Published : 04 Oct 2017 09:20 AM
Last Updated : 04 Oct 2017 09:20 AM

மும்பை நெரிசல் சம்பவம்: பொறுப்பின்மையின் கோர விளைவு

மு

ம்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் நகர்ப்புறப் பொதுப் போக்குவரத்து தொடர்பாக நீண்டகாலமாகக் காட்டப்பட்டுவரும் அலட்சியத்தின் நேரடி விளைவு என்றே சொல்ல வேண்டும். சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கான இருப்புப் பாதையைக் கொண்ட மும்பை புறநகர் ரயில்வேயானது அந்நகரின் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஒன்றாகும். உலகின் எந்த நகரத்தையும் ஒப்பிட, மிக அதிகமான பயணிகள் மும்பை புறநகர் ரயில்களைப் பயன்படுத்துகிறார்கள். மும்பையில் ஓராண்டில் மட்டும் 3,500 பேர் ரயில் மோதி உயிரிழக்கிறார்கள் என்பது நவீன ரயில் போக்குவரத்து உலகில் நினைத்தே பார்க்க முடியாத விஷயம்.

கடந்த 20 ஆண்டுகளில், நாடு முழுவதும் அதிக சாலை வசதிகளுக்கான திட்டமிடல்கள் நடைபெற்றாலும், பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை. இந்நிலையில், மும்பை ரயில்நிலைய நெரிசல் சம்பவம் அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து வசதியைச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மோசமான நிலை யில் இருக்கும் ரயில் நிலையக் கட்டுமானங்களைச் சரிசெய்வது மிகவும் அவசியமான விஷயம். முறையான நிர்வாக நடவடிக்கைகள் மூலம் இதை விரைவாகச் சாத்தியப்படுத்த முடியும்.

அதிகச் செலவில்லாத திட்டங்கள் மூலமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சரிசெய்யப்பட வேண்டிய நிலையில் உள்ள புறநகர் ரயில் நிலையங்கள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடந்தபின்னர்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமா எனும் கேள்வி எழுகிறது.

இதுபோன்ற சம்பவங்களுக்கு யார் பொறுப்பெடுத்துக்கொள்வது எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. சம்பவம் நடந்த நடைபாதை மேம்பாலம் ப்ருஹன்மும்பை மாநாகராட்சியால் கட்டப்பட்டது என்பதால், மும்பை போலீஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ரயில்வே போலீஸாரும், ரயில் பயணிகள் பயன்படுத்துவதால் ரயில்வே போலீஸார்தான் பொறுப்பு என்று மும்பை போலீஸாரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொண்டது அதிர்ச்சியும் ஏமாற்றமும் தருகிறது.

நகர்ப்புறங்களில் மிகப் பழமையான போக்குவரத்துத் திட்டங்களையும், நிர்வாகங்களையும் சீரமைப்பது என்பது இன்று வரை பெரும் சவாலாகவே இருக்கிறது. சம்பவம் நடந்த நடைமேடைக்கு அருகில் பல அலுவலகங்கள் இருப்பதால், அதில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு விபத்துகள் நிகழ்வதற்கு வாய்ப்பு இருப்பதாக நீண்டகாலமாகவே புகார்கள் இருந்தாலும் அது கண்டுகொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நேரும் வாய்ப்புள்ள கட்டுமானங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட துறைகள் இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கின்றனவா என்பதைக் கண்காணிப்பது அரசின் பொறுப்பு. இழப்புகள் நடந்தபின்னர் கண்துடைப்பு நடவடிக்கைகள் எடுப்பதைவிட, விபத்துகள் நேராமல் பார்த்துக்கொள்வதுதான் மிக முக்கியம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x