பியானோ கலைஞர் ரே மத்யூஸ் (ப்ரித்விராஜ்). இசையில் மட்டுமே கவனம் செலுத்தவும், பிறரது அனுதாபத்தால் வேலை கிடைக்கும் என்பதற்காகவும் பார்வை இழந்தவராக நடிக்கிறார். ரெஸ்டாரண்ட் ஒன்றில் பியானா இசைக்கும் வேலை ரே மேத்யூஸுக்கு கிடைக்கிறது.
அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளரின் மகளாக வரும் ராஷி கண்ணாவுக்கும் ரே மேத்யூஸுக்கும் இடையே காதல் மலர்கிறது. இன்னொரு பக்கம் 80களின் நடிகராக இருந்து தற்போது தொழிலதிபராக இருக்கும் உதய்குமார் (ஷங்கர்) மற்றும் அவரது மனைவி சிமி (மம்தா மோகன்தாஸ்). ரேவின் இசையில் ஈர்க்கப்படும் உதய் குமார், தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அவரை தன் வீட்டில் வந்து பியானோ இசைக்குமாறு அழைக்கிறார்.
மறுநாள் உதய்குமாரின் வீட்டுக்குச் செல்லும் ரேவுக்கு அங்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து ரேவின் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. அதிலிருந்து அருண் மீண்டாரா என்பதே ‘ப்ரம்மம்’ சொல்லும் கதை.
2018ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் மலையாள ரீமேக். படத்தின் ஆரம்பகாட்சியிலேயே மலையாள சினிமாவுக்கு ஏற்றபடியான மாற்றத்துடன் படத்தை தொடங்குகிறார் இயக்குநர் ரவி.கே.சந்திரன். படத்தின் ட்ரெய்லரில் பல காட்சிகள் மாற்றப்பட்டது போல தோன்றினாலும் படத்தில் பார்க்கும்போது மிக சொற்பமான மாற்றங்களைத் தவிர அசல் படத்தை அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள்.
ப்ரித்விராஜ் பொருத்தமான தேர்வு. எந்த இடத்திலும் ஆயுஷ்மான் குர்ரானாவை நினைவூட்டாமல் தனக்கே உரிய பாணியில் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். பார்வையற்றவர்களின் சின்ன சின்ன பாவனைகளை மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகிறார். போலீஸ்காரராக வரும் உன்னி முகுந்தன், அவரது மனைவியாக வரும் அனன்யா, ஷங்கர் பணிக்கர் என அவரவர் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
படத்தில் மிக பலவீனமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது மம்தா மோகன் தாஸ். அசல் படத்தில் தபு கதாபாத்திரத்தை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு ஒருவித வெறுப்பும் கோபமும் ஒருங்கே எழும் வகையில் அந்த பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு மம்தாவின் சிமி கதாபாத்திரம் அப்படியான எந்த உணர்வையும் பார்ப்பவர்களுக்கு உண்டாகவில்லை. சீரியல்களில் வரும் வில்லி கதாபாத்திரம் போல வந்து செல்கிறார். ராஷி கண்ணாவுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை. ஒரிஜினல் படத்தில் ராதிகா ஆப்தேவுக்கும் அப்படியான கதாபாத்திரம் தான் என்பதால் அதை விட்டுவிடலாம்.
மலையாள சினிமாக்களுக்கே உரிய அற்புதமான ‘பச்சை பசேல்’ ஒளிப்பதிவுடன் படம் தொடங்குகிறது. ‘அந்தாதூன்’ படத்தின் ஆரம்பத்தில் முயலை துரத்திக் கொண்டு ஒரு கதாபாத்திரம் வரும். அந்த முயலுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விட குறைந்த முக்கியத்துவம் கொண்ட அந்த பாத்திரத்துக்கு எதற்காக ஷைன் டாம் சாக்கோ என்ற ஒரு அற்புதமான நடிகரை வீண்டிக்க வேண்டும் என்பது இயக்குநருக்கே வெளிச்சம். அவரை வைத்து படத்தில் வேறு எதாவது புதிதாக இயக்குநர் முயற்சித்திருக்கிறார் போல என்று நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘அந்தாதூன்’ தெலுங்கு ரீமேக்கான ‘மேஸ்ட்ரோ’ படத்தில் இருந்த அதே பிரச்சினைதான் இப்படத்திலும் இருக்கிறது. ஒரிஜினலை காட்சிக்கு காட்சி அப்படியே இருந்தாலும் ‘அந்தாதூனில்’ இருந்த அந்த ஆன்மா இந்த இரண்டு படங்களிலும் இல்லை. ‘அந்தாதூன்’ படத்தையே இரண்டாவது முறை பார்க்கும்போது முதல் முறை இருக்கும் அந்த பரபரப்பும், ஆச்சர்யங்களும் இரண்டாவது முறை இருக்குமா என்பது சந்தேகமே.
அப்படத்தின் திரைக்கதை அமைப்பு அப்படி. அப்படிப்பட்ட ஒரு படத்தை ஏன் போட்டி போட்டுக் கொண்டு இப்படி அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யவேண்டும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எனினும் ‘மேஸ்ட்ரோ’ அளவுக்கு ‘ப்ரம்மம்’ ஒரிஜினலின் ஆன்மாவை சிதைக்கவில்லை. அதில் ஆடியன்ஸுக்கு பாடம் எடுப்பதாக எண்ணி வைத்த அதிகப்பிரசங்கித்தனமான இடைச்செருகல்கள் இதில் இல்லை. அந்த வகையில் இயக்குநரை பாராட்டலாம். ப்ரித்விராஜ் ரசிகர்களுக்காக வைக்கப்பட்ட ஹீரோயிச காட்சிகள் படத்தின் ஓட்டத்துக்கு தடைக்கல்லாக அமைகின்றன.
குறை சொல்ல முடியாத ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜாயின் இசையும் படத்தை தொய்வின்றி நகர்த்த உதவியுள்ளன.
'மேஸ்ட்ரோ’ படத்தில் எழுந்த அதே கேள்விதான் இங்கும் எழுகிறது. ஓடிடி தளங்களில் உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை அனைத்துப் படங்களும் காணக்கிடைக்கும் இந்த காலகட்டத்திலும் காட்சிக்குக் காட்சி அதுவும் இந்தியப் படங்களையே ரீமேக் செய்யும் காரணம் என்ன?
‘அந்தாதூன்’ படத்தை பார்த்தவர்களுக்கு இப்படம் ரசிக்கும்படி இருக்குமா என்பது சந்தேகமே. அதை பார்க்காதவர்கள் ஒருமுறை ‘ப்ரம்மம்’ பார்த்து ரசிக்கலாம்.
WRITE A COMMENT