Published : 13 Sep 2017 09:05 AM
Last Updated : 13 Sep 2017 09:05 AM

மாணவர் போராட்டங்களை நசுக்குவது ஜனநாயக விரோதம்!

நீ

ட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தங்கள் எதிர்காலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி, நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கும் மாணவர்களை அச்சுறுத்தவதற்காகவே அரசு கைது அஸ்திரத்தை எடுத்திருக்கிறது என்றே இந்நடவடிக்கையைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. கடந்த சனிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் பகுதியிலும், பெரம்பூர் மேம்பாலம் அருகிலும் பள்ளி மாணவிகள் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சென்னையில் நடந்த மாணவர் போராட்டங்களைத் தூண்டிவிட்டதாகக் குற்றம்சாட்டி 13 மாணவர்கள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்களோ, பொது அமைதிக்கு பாதிப்போ ஏற்படாத நிலையில், அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்கள்மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதை ஜனநாயகத்துக்கு விரோதமானதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தப் போராட்டங்களுக்குப் பின்னே, தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் நியாயமான கோபம் இருப்பதை உணர்ந்துகொள்ளாத அரசு, போராட்டங்களை நசுக்குவதில் மட்டும் தீவிரமாக இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளில் தமிழக அரசுமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் சூழலில், ஆக்கபூர்வமான தீர்வுக்கு வழிவகுக்காமல் தொடர்ந்து அடக்குமுறை நடவடிக்கைகளில் மட்டுமே அரசு கவனம் செலுத்துவது மிகவும் ஆபத்தான போக்கு. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கண்டித்துப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு மாணவி வளர்மதி, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டது இந்த ஆபத்தான போக்குக்கு ஒரு உதாரணம். இந்நடவடிக்கையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டிருக்கிறது. காரணமே இல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மாணவி வளர்மதியைச் சிறைக்குள் வைத்திருந்த தமிழக அரசு, அந்த மாணவி அனுபவித்த, அனுபவித்துவரும் கொடுமைகளுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது?

தமிழக அரசியல் போக்குகளைத் தீர்மானித்ததில் மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் முக்கியப் பங்கை வகித்திருப்பது வரலாறு. இன்று ஆட்சியில் உட்கார்ந்திருப்பவர்கள் நேற்று மாணவர்கள் போராட்டத்தின் வழி இங்கு வந்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! அமைதிவழிப் போராட்டங்களை நசுக்கும் நடவடிக்கைகள் எந்தத் தீர்வையும் தராது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x