விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான 'லைகர்' திரைப்படம் வியாழக்கிழமை (செப்.22) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் 'லைகர்'. அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா முறையில் ரூ.125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'லைகர்' வெளியான முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் முதல்நாள் வசூலாக உலகம் முழுவதும் படம் ரூ.33.12 கோடி ரூபாயை வசூலித்ததாக படத்தை தயாரித்த தர்மா புரொடக்ஷன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. அந்த வகையில் தற்போதுவரை வெறும் ரூ.60 கோடிக்கு மேல் மட்டுமே படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கடுமையான நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், படம் நாளை (செப்டம்பர் 22) டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.65 கோடிக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT