சென்னை: விஜய் சேதுபதி நடித்த ‘மஹாராஜா’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே இப்படம் 3.2 மில்லியன் பார்வைகளையும், 7.5 மில்லியன் பார்வை நேரங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மஹாராஜா’ திரைப்படம் கடந்த ஜூலை 12 நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் வெளியானபோதே நல்ல வரவேற்பை பெற்றாலும் ஓடிடியில் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
குறிப்பாக வட இந்திய ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் பாராட்டி வருகின்றனர். பலரும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை பேசிய விதம் குறித்து பாசிட்டிவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து இந்தியாவில் டாப் 10 படங்களில் முதலிடத்தில் உள்ளது. அதே போல 14 நாடுகளில் ட்ரெண்டிங் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே இப்படம் 3.2 மில்லியன் பார்வைகளையும், 7.5 மில்லியன் பார்வை நேரங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களான ‘லாப்பாட்டா லேடீஸ்’, ‘படே மியான் சோட்டே மியான்’ ஆகிய படங்களின் பார்வைகளை ‘மஹாராஜா’ முறியடித்துள்ளது.
மேலும் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட 4வது ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற பெருமையையும் ‘மஹாராஜா’ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கிய படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதியின் 50ஆவது படமான இதில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தவிர்த்து, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்த விறுவிறுப்பான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையைக் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. எனினும், வெளியாகி 18 நாட்களை கடந்தபோது உலகம் முழுவதும் இப்படம் ரூ.100 கோடியை வசூலித்தது.
WRITE A COMMENT