Published : 10 Oct 2017 09:05 AM
Last Updated : 10 Oct 2017 09:05 AM

காலத்துக்கேற்ற முடிவை மார்க்சிஸ்ட்டுகள் எடுக்க வேண்டும்!

திர்காலத்தில் வகுக்க வேண்டிய அரசியல் உத்தி பற்றிய விவாதத்தில் இறங்கியிருக்கிறது இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி. குறிப்பாக அந்தக் கட்சியின் கேரள, மேற்கு வங்க மாநிலக் கிளைகளுக்கு இடையிலான விவாதமே இதில் பிரதானப் பங்கு வகிக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் உருவாகும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம் பெறுவதா அல்லது வெளியிலிருந்து செயல்படுவதா என்பதுதான் விவாதத்தின் மையப்புள்ளி. கேரளத்தில் கால் பதிக்க பாஜக பல்வேறு வியூகங்களை முயற்சித்துவரும் சூழலில், இந்த விவாதம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கேரளத்தில் இப்போது ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சிதான், மேற்கு வங்கக் கிளையைவிட அதிகாரம் படைத்ததாக இருக்கிறது. அதன் பிரதான எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். எனவே காங்கிரஸுடன் தேசிய அளவில் கூட்டணி வைப்பது மாநிலத்தில் கட்சியின் செல்வாக்கைச் சரிய வைத்துவிடும் என்று கேரளப் பிரிவு கருதுகிறது. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கு குறைந்ததால் அந்த இடத்தை திரிணமூல் காங்கிரஸும் பாஜகவும் பங்கு போட்டுக்கொள்கின்றன. தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் இதர மதச்சார்பற்றக் கட்சிகளுடன் கூட்டுசேர வேண்டும் என்று மேற்கு வங்க மார்க்சிஸ்ட்டுகள் விரும்புகின்றனர். கேரள மார்க்சிஸ்ட்டுகள் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரள வேண்டும் என்ற யோசனைக்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. பாஜக பாசிஸ்ட் மனோபாவம் கொண்ட கட்சியா இல்லையா, எல்லா மாநிலங்களிலும் ஆட்சி செய்ய விரும்பும் அந்தக் கட்சியை எதிர்ப்பது முக்கியமா இல்லையா என்ற கேள்விகள் மார்க்சிஸ்ட் தொண்டர் களுக்குள் எழுகின்றன. ‘பாஜக இருக்கட்டும், முதலில் கேரளத்தில் காங்கிரஸை எதிர்ப்போம், அந்தக் கட்சியுடன் ஒரே மேடையில் சேரக் கூடாது’ என்று கேரள மார்க்சிஸ்ட்டுகள் கருதினால், பாசிச எதிர்ப்புக்கு அர்த்தம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

‘கேரளம் வேறு - நாடு வேறு’ என்று விளக்கங்கள் தரப்பட்டால் மார்க்சிஸ்ட் கட்சி சுயநலனை முக்கியப்படுத்தி மட்டுமே முடிவுகளை எடுக்கிறது என்றாகிவிடும். இந்தப் பிரச்சினை அடுத்து கட்சியின் மத்தியக் குழு பரிசீலனைக்குத்தான் செல்லும். அங்கே கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்துக்கு ஆதரவு அதிகம். கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி மாநிலங்களவைக்கு மூன்றாவது முறையாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட, அனுமதி தர மறுத்துவிட்டது மத்தியக் குழு.

2004-ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தந்ததைப் போல இனி வரும் காலத்திலும் மார்க்சிஸ்ட்டுகள் தரக்கூடும். ஆனால், காங்கிரஸுடன் சேருவதா வேண்டாமா என்ற முடிவில் ஏற்படும் மோதல் அல்லது ஊசலாட்டம் பாஜகவுக்கே சாதகமாக முடியும். எனவே, ஜனநாயகம், மதச்சார்பின்மை, கருத்துச் சுதந்திரம் போன்றவற்றைக் காப்பாற்ற மார்க்சிஸ்டுகள் சில சமரசங்களைச் செய்துகொள்வது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x