சென்னை: சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் வரும் டிசம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘கங்குவா’. இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல், நட்டி, கருணாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ, கோவை சரளா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பீரியட் ட்ராமாவான இப்படம் இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தின் நிகழ்வுகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. ஞானவேல் ராஜா படத்தை தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
படம் வெளியான நாள் முதல் எதிர்மறை விமர்சனங்களால் வசூல் பின்தங்கியது. இதனாலேயே ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான உருவான இப்படம் ரூ.100 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக படத்தின் பின்னணி இசை இரைச்சல் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதன் ஒலி அளவு குறைக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தை தமிழ் தவிர்த்து, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
WRITE A COMMENT