Published : 14 Sep 2017 09:03 AM
Last Updated : 14 Sep 2017 09:03 AM
க
டந்த மூன்று மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடம் அதிருப்தியையும் கோபத்தையும் உருவாக்கியிருக்கிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படும் முறைக்குப் பதிலாக, தினமும் மாற்றம் செய்யும் முறை ஜூன் 16 முதல் அமலாக்கப்பட்டுவருகிறது. டெல்லியில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் லிட்டருக்குக் கிட்டத்தட்ட ரூ.5 உயர்ந்திருக்கிறது. ஒருபுறம் தினமும் எரிபொருட்களின் விலை உயர்ந்துகொண்டிருக்க, மறுபுறம் பொறுப்பிலிருந்து நழுவிச் செல்லும் உத்தியாக இதை மத்திய அரசு பயன்படுத்திக்கொள்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
2012-ல் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 120 டாலருக்கு (சுமார் ரூ.7,700) வாங்கியது இந்தியா. அப்போது இந்தியா முழுவதும் சுமார் ரூ.65-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்பட்டது. இன்றைக்கு, சர்வதேசச் சந்தையில் 50 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,200) கச்சா எண்ணெய் விற்கப்படும் நிலையில், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.70-க்கும் அதிகமாக இருக்கிறது. சந்தை விலையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2010-லும், 2014-லும் பெட்ரோல், டீசலின் விலையானது உள்ளீடு செலவைத் தாண்டி, தேவை மற்றும் அளிப்பின் அடிப்படையிலேயே அமைந்தது.
சர்வதேசச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் நிலையில், நாடு முழுவதும் குறைந்த விலையில்தான் அவை விற்கப்பட வேண்டும். கலால் வரி, மதிப்புக்கூட்டு வரி ஆகியவைதான் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்கள். உண்மையில், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தில் கிட்டத்தட்ட பாதித் தொகை இந்த வரிகளுக்குத்தான் செல்கிறது. கலால் வரி மூலம் கிடைக்கும் தொகையானது, 2014-17 காலகட்டத்தில் ரூ.99,184 கோடியிலிருந்து, ரூ.2,42,691 கோடியாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2014 முதல் கச்சா எண்ணெய் விலை குறைந்துவரும் சூழலில், இதனால் பலனடைவது வாடிக்கையாளர்கள் அல்ல; அரசுதான் என்பது தெளிவாகிறது.
இந்த வரிகள், பெட்ரோல், டீசல் விநியோகத்துக்கு ஒரு செயற்கையான கட்டுப்பாட்டை உருவாக்குகின்றன. இதன் மூலம் அவற்றின் விலையும் அதிகரிக்கிறது. சொல்லப்போனால், அதிகபட்சமாக 28% வரி கொண்ட ஜிஎஸ்டி போன்றவை, எரிபொருட்களின் விலையைக் குறைத்திருக்க வேண்டும். பரவலாகப் பயன்படுத்தப்படும் எரிபொருட்கள்மீது இப்படியான வரிகளை விதித்து அவற்றின் விலை உயர்வுக்கு வழிவகுப்பது, பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். குறைவான வரிகளுடன், எரிபொருள் சில்லறைச் சந்தையில் போட்டி ஏற்படும் சூழலும் உருவானால்தான் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்கச் செய்ய முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT