மும்பை: ஆமீர்கானின் மகன் ஜூனைத்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹாராஜ்’ பாலிவுட் படத்தின் மீதான இடைக்கால தடையை நீக்கி குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் ஆமீர்கான் - ரீனா தத்தாவின் மகன் ஜூனைத் கான். இவர் ‘மஹாராஜ்’ என்ற பாலிவுட் படம் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் கடந்த ஜூன் 14-ம் தேதி நேரடியாக வெளியாக இருந்தது. ஆனால், வைஷ்ணவத்தின் ஒரு பிரிவினரான புஷ்டிமார்க் பிரிவைச் சேர்ந்தவர்கள், படம் தங்கள் சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, படத்தை பார்த்த நீதிபதி சங்கீதா விஷேன், “மஹாராஜ் திரைப்படத்தில் புஷ்டிமார்க் பிரிவை இழிவுபடுத்தும் வகையிலோ, அவர்களை குறிக்கும் வகையிலோ எதுவுமில்லை. மேலும் படம் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் (CBFC) வழிகாட்டுதல்களை பின்பற்றி சான்றழிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்து படத்தின் மீதான இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டார். தடை நீக்கத்தைத் தொடர்ந்து தற்போது படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி காணக் கிடைக்கிறது.
WRITE A COMMENT