சர்வதேச அளவில் திரைப்பட விருதுகளில் உயரிய விருதுகளுள் ஒன்றான கோல்டன் குளோப் விருதை 'ஸ்குவிட் கேம்' சீரிஸில் நடித்த 77 வயதான நடிகர் ஓசங் சோ தட்டிச் சென்றுள்ளார். இவரது திரைப் பயணம் வியக்கத்தக்கது.
கடந்த செப்டம்பர் 17-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த 'ஸ்குவிட் கேம்'. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் இணையத் தொடர்களை பின்னுக்குத் தள்ளி, உலகில் அதிகம் பேர் விரும்பி பார்த்த இணையத் தொடர் என்று பெருமையை பெற்றத் தொடர் இது.
இந்தத் தொடரில் நடித்த 77 வயதான நடிகர் ஓசங் சோவுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்து பெரிய விருதாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருது. 2022-ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட இந்த விழாவில் சிறந்த உறுதுணை நடிகருக்கான பிரிவில் நடிகர் ஓசங் சோவுக்கு கோல்டன் குளோப் விருதைத் தட்டிச் சென்றார்.
'ஸ்குவிட் கேம்' தொடரில் Player 001 எனும் கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகர் நடிகர் ஓசங் சோ. ரசிகர்களை பெரிதும் ஈர்த்த இவரின் பாத்திரம், இப்போது விருதுக்கும் தேர்வாகியுள்ளது. இதையடுத்து கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் தென் கொரிய நடிகர் என்ற பெருமையும் 77 வயதில் படைத்துள்ளார் ஓசங் சோ.
ஓசங் சோ மேடை நாடகங்களில் நடித்து தனது வாழ்க்கையை தொடங்கியவர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள அவர், 1967 முதல் தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். என்றாலும் 'ஸ்குவிட் கேம்' தொடர் அவரை உலகம் முழுக்க பிரபலமாக்கி இருக்கிறது. 'ஸ்குவிட் கேம்' வெளியானதிலிருந்து அவரது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. இதை ஒரு முறை தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட நடிகர் ஓசங் சோ, "நான் காற்றில் மிதப்பது போல் உணர்கிறேன். தற்போது கிடைத்துள்ள புகழ், 'நான் அமைதியாக இருக்க வேண்டும், என் எண்ணங்களை ஒழுங்கமைக்க வேண்டும்' என்பது போல் என்னைச் சிந்திக்க வைக்கிறது.
பல பேர் என்னைத் தொடர்பு கொள்கின்றனர். எனக்கென்று தனியாக மேலாளர் இல்லாததால், எனக்கு வரும் அழைப்புகளை கையாள்வது எனக்கு கடினமாக உள்ளது. அதனால் என் மகள் எனக்கு உதவி செய்து வருகிறார். விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகின்றன. 'பிரபலமாக இருப்பதும் கடினமானதுதான்' என்று தோன்ற வைக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கோல்டன் குளோப் விருதில் சிறந்த தொடர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளுக்கான போட்டியில் ‘ஸ்குவிட் கேம்’ இடம்பெற்ற நிலையில் சிறந்த உறுதுணை நடிகர் விருதை நடிகர் ஓசங் சோ பெற்றிருக்கிறார். அதேபோல் இந்தாண்டுக்கான கோல்டன் குளோப் விருதுக்கான சிறந்த திரைப்படமாக 'பெல்ஃபாஸ்ட்' (Belfast) தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், 'தி வெஸ்ட் சைட் ஸ்டோரி' (The West side story) திரைப்படம் 3 கோல்டன் குளோப் விருதுகளை பெற்றுள்ளது.
WRITE A COMMENT