கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் பெரும் அடிவாங்கிய துறைகளில் முக்கியமானது சினிமா துறையைச் சொல்லலாம். இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டதால் சினிமாவையே தொழிலாக நம்பியிருந்தவர்களில் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராக இருந்த பல படங்கள் முடங்கிப் போயின. உலகம் முழுவதும் அப்படி முடங்கிய பல படங்களுக்கு மீட்பராக அமைந்தன ஓடிடி தளங்கள்.
தென்னிந்தியாவிலும் பெரிய பட்ஜெட்டில் மாஸ் அந்தஸ்து கொண்ட நடிகர்களின் படங்கள் கூட நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தன. இதுகுறித்து சமூக வலைதளங்களில் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தாலும் கரோனா ஊரடங்கு போன்ற இக்கட்டான சூழலில் திரைத்துறை முடங்காமல் காப்பாற்றிய பெருமை ஓடிடி தளங்களையே சாரும். அந்த வகையில் தங்களுடைய படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு, அதன் வாயிலாகவும் ரசிகர்களை வசப்படுத்திய இந்திய நட்சத்திரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். (கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசை ரேங்க்கிங் அடிப்படையிலானது அல்ல.)
ஆர்யா: இந்த ஆண்டு ஆர்யா நடித்த இரண்டு படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தன. அவர் ‘டெடி’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’. ‘டெடி’ படத்தை சக்தி சவுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். ஏற்கெனவே ‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ என்று புதிய முயற்சிகளை கையிலெடுத்தவர் இதில் நாயகியின் ஆன்மா ‘டெடி’ பியர் பொம்மைக்குள் புகுந்து கொள்வதாக திரைக்கதை அமைத்திருந்தார். நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும் பொம்மை, அனிமேஷன், என்பதால் குழந்தைகளின் ஃபேவரிட் படங்களில் ஒன்றாக மாறிப் போனது.
அடுத்து, ‘சார்பட்டா பரம்பரை’. ‘காலா’ படத்துக்குப் பிறகு பா.இரஞ்சித் இயக்கும் படம் என்பதால் படத்துக்கும் இயல்பாகவே பெரும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அத்துடன் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆர்யாவுக்கு இப்படம் ஒரு பெரிய ப்ரேக்கிங் பாயின்ட்டாக அமைந்தது எனலாம். நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது ‘சார்பட்டா பரம்பரை’.
தனுஷ்: ‘கர்ணன்’ படம் கொடுத்த வெற்றிக்குப் பிறகு தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான படம் ‘ஜகமே தந்திரம்’. 2019-ஆம் ஆண்டே படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டாலும், கரோனாவால் இப்படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே போய் இறுதியில் கடந்த ஜூன் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியானது. விமர்சன ரீதியில் சற்றே பின்னடைவை சந்தித்தாலும், நெட்ஃப்ளிக்ஸின் டாப் 10 பட்டியலில் வரும அளவுக்கு ரசிகர்களை ஈர்த்திருந்தது.
‘ராஞ்சனா’ படத்துக்குப் பிறகு ஆனந்த எல்.ராய் - தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்ற பெரும் எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 23 அன்று வெளியான படம் ‘அத்ரங்கி ரே’. கூடவே அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான். இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனினும், பொழுதுபோக்குக்கு பொருத்தமான படமாக இந்திய அளவில் பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி: தமிழில் இந்த ஆண்டு ஓடிடியில் அதிக படங்கள் வெளியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே.டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் ‘துக்ளக் தர்பார்’ மற்றும் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ‘அனபெல் சேதுபதி’. இதில் ‘துக்ளக் தர்பார்’ இரண்டும் விமர்சனங்களைப் பெற்றாலும் ‘அனபெல் சேதுபதி’ கடுமையான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. விஜய் சேதுபதி கதையே கேட்பதில்லையா என்று நேரடியாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடிக்கத் தொடங்கினர். எனினும் இந்த ஆண்டு ஓடிடியில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நட்சத்திரங்களின் பட்டியலில் விஜய் சேதுபதியின் பெயர் தவிர்க்க முடியாதது என்பது நிதர்சனம்.
சூர்யா: பொதுவாக இந்தப் பட்டியலில் ஒன்றுக்கும் அதிகமான ஓடிடி படங்களில் நடித்த நடிகர்களின் பெயர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஓடிடியில் வெளியான படங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘ஜெய் பீம்’. அந்த வகையில் அதன் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் சூர்யாவின் பெயரை இங்கே குறிப்பிடுவது அவசியமாகிறது. தான் ஒரு மாஸ் ஹீரோ என்றாலும் கூட கதைக்காக ஹீரோயிசம், சண்டைக் காட்சிகள், கதைக்கு தொடர்பே இல்லாத காமெடியன், ஹீரோயின் என அனைத்தையும் தவிர்த்த சூர்யா நிச்சயம் பாராட்டத்தக்கவர். ஐஎம்டிபி தளத்திலும் ரேட்டிங் பிய்த்துக்கொண்டு போனது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஃபகத் ஃபாசில்: 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபஹத் பாசிலின் ‘ட்ரான்ஸ்’ படம் திரையரங்கில் வெளியானது. அதன் பிறகு அதே ஆண்டு வெளியான ‘சி யூ சூன்’ தொடங்கி இந்த ஆண்டு ஃபஹத் பாசில் நடித்த அனைத்துப் படங்களும் ஓடிடியில் வெளியானவை. ‘இருள்’, ‘ஜோஜி’, ‘மாலிக்’ என இந்த ஆண்டு ஓடிடியில் ஒரு தனி ராஜ்ஜியமே நடத்தியுள்ளார் ஃபகத்.
ப்ரித்விராஜ்: இந்த ஆண்டு ப்ரித்விராஜ் நடித்த அனைத்து படங்களுமே ஓடிடி ரிலீஸ்தான். டானு பாலக் இயக்கிய ‘கோல்ட் கேஸ்’. க்ரைம் த்ரில்லர் வகையில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கு அடுத்து வெளியான படம் ‘குருதி’. மனு வாரியர் இயக்கிய இப்படம் காலம் காலமாக இருந்து வரும் இந்து - முஸ்லிம் பிரச்சினையைப் பற்றி பேசியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது
. இறுதியாக இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்கான ‘ப்ரம்மம்’. இதுவரை வெளியான ‘அந்தாதூன்’ ரீமேக்குகளில் உருப்படியான ரீமேக் என்று இதைச் சொல்லலாம். இந்த மூன்று படங்களுமே அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியிருந்தன.
WRITE A COMMENT