். | விரிவாக வாசிக்க > Padavettu - பல நிஜங்களை உடைத்துப் பேசும் ’சுவாரஸ்ய’ அரசியல் சினிமா!
  • Rorschach: தனக்கு ஏற்பட்ட பெருங்கொடுமையால் பழிவாங்கும் எண்ணம் உடலெங்கும் ஊறிப்போன ஒருவனின் தீரா பழிவேட்டையே ‘ரோர்சாக்’ (Rorschach). லூக் ஆண்டனி (மம்முட்டி) காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை அளிக்கிறார். அதில், கர்ப்பிணியான தனது மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, விபத்து நிகழ்ந்தாகவும், கண் விழித்து பார்க்கும்போது மனைவியை காணவில்லை என்றும் புகாரில் குறிப்பிடுகிறார். விபத்து நடக்கும் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தும் காவல்துறை, அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என இறுதில் கைவிரித்துவிடுகிறது. அதை ஏற்றுக்கொள்ளாத லூக் ஆண்டனி அடர்ந்த காடுகளை ஒட்டிய கிராமத்தில் முகாமிட்டு தனது மனைவியை தேடும் படலத்தை தொடர, அங்கே நிகழும் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கும் சைக்கலாஜிக்கல் ஹாரர் - த்ரில்லர் படம்தான் ‘ ‘ரோர்சாச்’ (Rorschach).| விரிவாக வாசிக்க > Rorschach - தீரா பகைமை... அச்சுறுத்தப்படும் பேய்... அட்டகாச அனுபவம்!
  • Palthu Janwar: வினய் தாமஸ் மற்றும் அனீஷ் அஞ்சலி எழுதி, அறிமுக இயக்குநர் சங்கீத் பி.ராஜன் இயக்கத்தில் வெளிவந்துள்ள மலையாளத் திரைப்படம் ‘பால்து ஜன்வர்’ (Palthu Janwar).சிரியன் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கண்ணூர் மாவட்டத்தின் இருட்டி என்ற பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியல் பின்னணியை அடிப்படையாக கொண்டு வீட்டு விலங்கு என்று பொருள்படும் 'பால்து ஜன்வர்' திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் துறையின் தொழில்முனைவோரான பிரசூன் (பெசில் ஜோசப்) குடும்பத்தினர் வற்புறுத்தலின் காரணமாக கால்நடை ஆய்வாளர் பணியில் சேர்கிறார். இந்தப் பணி அவரது தந்தை இறந்த காரணத்தால், வாரிசுரிமை அடிப்படையில் கிடைக்கிறது. அவ்வாறு சென்ற இடத்தில் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? அந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொண்டார்? - இதுதான் திரைக்கதை. | விரிவாக வாசிக்க > Palthu Janwar - பசுவுக்காக மடிப் பால் சுரந்த மனித மனங்களின் கதை!
  • Oru Thekkan Thallu case: எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ‘அம்மிணிபிள்ளை வெட்டு கேஸ்’ (Amminipillai Vettu Case) என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள மலையாளத் திரைப்படம் ‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’ (Oru Thekkan Thallu case). இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீஜித்.என் இயக்கியுள்ளார். கேரளத்தின் அழகிய கடற்கரை கிராமம் ஒன்றில், இரு ஆண்களின் வாழ்வில் இருக்கும் பெருமையும் ஈகோவும் ஒன்றோடு ஒன்று மோதி ஆதிக்கம் செலுத்தும்போது நேரும் விபரீதங்களை நகைச்சுவைக் கலந்து பேசியிருக்கிறது இந்தப் படம். | விரிவாக வாசிக்க > Oru Thekkan Thallu case - பெருமையும் ஈகோவும் அலைமோதும் கடற்கரை கிராமத்தின் கதை!
  • Thallumaala: இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் வந்ததைக்கூட இருமிக் கொண்டே இன்ஸ்டாகிராமில் பதிவிடும் இளமைப் பட்டாளங்களின் கலர்ஃபுல் வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை பேசியிருக்கும் neo-noir வகை மலையாள திரைப்படம்தான் இந்த தள்ளுமாலா (Thallumaala).நாயகன் வசிமின் திருமணம் நடக்கப்போவதற்கு முன் சில நிமிடங்களுக்கு முன் அங்கு நடக்கும் சண்டையால் திருமணம் நின்றுபோகிறது. இந்த சண்டைக்கு காரணம் என்ன? நாயகனை சண்டைக்கு தூண்டிய அந்த நபர் யார்? நாயகனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சண்டையிடும் அந்த நபர்களின் பின்னணி என்ன? எதற்காக இப்படி ரத்தம் சொட்ட சொட்ட ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர்? இந்த சண்டைகளுக்குப் பின் நாயகனின் திருமணம் நடந்ததா? இல்லையா? - இப்படி பல கேள்விகளுக்கான பதில்தான் இந்தப் படத்தின் மீதிக்கதை. | விரிவாக வாசிக்க > Thallumaala - இது Rugged இளைஞர் பட்டாளத்தின் Thugged லைஃப்ஸ்டைல்!
