பார்வதி, நித்யா, பத்மபிரியா, நதியா... கவனம் ஈர்க்கும் ‘ஒண்டர் உமன்’ ட்ரெய்லர்


பார்வதி, நித்யா, பத்மபிரியா, நதியா... கவனம் ஈர்க்கும் ‘ஒண்டர் உமன்’ ட்ரெய்லர்

பார்வதி, நித்யா மேனன், நதியா, பத்மபிரியா உள்ளிட்டோர் நடிப்பில் ’ஒண்டர் உமன்’ (Wonder women) படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை அஞ்சலி மேனன் இயக்கி இருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்து இருக்கிறார். இந்தத் திரைப்படம் இம்மாதம் 18-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சில தினங்களுக்கு முன்னர் நித்யா மேனன், பார்வதி ஆகியோர் பிரெக்னன்ஸி கிட் புகைப்படத்தை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து, அதில் 'ஆச்சரியரங்கள் தொடங்கியுள்ளன' என தலைப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் பார்வதி கர்ப்பம் தரித்திருப்பதாக எண்ணி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்துதான் இது ’ஒண்டர் உமன்’ படத்திற்காக புரோமோஷன் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் ’ஒண்டர் உமன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இதில், மகப்பேறு காலத்தில் பயிற்சி வகுப்பில் சந்திக்கும் கர்ப்பிணிப் பெண்களின் கதைகளைச் சொல்கிறது ‘ஒண்டர் உமன்’. வெவ்வேறு பின்புலம் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் இந்த வகுப்பில் பயிற்சி பெறுகிறார்கள். குழந்தைகளின் தன்மை, பிரசவம் எவ்வாறு நிகழும், தாய்மார்களின் உடல் நிலை போன்ற பாடங்கள் பயிற்சி வகுப்புக்கு வரும் பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பின் ஆசிரியராக நதியா நடித்திருக்கிறார். கர்ப்பிணிப் பெண்களாக நித்யா மேனன், பார்வதி, பத்மபிரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ட்ரெய்லரில் அனைத்துப் பெண்களின் கதாப்பாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதை காணக் முடிகிறது. சமீபத்தில் பெண்களை மையமாக வைத்து வெளிவரும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ‘ஒண்டர் உமன்’ திரைப்படமும் பொதுமக்களிடம் அதிசயத்தை நிகழ்த்தும் என்று திரைப்பட ஆர்வலர்கள் நம்புகின்றனர். படத்தின் ட்ரெய்லர் இங்கே...

FOLLOW US

WRITE A COMMENT

x