அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் தளங்களுடன் இணைந்து படங்களை தயாரிக்க இருக்கிறார் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா.
இந்தியாவின் புகழ்பெற்ற ஓடிடி தளங்களாக கோலோச்சுவது அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் தளங்கள். இவை இரண்டும் இந்திய பட தயாரிப்பு நிறுவனமான க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் (Clean Slate Filmz) நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. அதன்படி, அடுத்தடுத்த வருடங்களில் இந்த நிறுவனங்கள் சுமார் 4 பில்லியன் மதிப்பில் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை ஒன்றாக தயாரிக்கவுள்ளன.
பாலிவுட்டின் தலைநகராக விளங்கும் மும்பையின் கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ், அடுத்த 18 மாதங்களில் இந்த இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்களுக்காக எட்டு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை வெளியிட இருப்பதாக அதன் இணை நிறுவனர் கர்னேஷ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். இதில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக மூன்று தயாரிப்புகளுக்கு மேல் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை நெட்ஃப்ளிக்ஸ் தளமும் உறுதி செய்துள்ளது. அதேநேரம் அமேசான் பிரைம் இன்னும் அதிகாரபூர்வமாக இதனை உறுதிப்படுத்தவில்லை. இதனால், அதிகாரபூர்வ தகவல் வரும்வரை அமேசானுக்காக தயாரிக்கவிருக்கும் படத்தின் விவரங்களை வெளியிடப்போவதில்லை என்று கர்னேஷ் சர்மா தகவல் தர மறுத்துள்ளார்.
இந்த கர்னேஷ் சர்மா, நடிகை அனுஷா சர்மாவின் சகோதரர் ஆவார். சொல்லப்போனால் இந்த க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனம் அனுஷ்கா சர்மாவின் குடும்ப நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் அனுஷ்கா சர்மாவும் இணை நிறுவனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் இப்போது அனுஷ்கா சர்மா நடித்து வரும் 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது. இதில் அனுஷ்கா சர்மா இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமி கேரக்டரில் நடிக்கிறார்.
WRITE A COMMENT