ஓடிடியில் ‘இந்தியன் 2’ வெளியான பிறகு நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?


ஓடிடியில் ‘இந்தியன் 2’ வெளியான பிறகு நெட்டிசன்களின் ரியாக்‌ஷன் என்ன?

சென்னை: ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘இந்தியன் 2’ திரைப்படம் ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ‘கிறிஞ்’ என இன்றைய 2கே தலைமுறையும் ட்ரால் செய்து வருகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு இந்தியன் திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு 28 ஆண்டுகளுக்குப் பின் ‘இந்தியன் 2’ திரைப்படம் கடந்த ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், விவேக், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் திரையரங்குகளில் வெளியானபோதே ரசிகர்களால் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது. இதனால் பாக்ஸ் ஆஃபீஸிலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து வெள்ளிக்கிழமை (ஆக.9) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

படம் வெளியான பிறகு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படத்தின் காட்சிகளை பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக சித்தார்த்திடம் காவல் துறை அதிகாரி ‘நீங்க யாருயா’ என கேட்க, ‘சித்ரா அரவிந்தன் சோசியல் மீடியா’ என சொல்லும் காட்சி, ‘கோ பேக் இந்தியன்’ காட்சி, செல்ஃபி எடுத்தபடியே கமல் வீடியோ கால் பேசும் காட்சி ஆகியவற்றை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

அதே போல, நேர்மையுடன் யார் பணத்தையும் அபகரிக்காமல் நடந்து கொள்ள அறிவுறுத்தும் இந்தியன் தாத்தா, போலி பாஸ் போர்ட்டில் இந்தியா வருவது, சிறுவர்களிடமிருந்து சைக்கிளை எடுத்துச் செல்வது போன்றவற்றை ட்ரால் செய்து வருகின்றனர். “நீ சாப்டதனால வெயிட் போடல, பல பேர் சாபத்துனால வெயிட் போட்ருக்க’ என ஜகன் பேசும் வசனங்களையும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்ந்துள்ளனர். மேலும் பவர் பட்டனை அழுத்தி கமல் செல்ஃபி எடுப்பது வரை நுணுக்கமாக டிகோட் செய்து வருகின்றனர். ஷங்கரிடமிருந்து இத்தகையை படைப்பை எதிர்பார்க்கவில்லை என்றும் அவரது ரசிகர்களே அதிருப்தி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நெட்டிசன் ஒருவர் ‘தாத்தா வர போறாரு’ என்ற காட்சியை பகிர்ந்து ‘கிறிஞ்’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

WRITE A COMMENT

x