உலக அளவில் பிரபலமாக உள்ள ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று நெட்ஃப்ளிக்ஸ். தற்போது அதன் சந்தாதாரர்கள் அந்தத் தளத்தில் இருந்து தொடர்ந்து விலகி வருகின்றனர்.
கடந்த 1997 முதல் சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் இருக்கும் ஸ்ட்ரீமிங் தளங்களில் தங்களுக்கு தேவையான தளங்களை மட்டுமே பயன்படுத்த சந்தாதாரர்கள் தயாராகிவிட்டதன் போக்குதான் இது என சொல்லப்படுகிறது.
உலகின் பிரபல ஸ்ட்ரீமிங் தளமாக நெட்ஃப்ளிக்ஸ் உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து சந்தாதாரர்களை இந்த தளம் இழந்து வருவதால் அதன் பங்குகளின் மதிப்பு சரிந்துள்ளது.
ஸ்க்விட் கேம், ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் மற்றும் பிரிட்ஜெர்டன் போன்றவை நெட்ஃப்ளிக்ஸில் ஹிட் அடித்தவை. இருந்தாலும் அதன் அண்மைய யுக்திகள் தான் இந்த சரிவுக்கு காரணம் என விமர்சகர் ஹேலி காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.
நெட்ஃப்ளிக்ஸ் பங்குகளின் விலை சரிவு என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். உலக அளவில் அதிகரித்து வரும் பணவீக்கமும் இதற்கு ஒரு காரணம். வாழ்வதற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் டிவி மற்றும் சினிமா போன்றவை அத்தியாவசியமானது அல்ல.
மறுபக்கம் வணிக ரீதியாக போட்டி நிறுவனங்கள் வலுப்பெற்றதாக திகழ்வதும் நெட்ஃப்ளிக்ஸ் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக உள்ளது. டிஸ்னி முதல் பாராமவுன்ட் வரை, அமேசான் முதல் ஆப்பிள் வரை என போட்டி மிகக் கடுமையாக உள்ளது. அதே நேரத்தில் கரோனா பெருந்தொற்றும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சந்தாதாரர்கள் தங்களது கணக்கு மற்றும் பாஸ்வேர்டை அடுத்தவர்களுடன் பகிர கடிவாளம் போட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவும் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாதகமாக அமைந்துள்ளதாகவும் தெரிகிறது.
குறைந்த சந்தா விலையில் விளம்பரங்களுடன் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டை பயனர்கள் பெறுகின்ற வகையில் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வர நெட்ஃப்ளிக்ஸ் ஆயத்தமாகி வருகிறது. இருப்பினும் அதற்கான கட்டணம் குறித்த விவரம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
நேற்றைய (ஜூலை 19) தரவுகளின்படி பார்த்தால் நெட்ஃப்ளிக்ஸ் சுமார் 2 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளது. கடந்த 2021 வாக்கில் சுமார் 18 மில்லியன் சந்தாதாரர்களை பெற்றது இந்த தளம். அதை ஒப்பிட்டு பார்க்கும் போது இது வெறும் ஒரு சிறிய பங்கு தான். இப்போது 222 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.
அமேசான் பிரைம் வீடியோ 175 மில்லியன் பார்வையாளர்களையும், டிஸ்னி பிளஸ் 118 மில்லியன் பார்வையாளர்களையும் கொண்டுள்ளது. பெரிய அளவிலான எண்ணிக்கையில் பார்வையாளர்களை கொண்டிருந்தாலும் பிரிட்டனில் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை இளம் தலைமுறையினர் பார்க்க தவறினாலும் அவர்களை காட்டிலும் வயதில் இளையவர்களான அடுத்த தலைமுறையினர் (குழந்தைகள்) இந்த தளத்தில் சிறுவர் பிரிவில் ஸ்ட்ரீம் ஆகும் வீடியோக்களை பார்த்து வளர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
WRITE A COMMENT