லாஸ் ஏஞ்சல்ஸ்: சிலியன் மர்ஃபி நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ‘பீக்கி பிளைன்டர்ஸ்’ (Peaky Blinders) இணையத் தொடர் தற்போது திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
ஸ்டீஃபன் நைட் எழுத்தில் ஓட்டோ பாதர்ஸ்ட், டாம் ஹார்பர் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் இணையத் தொடர் ‘பீக்கி பிளைன்டர்ஸ்’ (Peaky Blinders). நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கும் இந்தத் தொடரில் ‘தாமஸ் ஷெல்பி’ என்ற கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்ஃபி மிரட்டியிருப்பார். இந்தத் தொடருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
இந்நிலையில், ரசிகர்களை கவர்ந்த இந்தத் தொடர் திரைப்படமாக உருவாக உள்ளதை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்தப் படத்தை வெப் சீரிஸின் இயக்குநர்களில் ஒருவரான டாம் ஹார்பர் இயக்குகிறார். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இத்தொடர் தற்போது 10 ஆண்டுகள் கழித்து திரைப்படமாகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், படத்தில் தாமஸ் ஷெல்பி கதாபாத்திரத்திலேயே சிலியன் மர்ஃபி நடிக்கிறார்.
இது தொடர்பாக நெட்ஃப்ளிக்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தாமஸ் ஷெல்பி மீண்டும் வருகிறார். சிலியன் மர்பி நடித்த ‘பீக்கி ப்ளைன்டர்ஸ்’ திரைப்படமாக நெட்ஃபிக்ஸில் வெளியாக உள்ளது” என தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து நாயகன் சிலியன் மர்பி, “தாமஸ் ஷெல்பி கதாபாத்திரம் முடிவடையவில்லை என தெரிகிறது. ‘பீக்கி பிளைன்டர்ஸ்’ திரைப்பட வெர்ஷனுக்காக ஸ்டீவன் நைட் மற்றும் டாம் ஹார்ப்பருடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. இது ரசிகர்களுக்காக” என்று தெரிவித்துள்ளார்.
WRITE A COMMENT