தினேஷ் - ஹரிஷ் கல்யாணின் ‘லப்பர் பந்து’ அக்.31-ல் ஓடிடியில் ரிலீஸ்!


தினேஷ் - ஹரிஷ் கல்யாணின் ‘லப்பர் பந்து’ அக்.31-ல் ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை: ‘கெத்து’ தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் வரும் அக்டோபர் 31-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், சுவாசிகா, ஹரிஷ் கல்யாண், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ஒருமாதம் கடந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது. இந்தப் படத்தை ‘சிம்ப்ளி சவுத்’ ஓடிடி தளத்தில் வெளியிட வியாபாரம் செய்திருந்தார்கள். அக்டோபர் 18-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் காரணத்தால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து ‘சிம்ப்ளி சவுத்’ ஓடிடி தளம், இப்போது ‘லப்பர் பந்து’ வெளியீடு இல்லை. புதிய வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் ‘சிம்ப்ளி சவுத்’ ஓடிடியிலும் படம் வெளியாகிறது. ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக இதுவரை ரூ.42 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

WRITE A COMMENT

x