இந்தியாவில் 'அவள் இப்படித்தான்' - Mai வெப் சீரிஸில் நெட்டிசன்களை உலுக்கிய ஒற்றைக் காட்சி!


இந்தியாவில் 'அவள் இப்படித்தான்' - Mai வெப் சீரிஸில் நெட்டிசன்களை உலுக்கிய ஒற்றைக் காட்சி!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான 'மாய்' (Mai) வெப் சீரீஸ் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ஒரு காட்சியை மட்டும் பலரும் குறிப்பிட்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் அதுல் மோங்கியா இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் 'மாய்'. ஷீல் (சாக்‌ஷி) - யஷ் சவுத்ரி (விவேக் முஷ்ரன்) தம்பதியின் வாய்பேச முடியாத மகள் மகள் சுப்ரியா (வாமிகா காபீ). முதல் சீசனின் முதல் எபிசோட்டிலேயே விபத்தில் சிக்கி பலியாகிறார் சுப்ரியா. தனது மகளின் இறப்பை நேரில் கண்ட ஷீல் சவுத்ரி, நிலைக்குலைந்து போகிறார். ஒருவழியாக அவரைத் தேற்றி, விபத்து குறித்து விசாரணைக்காக நீதிமன்றம் செல்லும்போது, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், ஷீல் சவுத்ரியிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியிலிருந்து வேகம் எடுக்கத் தொடங்குகிறது கதை.

அந்த ஓட்டுநர் மன்னிப்புக் கேட்டதற்கான காரணத்தை அறிந்துகொள்ள ஷீல் சவுத்ரி மேற்கொள்ளும் அடுத்தடுத்த முயற்சிகள், தன் மகளுக்கு என்ன நேர்ந்தது, ஏன் கொலை செய்யப்பட்டாள், யார் கொலை செய்தார்கள், இப்படி பல கேள்விகளின் மர்மங்களுக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் முடிச்சுக்களைத் கண்டுபிடிக்க எத்தனிக்கும்போது அவர் சந்திக்கும் இடையூறுகள், இதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் இவையெல்லாம் மீறி மகளின் கொலைக்கான காரணம், கொலையாளிகளை, கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே இந்த வெப் சீரிஸின் பரபர திரைக்கதை.

இந்திய க்ரைம் த்ரில்லராகவும் வந்திருக்கும் இந்த வெப் சீரிஸின் ஒற்றைக் காட்சிதான் நெட்டிசன்களை உலுக்கியிருக்கிறது.

தாய் சாக்‌ஷி தன்வார் தன் மகளின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்களுக்கு, தன் மகளை இழந்த துக்கத்தோடு டீ போட்டுக் கொடுப்பார். ஆறு எபிசோடுகளில் இது ஒரு சிறிய காட்சியாக இடம்பெற்றாலும், இந்தக் காட்சி பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் எவ்வளவு துக்கத்தோடு இருந்தாலும், அவள்தான் சமையலறையை கவனிக்க வேண்டும் என்றுதான் இந்திய சமூகக் கட்டமைப்பு உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டிய காட்சி அது.

நம் எல்லோர் வீட்டிலும் இது அரங்கேறியிருக்கும். ஒரு சிறிய வேலையாக இருந்தாலும் வீட்டில் உள்ள அம்மா, அக்கா, தங்கை, மனைவி என அவர்களைத்தான் பார்க்கச் சொல்வோம். இந்நிலையில், இத்தகைய சூழலில் வீட்டில் உள்ள பெண்களின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ளுங்கள் என்று இந்தக் காட்சியை பதிவிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

FOLLOW US

WRITE A COMMENT

x