சென்னை: விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'டாணாக்காரன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் வெற்றிமாறனுடன் 'விசாரணை', 'அசுரன்', 'வடசென்னை', 'விடுதலை' உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மலையாள நடிகர் லால், எம்.எம்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் தமிழ் கூறும்போது, 'போலீஸ் பயிற்சியில் உள்ள வாழ்க்கையைச் சொல்லும் படம் இது. கல்லூரி மாணவர்களுக்கு நிகராக போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் வாழ்க்கையிலும் பல சுவாரசியங்கள் உண்டு. வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இந்தப் படம் இருக்கும்' என்று ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், 'டாணாக்காரன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. "போலீஸ்ல சிங்கம், புலி, நரி, நாய்னு எல்லா முகமுடியையும் நம்ம கையில கொடுத்திடுவானுங்க" என்ற வசனத்துடன் தொடங்கி சுமார் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரில், போலீஸ் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்கள் குறித்து காட்டப்படுகின்றன.
'டாணாக்காரன்' ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே பலரால் பார்வையிடப்பட்டு, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அடர்த்தியான காட்சி அமைப்புகளும், வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகின்றன.
வரும் ஏப்ரல் 8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
WRITE A COMMENT