ஆமிர்கான் மகன் படத்துக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு


ஆமிர்கான் மகன் படத்துக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு

மும்பை: பிரபல இந்தி நடிகர் ஆமிர்கானின் மகன் ஜுனைத் கான் நடிகராக அறிமுகமாகும் படம், ‘மகாராஜ்’. இதில் ஷாலினி பாண்டே, ஜெய்தீப் அலாவத், சர்வாரி உட்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் பி மல்ஹோத்ரா இயக்கியுள்ள இந்தப்படம் வரும் 14-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இதுகுறித்த அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில், இந்து சாமியார் ஒருவரும் மாடர்ன் இளைஞர் ஒருவர் ஆக்ரோஷமாக இருப்பது போல போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள அதில், சக்திவாய்ந்த மனிதனுக்கும் துணிச்சலான பத்திரிகையாளருக்குமான போராட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1861-ம் ஆண்டு, பிரிட்டீஷ் இந்தியாவில் மும்பையில் உச்சநீதிமன்றம் இருந்த போது நடந்த ‘மகாராஜ் அவதூறு வழக்கின்’ அடிப்படையில் இதன் கதை உருவாகி யுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு இந்து அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“இந்தப் படத்தின் போஸ்டரில் இந்து மதத் தலைவரை எதிர்மறையாக காட்டுவதாக உள்ளது; இது பார்வையாளர்களின் ஒரு பிரிவினரை புண்படுத்தலாம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தும் என்பதால் படத்தை வெளியிடும் முன் எங்களிடம் திரையிட்டு காண்பிக்க வேண்டும்” என்று, இந்த அமைப்பின் கொங்கன் பகுதி அமைப்பாளர் கவுதம் ரவ்ரியா என்பவர் மும்பையிலுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும் யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

FOLLOW US

WRITE A COMMENT

x