சென்னை: துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து இந்தியாவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. அதுமட்டுமின்றி 15 நாடுகளில் டாப் 10 பட்டியலிலும் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழகத்தில் குறைந்த திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பால் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கையும், காட்சிகளும் அதிகரிக்கப்பட்டன. இதன் விளைவாக ரூ.70 கோடியில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலித்தது.
இதனையடுத்து கடந்த நவ.28-ல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியானது. வெளியான நாள் முதலே பலரும் இப்படத்தை பாராட்டி வந்தனர். இதன் விளைவாக இப்படம் தொடர்ந்து இந்தியாவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. அதுமட்டுமின்றி 15 நாடுகளில் டாப் 10 பட்டியலிலும் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது. இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய ‘மகாராஜா’ திரைப்படம் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து உலக அளவில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT