திருவனந்தபுரம்: மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில் இவர்களுடன் கமல் இணைந்துள்ள மலையாளத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மனோரதங்கள்’ ஆந்தாலஜி ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மலையாளத்தின் மூத்த எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குநர் எம்.டி.வாசுதேவன் நாயரைக் கொண்டாடும் விதமாகவும், அவருக்கு மரியாதை செய்யும் வகையிலும் இந்த ஆந்தாலஜி உருவாகியுள்ளது. இதில் 9 படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ‘ஒல்லவும் தீரவும்’ என்ற படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். தொடர்ந்து, இயக்குநர் ரஞ்சித் ‘கடுகண்ணவ ஒரு யாத்திரா’, இயக்குநர் ஷ்யாம் பிரசாத் ‘கல்சா’, பிரியதர்ஷன் ‘ஷிலாலிகாதம்’, அஸ்வதி வி.நாயர் ‘வில்பனா’, மகேஷ் நாராயணனின் ‘ஷெர்லாக்’ உள்ளிட்ட 9 படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இதில் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், பார்வதி திருவொத்து, நதியா, ஹரீஷ் உத்தமன், பிஜூ மேனன், ஆசிஃப் அலி, இந்திரன்ஸ், நெடுமுடி வேணு, சித்திக், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆந்தாலஜியின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - கமல்ஹாசனின் இன்ட்ரோவுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். மோகன்லால், மம்மூட்டி, ஃபஹத் பாசில், பிஜூமேனன் ஆகியோரின் கதைகள் அடுத்தடுத்து காட்டப்படுகின்றன. இதில் மோகன்லாலின் கதை ப்ளாக் அன் வொயிட்டில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு நடிகர்களின் அழுத்தமான உணர்வுகள் மிக நெருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ட்ரெய்லர் தொடர் மீதான நம்பிக்கையை கொடுக்கிறது. இத்தனை சூப்பர்ஸ்டார்களையும், ஒரே ஆந்தாலஜியில் பார்ப்பது ரசிக்க வைக்கிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது ‘மனோரதங்கள்’ ஆந்தாலஜி. ட்ரெய்லர் வீடியோ:
WRITE A COMMENT