  • Nna thaan case kodu: திருட்டுத் தொழிலை விட்டுத் திருந்தி வாழ்ந்து வருபவர் குஞ்சாக்கோ போபன். ஒருநாள் இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்கிய அவர்மீது திடீரென ஆட்டோ மோத வருகிறது. அந்த விபத்தில் இருந்து தப்ப நினைத்து அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை தாவி குதித்து விடுகிறார். அந்த வீட்டில் உள்ள இரண்டு நாய்கள், குஞ்சாக்கோ கோபனை ‘உட்காரும்’ இடத்தில் வெறித்தனமாக கடித்து விடுகின்றன. இதையடுத்து இந்த விபத்திற்கு காரணமானவருக்கு எதிராக வழக்கு தொடர்கிறார். இந்த வழக்கில் அவர் வென்றாரா, இல்லையா என்பது படத்தின் கதை. முழு நீள ஒரு கோர்ட் ரூம் டிராமா வகையான கதையை நகைச்சுவை கலந்து எடுத்திருக்கிறார் இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன். விரிவாக வாசிக்க > Nna thaan case kodu - சாதாரண மனிதனின் அசாதாரண சட்டப் போராட்டம்!
  • Aviyal: இயக்குநர் ஷனில் முகமது எழுதி இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் 'அவியல்'. தனது காதலனுடன் ஏற்பட்ட பிரேக்-அப்பால், மனமுடைந்து, பியர் குடித்துவிட்டு தனது தந்தை கிருஷ்ணனை அழைக்கிறார் அவரது மகள். மகளின் காதல் கதையை கேட்டு சிரித்து ரசிக்கிறார் இசைக் கலைஞரான கிருஷ்ணா.அடுத்த நாள் தனது மகளை காரில் அழைத்து செல்கிறார். அந்தப் பயணத்தில் கிருஷ்ணா தனது முதல் காதல் தொடங்கி திருமணம் வரையிலான வாழ்க்கையை விவரிப்பதுதான் படத்தின் கதை. இசைக் கலைஞர் கிருஷ்ணனின் வாழ்க்கையில் 4 வெவ்வேறு காலக்கட்டத்தையும் பேசிவிட்டு, இறுதிக்காட்சியில் அவர் வைக்கும் ட்விஸ்டும், ஆடியன்ஸுக்கும் கூறும் கருத்தும் சிறப்பு. | விரிவாக வாசிக்க > Aviyal - ராதாக்களின் துயரக் கதைகளும் நல்லனுபவமும்!
  • Veyil: இந்தப் படத்தில் பேசுகின்ற மொழியும், நடித்திருக்கும் நடிகர்களும் உங்களுக்கு பரிச்சயமில்லாமல் இருக்கலாம். ஆனால் 1 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தின் ஏதாவது ஒரு காட்சி, உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கும். இந்தத் திரைப்படத்தின் தலைப்பான 'வெயில்' என்பது இங்கு ஒளியை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிக்காட்டிக் கொள்ளாத தனது உணர்வுகளால் இருள் சூழும் முதன்மைக் கதாபாத்திரத்தின் வாழ்வில் படரும் ஒளியே ' இந்த திரைப்படம். | விரிவாக வாசிக்க > Veyil - வெளிக்காட்ட தவறிய உணர்வுகளின் ஒன்றுபட்ட வெளிப்பாடு!
  • Salute: ஓர் இரட்டைக் கொலை வழக்கில் ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தம் காரணமாக , அப்பாவி ஆட்டோ டிரைவர் ஒருவர் மீது பழியைப் போட்டு, அவரையே குற்றவாளியாக்கி, ஆயுள் தண்டனை பெற்றுத் தரும் போலீஸ் குழுவில் இருக்கிறார் அரவிந்த் கருணாகரன். கொலை வழக்கை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மெடல் வேற கொடுக்கப்படுகிறது. இந்தச் செயல் அவரது மனதுக்கு ஒப்பவில்லை. அரவிந்த் கருணாகரன் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதியை சந்தித்து உண்மையைச் சொல்கிறார். இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மீறி, அந்த அப்பாவி ஆட்டோ ஓட்டுநர் குற்றமற்றவர் என்பதை எப்படி நிரூபிக்கிறார் என்பதே படத்தின் திரைக்கதை. | விரிவாக வாசிக்க > சல்யூட் - குற்ற உணர்வுக்கு ஆளான காவல்துறை அதிகாரியின் அறம்!

FOLLOW US

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

WRITE A COMMENT

x