நடிகை சமந்தா, இந்தி நடிகர் வருண் தவணுடன் நடித்துள்ள வெப் தொடர், ‘சிட்டாடல்: ஹனி பன்னி’. இந்த ஆக்ஷன் ஸ்பை த்ரில்லர் தொடர் நவ.7-ல் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து வெளியான வெப்சீரிஸின் இந்திய பதிப்பு இது.
ராஜ் மற்றும் டீகே இயக்கியுள்ள இத் தொடர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இதன் டீஸர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. விழாவில் பேசிய சமந்தா, தனது ஆக்ஷன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறும்போது, “நானும் வருணும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது அதை ஒரு ரொமான்டிக் பாடல் போலவே உணர்ந்தேன். இருவருக்குமே அப்படித்தான் இருந்தது. படப்பிடிப்பின் போது இதுபற்றி விவாதித்தோம். இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே-வுக்கு ஒரு ஷாட் அதிக நேரம் தொடர்வது பிடிக்கும். அதனால் கட் சொல்லமாட்டார்கள். அப்படி இதில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட 11-12 நிமிட நீண்ட ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. இதற்காக, வருண் தவண், கேமராமேன் ஆகியோருடன் எனக்கும் புரிதல் இருந்தது. வருண் தவண் படப்பிடிப்பில் உற்சாகமாக இருப்பார். நான் சந்தித்த நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர். படப்பிடிப்பில் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கும்” என்றார்.
WRITE A COMMENT