நியூயார்க்: அமெரிக்க சீரியர் கில்லர் ஜெஃப்ரே டாமர் குறித்து நெட்ஃபிளக்ஸில் புதிய சீரிஸ் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சீரிஸுக்கு எதிராக ஜெஃப்ரே டாமரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் 1980களில் 17 இளைஞர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்தது மட்டுமல்லாமல், கொல்லப்பட்டவர்களின் உடல் பாகங்களை உணவாகவும் உட்கொண்டவர்தான் ஜெஃப்ரே டாமர். இவ்வாறு கொடூரக் குற்றங்களைச் செய்த ஜெஃப்ரே டாமர் பற்றிதான் தற்போது நெட்ஃபிளக்ஸ் சீரிஸ் வெளியிட்டுள்ளது. இதில் இவான் பீட்டர்ஸ் ஜெஃப்ரே டாமராக நடித்துள்ளார்.
ஜெஃப்ரே டாமரின் சீரிஸுக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. இந்தக் கொடூரக் கொலைகளை திரையில் எத்தனை முறைதான் காட்டுவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜெஃப்ரேவால் தனது தம்பியை இழந்த சகோதரியான ரீட்டா இசபெல் கூறும்போது, “இவர்கள் எடுக்கும் காட்சிகளில் எனது கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளது. அது என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. நெட்ஃபிளக்ஸ் இந்த சீரிஸ் மூலம் வரும் பணத்தை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். இந்த சோகமான நிகழ்விலிருந்து அவர்கள் பணம் சம்பாதிப்பது வருத்தமாக உள்ளது” என்றார்.
பாதிக்கப்பட்ட மற்றொரு குடும்பம் பேசுபோதும், “இது மீண்டும் மீண்டும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, எதற்கு இத்தனை திரைப்படங்கள்/நிகழ்ச்சிகள் / ஆவணப்படங்கள் தேவை?" என்று தெரிவித்தனர்.
ஜெஃப்ரே டாமரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ‘ஜெஃப்’ என்ற ஆவணப்படம் வெளியானது. மை பிரண்ட் டாமர் (2017), டாமர் (2002) ஆகிய படங்களும் பல புத்தகங்களும் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அவரை பற்றி நெட்பிளக்ஸ் சீரிஸ் வெளியிட்டுள்ளது.
கொடூரக் குற்றங்களுக்காக ஜெஃப்ரே டாமருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் சக கைதியான கிறிஸ்டோபர் ஸ்கேவர் என்பவரால் ஜெஃப்ரே 1994-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி தனது 33-வது வயதில் கொல்லப்பட்டார்.
WRITE A COMMENT