Published : 11 Oct 2017 09:57 AM
Last Updated : 11 Oct 2017 09:57 AM
பி
ல்லி-சூனியம், ஏவல் போன்ற மந்திர-தந்திரங்களையும் உடலை வருத்திக்கொள்ளும் நேர்த்திக்கடன்களையும் தடுக்க கர்நாடக மாநில அரசு கொண்டுவரவிருக்கும் சட்டம் வரவேற்கத்தக்கது. ‘மனிதாபிமானமற்ற தீய நடைமுறைகள் (பில்லி–சூனியம்) தடை, ஒழிப்பு கர்நாடக மசோதா-2017’ மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. விரைவில் சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்படும். சமூகத்தில் நிலவும் மூடப்பழக்கங்களைக் களைய சட்டம் மட்டுமே போதாதுதான். ஆனால், மனிதாபிமானமற்ற சடங்குகளையும் பழக்கங்களையும் கட்டுப்படுத்த சட்டம் இயற்றுவது நிச்சயம் பலன் தரும்.
அப்பாவிகளையும் சமூகத்தின் அடித்தட்டு மக்களையும் சுரண்டுகிற, அவர்களுடைய சுயமரியாதைக்கு பங்கம் நேரச் செய்கிற நடவடிக்கைகளைத் தடுப்பதுதான் இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். எப்பேர்ப்பட்ட பிணியாக இருந்தாலும் மந்திரத்தின் மூலமே குணமாக்கிவிடலாம் என்ற மூட வழக்கங்கள், ஆவிகளின் சாபத்துக்கு ஆளாக நேரும் என்று காரணம் காட்டி நிறைவேற்றப்படும் செயல்கள் போன்றவற்றையும் தடை செய்கிறது இந்த மசோதா. இவற்றில் சிலவற்றை இந்திய தண்டனையியல் சட்டமும் குற்றச் செயல்களாகப் பட்டியலிடுகிறது. அதே சமயம் சோதிடம், வாஸ்து, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மதச் சடங்குகள், ஆன்மிகப் பாடங்கள் போன்றவற்றை இந்த மசோதா தடை செய்யவில்லை.
மதப் பழக்கங்களுக்கும் மூட நம்பிக்கைப்படியான நடைமுறைகளுக்கும் இடையே மெல்லிய கோடு கிழிக்கிறது மசோதா. மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே பில்லி-சூனியங்களுக்கும் இதர தீய நடைமுறைகளுக்கும் சட்டமியற்றப்பட்டிருக்கிறது. இதனால் அங்கே மூடப்பழக்கங்கள் குறைந்துவிட்டனவா என்று தெரியாது, ஆனால் இவற்றை எதிர்க்கும் மக்களுக்கு இச்சட்டங்கள் நிச்சயம் வலு சேர்க்கும். பகுத்தறிந்து பார்க்கும் ஆற்றல் இல்லாததாலும் அறியாமையாலும்தான் மக்கள் இத்தகைய சடங்குகளை ஏற்கின்றனர்.
சில சடங்குகளைப் பற்றிப் படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. இந்த மசோதா தடை செய்யும் சடங்கில் ஒன்று ‘உருளு சேவா’ அல்லது ‘மட்டி ஸ்நானா’. பெரிய விருந்து வைத்து அதில் உயர் சாதி மக்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது மேலுடை இல்லாமல் உருண்டு, பிறகு இலைகளைத் தலையில் சுமந்து சென்று அகற்றிவிட்டு நீர்நிலைகளில் நீராடினால் தோல் வியாதிகள் குணமாகும் என்பதே இந்த சேவா! உருளுகிறவர்களில் சிலரும் உயர் சாதியினர் என்றாலும், ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். அறிவியலும் மருத்துவமும் வளர்ந்த பிறகும் இப்படிப்பட்ட நம்பிக்கைகளைத் தொடர்வதும் அதில் அப்பாவிகளை ஈடுபடுத்துவதும் சரியல்ல.
எவற்றையெல்லாம் பகுத்தறிவற்றவை என்று கருதுகிறோமா அவற்றையெல்லாம் இப்படிச் சட்டம் இயற்றித் தடுத்துவிடுவதா என்று சிலர் கேட்கக்கூடும். மனிதாபிமானமற்றது, கொடூரமானது, அப்பாவிகளைக் கொண்டு நிறைவேற்றப்படுவது, பணத்துக்காக உயிரைப் பணயம் வைப்பது போன்ற பழக்கங்களைத் தடுத்துத்தான் தீர வேண்டும். பேயை விரட்டுவதாகக் கூறி பெண்களைச் சகட்டு மேனிக்கு அடித்து உதைப்பதை நியாயப்படுத்த முடியுமா? கல்வியும் விழிப்புணர்ச்சியும்தான் மக்களை இந்த இழிவுகளிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் மீட்க முடியும். மக்களுடைய வாழ்க்கையையும் சுகாதாரத்தையும் சுயமரியாதையையும் பாதிக்கும் எந்தச் சடங்காக இருந்தாலும் அதைச் சட்டமியற்றி தடுப்பது எல்லா அரசுகளின் கடமையாகும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT