Last Updated : 30 Jun, 2017 09:40 AM

 

Published : 30 Jun 2017 09:40 AM
Last Updated : 30 Jun 2017 09:40 AM

800 வருடங்களுக்கு முன்பே எடுத்தார்கள் கல்வெட்டு சொல்லும் சேதி

அத்தியாவசியம் எனில் யாருடைய நிலத்தையும் உரிய இழப்பீட்டைக் கொடுத்து அரசாங்கம் கையகப்படுத்தலாம். இன்றைக்கு நேற்றல்ல.. சுமார் 800 வருடங்களுக்கு முன்பே இந்த வழக்கம் இருந்ததை சோமநாத சுவாமி கோயில் கல்வெட்டு நமக்குச் சொல்கிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அச்சுத மங்கலத்தில் உள்ளது சோமநாத சுவாமி கோயில். சோழப்பேரரசின் இறுதி நாட்கள் எப்படி எல்லாம் நகர்ந்தன என்பதை விளக்கும் முப்பது அரிய கல்வெட்டுகள் இங்கே உள்ளன. அதில் ஒன்றில்தான் மேற்கண்ட தகவலுக்கான ஆதாரமும் செதுக்கப்பட்டுள்ளது.

உதிரப்பட்டி இழப்பீடு

அச்சுதமங்கலம் அருகே உள்ளது சீதக்கமங்கலம். இங்கே, முடிகொண்டான் ஆற்றில் நீர்பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகறாறுக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்டு, ராஜராஜப் பேரரையன் என்ற அப்பாவி தண்டிக்கப்படுகிறார். பிற்பாடு உண்மை தெரியவந்து, பேரரையன் குடும்பத்துக்கு ’உதிரப்பட்டி’ என்ற பெயரில் நிலம் வழங்கப்பட்டது. இத்தகவல் சோமநாத சுவாமி கோயில் கல்வெட்டில் உள்ளது.

அதில் உள்ள கூடுதல் தகவல்கள் குறித்து நம்மிடம் பேசினார் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன். ‘‘கோயிலின் முதல் பிரகாரத்தின் கிழக்கு திசையில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் கி.பி. 1237-ல் மூன்றாம் குலோத்துங்க சோழனின் 21 ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டவை. 16 வரிகளைக் கொண்ட இக்கல்வெட்டுகளில் அந்தக் காலத்தில் தெருக்களை அகலப்படுத்த நிலங்களை கையகப்படுத்திய விதம் விவரிக்கப்பட்டுள்ளது.

தெருக்களை அகலப்படுத்த..

திருவிழாவின் போது இவ்வூரில் வெளியூர் மக்கள் அதிகமாக வந்து குவிந்தார்கள். போதாதுக்கு, தெருக்கள் குறுகியதாக இருந்ததால் சுவாமி திருவீதி உலா வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதை சரிசெய்வதற்காக தெருக்களை அகலப்படுத்த முடிவெடுக்கிறான் மூன்றாம் குலோத்துங்கன். இதற்காக அவன் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் கோயில் கல்வெட்டுகளில் உள்ளன.

அதன்படி, தெருக்களை அகலப்படுத்தும் போது அங்கு குடியிருப்போர், வணிகர்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அங்கிருந்த அரசாங்க அதிகாரி உடனடியாக சில விதிமுறைகளை உருவாக்கி செயல்படுத்தினார். தெரு விஸ்தரிப்புக்காக இடிக்கப்படும் மனைகளில் உள்ளோர், இரண்டாம் தெருவில் அனைத்து வசதிகளுடன் புதிதாக உருவாக்கப்படும் மனைகளில் குடியேற்றம் செய்யப்படுவர். பழைய தெருவிலிருந்த வணிகர்களுக்கு அதே மதிப்பில் இரண்டாம் தெருவில் மனைகள் ஒதுக்கப்படும். இப்படி விவரிக்கிறது கல்வெட்டுத் தகவல் அதேபோல், புதிய மனைகளை விரும்புவோர் அரசு நிர்ணயித்துள்ள விலையைக் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். விற்க நினைத்தாலும் அதேவிலைக்கு விற்றுக்கொள்ளலாம். அச்சுத மங்கலம் தெருக்கள் விரிவாக்கத்தில் பொதுநலனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டாலும் அதனால் பாதிக்கப்படுவோரின் நில உரிமையும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது’’ என்கிறார் சிவராமகிருஷ்ணன்.

கோயில் நிலங்களை கையகப்படுத்த..

இதேபோல், கோயிலுக்குச் சொந்தமான இடங்களை அரசாங்கத் தேவைக் காக கையகப்படுத்தினால் மாற்று என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திருக்குவளையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டு விவரிக்கிறது.

இதுகுறித்துப் பேசிய வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், ‘‘கி.பி.1284-ல் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சந்திர மெளலி பேராற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோயில் வரை நீர் புகுந்தது. தெருக்கள் எல்லாம் நீரில் மூழ்கின. அப்போது திருமறைக்காடுடையான் என்னும் வைராதராயன் என்பவர் ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் வெள்ளப்போக்கை மாற்றி ஊர் அழியாமல் பாதுகாத்தார்.

இதுகுறித்துப் பேசிய வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், ‘‘கி.பி.1284-ல் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சந்திர மெளலி பேராற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோயில் வரை நீர் புகுந்தது. தெருக்கள் எல்லாம் நீரில் மூழ்கின. அப்போது திருமறைக்காடுடையான் என்னும் வைராதராயன் என்பவர் ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் வெள்ளப்போக்கை மாற்றி ஊர் அழியாமல் பாதுகாத்தார்.

அத்துடன் பழைய நீர் வழியையும் கோயிலுக்குரிய சில நிலங்களையும் தூர்த்து புதிய சாலை ஒன்றையும் அமைத்தார். அச்சாலை இவ்வூருக்கு இரண்டாம் சுற்றுச் சாலையாக அமைந்தது. இப்பணிக்காக கோயில் நிலத்தை எடுத்ததற்கு நஷ்டஈடாக 2 வேலி நிலத்தை பரமேஸ்வர சதுர்வேதிமங்கலத்து ஊர்த் தலைவரி டமிருந்து பெற்று கோயிலுக்கு அளித்தார் என்கிறது பிரம்மபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டு’’ என்று சொன்னார்.

இத்தனை நேர்மையுடன் நடந்ததால் தானோ என்னவோ மன்னராட்சியில் மாதம் மும்மாரி பொழிந்தது போலிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x