Published : 20 Aug 2015 10:11 AM
Last Updated : 20 Aug 2015 10:11 AM

நாதியற்றுப்போன நதி

ஆடிப் பதினெட்டில் பேராச்சி அம்மனைத் தரிசனம் செய்துவிட்டு, வண்ணார்ப்பேட்டையில் தாமிரபரணியில் உள்ள ஆமைப்பாறையில் அமர்ந்து ஆறு வகை அன்னங்களைச் சாப்பிட்டுவிட்டு, அப்படியே கைநிறையத் தாமிரபரணித் தண்ணீரை அள்ளிப் பருகிய சிறு வயது நினைவுகள் அற்புதமானவை. இன்று கழிவுகளின் புகலிடமாய் அதே நதி மாறியுள்ளது கொடுமையின் உச்சம். ஆயிரக்கணக்கான கருவேல மரங்கள் நதியின் பாதையில் மண்டி தண்ணீரை உறிஞ்சுகின்றன. நதியற்றுப்போனவன்தான் உண்மையில் நாதியற்றுப்போனவன் என்பதை ‘தாமிரபரணி: ஆக்கிரமிப்புக் கரை ஆன ஆற்றங்கரை’ எனும் கட்டுரை கவலையோடு பதிவு செய்துள்ளது.

நெகிழிக் கழிவுகள், ஆலைக் கழிவுகள், கழிவறைக் கழிவுகள் போன்றவற்றை இனிமேலும் நதியில் கலப்பதைத் தடுக்காவிட்டால், மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தைத் திருநெல்வேலியும் தென்மாவட்டங்களும் சந்திக்க நேரிடும். லண்டனில் உள்ள வாட்டர்லூ பாலம் போன்று கேப்டன் பேபர், பொறியாளர் ஹார்ஸ்லி ஆகியோரால் அழகாக வடிவமைக்கப்பட்டு, அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஈ.பி.தாம்சனின் பெருமுயற்சி யாலும் சுலோசன முதலியாரின் நிதியுதவியிலும் கட்டப்பட்ட 175 ஆண்டு பழமையான 760 அடி நீளமுடைய சுலோசன முதலியார் பாலம். அதுபோல நாம் கட்டாவிட்டாலும் பரவாயில்லை, தினமும் அதன் ஓரத்தைத் தோண்டி பல செயல்களுக்காக அதைப் பாழாக்காமலாவது இருக்கலாம்.

முனைவர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x