Last Updated : 07 Mar, 2014 08:15 PM

 

Published : 07 Mar 2014 08:15 PM
Last Updated : 07 Mar 2014 08:15 PM

மன்னார் வளைகுடாவில் தவிக்கும் காவலர்கள்

மன்னார் வளைகுடா தீவுகளில் பணிபுரியும் வேட்டை தடுப்புக் காவலர்கள் முதலுதவி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தவித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது

மன்னார் வளைகுடா உயிர்க் கோளக் காப்பகத்தில் சிங்கல் தீவு, குருசடை, புள்ளிவாசல், பூமிரிச்சான், மனோலி புட்டி, மனோலி, முயல் தீவு, முள்ளி தீவு, வாழை தீவு, அப்பா தீவு உள்ளிட்ட 21 தீவுகள் 560 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன.

இந்த தீவுக் கூட்டப் பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீன் வகைகள், 104 வகையான பவளப் பாறைகள், 147 வகையான கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், அரிய வகை கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை. குறிப்பாக பாலூட்டி இனங்களைச் சேர்ந்த கடல் பசுக்கள், டால்பின்கள் வசிக்கின்றன.

கடல் சூழலில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவுகளை, வனவேட்டை தடுப்புக் காவலர்கள் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு முதலுதவி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வனவேட்டை தடுப்புக் காவலர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் விஸ்வநாதன் கூறியதாவது: தமிழக வனத்துறையில் பணியாற்றிவரும் வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக அரசு ரூ. 6,750 நிர்ணயித்து உள்ளது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு ரூ. ரூ.4,000 மட்டுமே வழங்கப்படுகிறது.

மன்னார் வளைகுடா தீவுகளில் தனியாக காவல் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால் சிகிச்சை மேற்கொள்ள எந்த முதலுதவி உபகரணங்களும் கிடையாது. வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு அடையாள அட்டை, சீருடை, காலணிகள், குளிர்கால ஆடை, மழைக்கோட்டு, டார்ச்லைட் போன்ற உபகரணங்களுடன் முதலுதவி உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள தொகுப்பூதியத்தை வழங்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பக வனப் பாதுகாவலர் தீபக் எஸ். பில்கியிடம் கேட்டபோது, அவர் கூறியது: வனவேட்டை தடுப்புக் காவலர்களின் தொகுப்பூதியம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக, மண்டல வனப்பாதுகாவலரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x