Published : 23 Oct 2017 09:52 AM
Last Updated : 23 Oct 2017 09:52 AM
தி
ராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, அடுத்து திராவிடக் கட்சிகள் ஆட்சியின் அரை நூற்றாண்டு, தொடர்ந்து தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் சட்ட மன்றப் பணியின் அறுபதாண்டு... இந்த மூன்று தருணங்களும் தமிழ்நாட்டைத் தாண்டியும் இந்தியா முழுமைக்கும் முக்கியமானவை. ஆனால், இந்தியாவின் தேசிய ஊடகங்கள் வழக்கம்போல இதற்கும் பெரிய கவனம் அளிக்காமலேயே கடந்துபோயின. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் குழுவால் அப்படிக் கடந்து போக முடியவில்லை.
எல்லா நிறை - குறைகளைக் கடந்தும், இந்த மண்ணில் மகத்தான ஒரு பணியை, குறிப்பாக சமூக நீதித் தளத்தில் திராவிட இயக்கம் நிறைவேற்றியிருக்கிறது. அதன் முக்கியமான தளகர்த்தர்களில் ஒருவர் என்பதோடு, இந்த ஐம்பதாண்டுகளில் தமிழகத்தின் நீண்ட கால முதல்வர், சவாலான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் கொண்டவர் கருணாநிதி. ஜனநாயக நாடு ஒன்றில் 60 ஆண்டு காலம் தொடர்ந்து மக்களால் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு, அதுவும் சாதி ஆதிக்க இந்திய அரசியலில் ஒரு அழுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து, இப்படி சாதித்த வரலாறு கருணாநிதியை அன்றி யாருக்கும் இல்லை.
ஆக, இந்த முக்கியமான தருணத்தில் அவருடைய பங்களிப்பைப் பேசும் நூல் ஒன்றை ஏன் நாம் கொண்டுவரக் கூடாது என்ற கேள்வியை நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதற்கான பதில்தான் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகம்! கூடவே, திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு பின்னணியையும் திமுக, அதிமுக இரு கட்சிகளின் ஆட்சியிலும் தமிழகத்தில் நிகழ்ந்த நல்ல மாற்றங்களையும் இந்நூலில் தொட்டிருக்கிறோம்.
முன்னதாக, திராவிட இயக்கத் தளகர்த்தர்களில் ஒருவரான எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான ‘எம்ஜிஆர் 100 - காலத்தை வென்ற காவியத் தலைவர்’ தொடர் ஒரு புத்தகமாகக் கொண்டுவரப்பட்டு வாசகர்களின் பலத்த வரவேற்புடன் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்றுக்கொண்டேயிருப்பதை இங்கே நினைவுகூர்கிறோம். அது தொடராக வெளிவந்து புத்தகமாக வெளியானது. மாறாக, இது புத்தகமாக வெளியிடப்பட்டு, அதிலுள்ள குறிப்பிட்ட சில கட்டுரைகள், பேட்டிகளை நம்முடைய நடுப் பக்கங்களில் வெளியிடவிருக்கிறோம்.
தமிழும் தமிழரும் கொண்டாட வேண்டிய ஒவ்வொரு ஆளுமையையும், வரலாற்றுத் தருணத்தையும் இப்படிப் புத்தகங்களின் வழி பேச நாம் விரும்புகிறோம். அவ்வகையில், ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் படைக்கும் ‘கேஎஸ்எல் மீடியா’வின் ‘தமிழ்-திசை’ பதிப்பகத்திலிருந்து வெளியாகும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல், முதுபெரும் தலைவரான கருணாநிதியின் அயராத உழைப்புக்கு ஒரு எளிய மரியாதை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT