Published : 17 Aug 2015 10:44 AM
Last Updated : 17 Aug 2015 10:44 AM
நாட்டின் 69-வது சுதந்திர தின வாழ்த்துகள் என்று நட்பு வட்டங்களில் உள்ள பலரும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள்.
அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் கூறியதோடு, ‘இது 69-வது சுதந்திர தினமல்ல; 68-வது சுதந்திர தினம்தான்’ என்று குறிப்பிட்டு, அதற்கு விளக்கமும் அளித்திருந்தேன்.
ஒரு குழந்தை பிறந்து, அதற்கு அடுத்த ஆண்டில் வரும் அதே நாளை முதல் பிறந்த நாளாகக் கொண்டாடுவதுபோல, ‘சுதந்திரம் அடைந்த தினத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், நடப்பு ஆண்டிலிருந்து சுதந்திரம் அடைந்த ஆண்டைக் கழித்து (2015-1947=68) மீதம் வரும் ஆண்டுகளைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது வாதம். இதைச் சில நண்பர்கள் ஏற்றார்கள்; சில நண்பர்கள் “என்று சுதந்திரம் அடைந்தோமோ அதுதான் முதல் சுதந்திர தினம்” என்று மறுத்தார்கள்.
1947 ஆகஸ்ட் 15 அன்று ஒருவர் பிறந்திருந்தால், அவருக்கு இன்று 68-வது பிறந்த நாள்தானே? - இப்படிக் கேட்டு ஆதரவு தெரிவித்தார் ஒரு நண்பர். உண்மைதான். குழந்தை பிறந்த அன்று எல்லோருமே இனிப்புக் கொடுத்துக் கொண்டாடுகிறோம் என்றாலும், அதை முதல் பிறந்த நாள் என்று சொல்வதில்லை.
அடுத்த ஆண்டு அதே தேதியில் வருவதுதான் அக்குழந்தையின் முதலாமாண்டு பிறந்த நாள். சுதந்திரம் அடைந்த அன்று செய்தியைத் தாங்கி வந்த நாளிதழ்களைப் பார்த்தால் பெரும்பாலான இதழ்கள் ‘இந்தியாவுக்குச் சுதந்திரம் பிறந்தது’ என்றே தலைப்பிட்டிருக்கின்றன. அப்புறம் எப்படி மறு வருஷமே இரண்டாவது சுதந்திர தினம் ஆகியிருக்கும்? அரசாங்கம்தான் விளக்க வேண்டும்!
- வாசுகி ராஜா, ஊடகவியலாளர்,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT