செளந்தர்யா ரஜினிகாந்த் மேற்பார்வையில் 'பொன்னியின் செல்வன்' வெப் சீரிஸ் பணிகள் தொடங்கியுள்ளன.
'கோச்சடையான்' மற்றும் 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களை இயக்கியவர் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். மேலும், பல படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு எம்.எக்ஸ். ப்ளேயர் நிறுவனத்துடன் இணைந்து செளந்தர்யா ரஜினிகாந்த் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலை வெப் சீரிஸாக உருவாக்கவுள்ளதாக அறிவித்தார். அதன் பிறகு இது குறித்து எந்தவொரு தகவலையும் செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிடவில்லை.
தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தினை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 'பொன்னியின் செல்வன்' வெப் சீரிஸ் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் இருந்த செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு பயணமும் ஒரு இலக்கும் உண்டு. பல தடைகளை கடந்து எங்கள் ‘பொன்னியின் செல்வன் சீசன் 1 - புது வெள்ளம்’ வெப் சீரிஸை நாங்க தொடங்கியுள்ளோம் என்பதை இந்த விசேஷமான நாளில் உங்களிடம் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய திறமை மிகு குழுவினருடன் அடுத்த அடிகளை எடுத்து வைப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
WRITE A COMMENT