இளையராஜா ஈர்ப்பிசையில் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ ப்ரொமோ - ரசிகர்களை மகிழ்வித்த நெட்ஃப்ளிக்ஸ்


இளையராஜா ஈர்ப்பிசையில் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ ப்ரொமோ - ரசிகர்களை மகிழ்வித்த நெட்ஃப்ளிக்ஸ்

சென்னை: இளையராஜா இசையில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரபல 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' ( Stranger Things) வெப் சீரிஸின் ப்ரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2016-இல் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' இணையத் தொடரின் முதல் சீசன் வெளியானது. அப்போதிலிருந்தே உலக ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஹாரர் டிராமா ஜானரில் இந்தத் தொடர் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் வரும் பாத்திரங்கள், கதைக்களம், நடிப்பு, சவுண்ட் டிராக், இயக்கம் என ஒவ்வொன்றும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்ததே இதற்கு காரணம்.

இந்த கிளாசிக் ரக சீரியஸின் ஆரம்பம் முதல் அனைத்தும் ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. 2016, 2017 மற்றும் 2019 என முன்னதாக இந்தத் தொடரின் மூன்று சீசன்கள் வெளிவந்தன. இப்போது நான்காவது சீசன் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.

இந்திய ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் இளையராஜாவின் பின்னணி இசையில் உருவாகி உள்ள ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ வெப் சீரிஸின் நான்காவது சீசனுக்கான முதல் அத்தியாத்தின் தீம் மியூசிக் ப்ரோமோ இப்போது வெளியாகி உள்ளது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா ஹேன்டிலில், "மேஸ்ட்ரோ இளையராஜாவின் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தீம் வெர்ஷன், நம் உலகத்தை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது" என்று பதிவிட்டு, இந்த ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. சுமார் 2.30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பின்னணி இசையில் தனது மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளார் இளையராஜா.

கீபோர்ட், கிடார், செல்லோ, டிராம்போன், வயலின், புல்லாங்குழல் என தனது இசைக்குழுவினரின் துணையோடு இசையமைத்துள்ளார். அவரது இசைக்குழுவின் ஆஸ்தான இசைக் கலைஞர்களான பிரபாகர், அருண்மொழி உள்ளிட்ட பலரும் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

வீடியோ இங்கே...

FOLLOW US

WRITE A COMMENT

x