சென்னை: “நம் பெயருக்குப் பின்னால் சாதி போடாததே ஓர் அரசியல்தான். நீ என்ன சாதி என்று கேட்காமல் இருப்பதே அரசியல்தான் என்று நினைக்கிறேன். இந்தக் களத்தை பேசுவதற்கான சூழலை இந்த வெப் சீரிஸில் உருவாக்கியுள்ளது” என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
வசந்தபாலன் இயக்கத்தில் ‘தலைமை செயலகம்’ இணையத் தொடர் வரும் 17-ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் வசந்தபாலன், “2002-ல் என்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினேன். 22 வருடங்களில் வெற்றி, தோல்வி, ஒன்றும் இல்லாமல் போவது என எல்லவாற்றையும் பார்த்துவிட்டேன்.
தேசிய விருது, மாநில விருது, கேன்ஸ் திரைப்பட விழா என எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். 22 ஆண்டுகளில் வெறும் 7 படங்களை இயக்கியுள்ளேன். தற்போது ஒரு வெப் சீரிஸை இயக்கியிருக்கிறேன். ஒன்றை நீங்கள் நம்பினால் அது கண்டிப்பாக நடக்கும். என்னுடைய வாழ்நாளில் நான் அதை பார்த்துள்ளேன். ‘அங்காடித் தெரு’வில் அது நடந்தது. ஆகவே நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.
கரோனா காலத்தில் இந்த ‘தலைமை செயலகம்’ வெப் சீரிஸுக்கான முதல் புள்ளி தொடங்கியது. அரசியல் படங்கள் என்றாலே முதல்வர் கெட்டவர் தான். அப்படித்தான் படங்கள் வந்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலே குற்றவாளி என அர்த்தமல்ல. ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு முதல்வரின் அக, மன, புற சிக்கல்களை பேச வேண்டும் என நினைத்தேன். அவர் நல்லவரா? கெட்டவரா? என்பது விஷயமல்ல.
மக்கள் மீது கொண்டிருக்கும் காதல் தான் நீதி. அந்த நீதியை காப்பாற்றும்போது சில தவறுகள் நடக்கலாம். இவற்றை எல்லாம் இந்த வெப் சீரிஸில் பேசியிருக்கிறேன். 3 வருடம் முன்பு இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி செல்லும்போது தான், தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறிய மாநிலம் என்பது புரிந்தது. ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி எல்லாவற்றிலும் தமிழகம் முன்னேறியுள்ளது.
50 ஆண்டுகாலம் நம்மை தமிழகத்தில் பெரியாரிய, மாக்சிய, அம்பேத்கரியம் வழிநடத்தியுள்ளது. ஜனநாயகத்தை கட்டமைக்கும்போது அதில் ஊழல் இருக்கும். ஆனாலும் மக்களுக்கான நலன் போய் சேரும். எப்படி என்றால் எதிர்கட்சியின் அழுத்தத்தால் அது நிகழும். வெற்றி பெறுவர்களை மட்டுமல்ல, எதிர்கட்சிகளையும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
நம் பெயருக்குப் பின்னால் சாதி போடாததே ஓர் அரசியல் தான். நீ என்ன சாதி என்று கேட்காமல் இருப்பதே அரசியல் தான் என்று நினைக்கிறேன். இந்த களத்தை பேசுவதற்கான சூழலை இந்த வெப் சீரிஸில் உருவாக்கி கொடுத்துள்ளது” என்றார்.
WRITE A COMMENT