Published : 02 Oct 2017 06:55 AM
Last Updated : 02 Oct 2017 06:55 AM
மத்தியில் ஆளும் மோடி அரசின் சாதனைத் திட்டமாக முன்வைக்கப்படும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் காந்தியின் உருவமும் பெயரும் பயன்படுத்தப்படுகின்றன. காந்தி தூய்மையை வலியுறுத்தியவர்தான். ஆனால், தூய்மை என்பது வெறும் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கும் புறத்தூய்மை மட்டுமா, என்ன?
மனதைப் பீடித்துள்ள சாதி, மத துவேஷ உணர்ச்சிகளையும் நீக்க வேண்டும்; பிறப்பின் அடிப்படையில் எந்தப் பாகுபாட்டு உணர்வுகளும் கூடாது என்றெல்லாம் வாழ்நாள் முழுவதும் காந்தி வலியுறுத்தியதைப் புறந்தள்ளிவிட்டு, இன்றைக்கு உணவின் அடிப்படையிலும்கூட பாகுபாடுகளை உருவாக்கித் தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அரசோ கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
மதச்சார்பின்மை கோட்பாடு இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது. ஆனால், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே அக்கோட்பாட்டை அரசியல் தளத்தில் அழுத்தம் பெறச் செய்தவர் காந்தி. அவர் முன்னெடுத்த போராட்டங்கள் அனைத்தும் சகல மதத்தவரையும் உள்ளடக்கியவையாக இருந்தன. தனது சாத்வீகப் போராட்ட முறைகளால் பிரிட்டிஷ் அரசை சர்வதேச அரசியல் அரங்கில் கடும் அழுத்தத்துக்கு ஆளாக்க முடிந்த காந்தியால் ஒரு அளவுக்கு மேல் தேசத்துக்குள் மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் சக்திகள் உருவெடுத்ததைத் தடுக்க முடியவில்லை. அவரையே அந்தச் சக்திகள் பலிகொண்டுவிட்டன. அன்று நடந்தது அவரின் உடலின்மீதான தாக்குதல். ஆனால், இன்றோ அவரது அடிப்படைக் கொள்கைகள்மீதே தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
காந்தியிடமிருந்து முன்னிறுத்தப்பட வேண்டிய அடையாளங்கள் எவ்வளவோ இருக்கின்றன. இந்தியர்கள் சமூக அளவிலும் பொருளாதார நிலையிலும் சுயசார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதாலேயே கிராம உள்ளாட்சிகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை காந்தி வலியுறுத்தினார். மத்திய அரசு எந்தத் தொழில்திட்டத்தைச் செயல்படுத்தினாலும் அதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. அந்தந்த பகுதிகளில் வாழும் மக்கள் வாழ்வாதாரங்களையே இழந்து நிற்கும் நிலைதான் தொடர்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளோடு இப்போது மாநில அரசுகளின் அதிகாரங்களும்கூட கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து இல்லாமலேயே போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வைக்கிற எண்ணம், காந்தியின் கொள்கை களுக்குச் செய்யும் துரோகம்.
காந்தியின் பெயரைச் சொல்லிக்கொண்டே காந்தியத்துக்கு எதிரான செயல்பாடுகளில் அவரது பெயரைப் பயன்படுத்திக்கொள்ளும் வேலைகள் நடக்கின்றன. இந்நிலையில் காந்தியத்தைப் பற்றிச் சரியான புரிதல்களை உண்டாக்கவில்லையென்றால் அவர் வெறும் அடையாளமாகவே சுருக்கப்பட்டுவிடுவார். அப்படிப்பட்ட அடையாள முயற்சிதான் காந்தியின் பெயரால் ‘தூய்மை இந்தியா’ முன்னெடுப்பது. காந்தியின் உண்மையான ‘தூய்மை இந்தியா’ என்பது தெருக்களிலுள்ள குப்பைகளை அகற்றுவது மட்டுமல்ல; இந்தியர்களின் மனங்களில் ஆக்கிரமித்துள்ள குப்பைகளை அகற்றி, அதிகாரங்கள் பரலவாக்கப்பட்ட, சமத்துவமான இந்தியாவை ஏற்படுத்துவதும்தான். அப்படிப்பட்ட ‘தூய்மை இந்தியா’வை நோக்கிப் பயணிப்பதே காந்திக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடனாக இருக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT