Published : 07 Sep 2017 09:53 AM
Last Updated : 07 Sep 2017 09:53 AM

வட கொரியா: அச்சுறுத்தல் அல்ல, பேச்சுவார்த்தையே பலன்தரும்!

ணு ஆயுதப்பரவல் கூடாது, சோதனைகள் நடத்தக் கூடாது என்ற சர்வதேச சட்டங்களைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் வட கொரியா நடந்துவருகிறது. அதன் அணுஆயுத, ஏவுகணைச் சோதனைகள் இடைவிடாமல் தொடர்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு ஹைட்ரஜன் குண்டை வெடித்துச் சோதனை நடத்தியிருக்கிறது. இது வட கொரியா மேற்கொள்ளும் ஆறாவது அணுகுண்டுச் சோதனை.

வட கொரியாவின் இந்தச் சோதனைகளுக்கு உலக அளவில் கண்டனங்கள் தொடர்கின்றன. வட கொரியாவுடன் வர்த்தக உறவை வைத்திருக்கும் நாடுகளுடன் உறவு துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருக்கிறது. இத்தகைய மிரட்டல்களால் வட கொரியா அஞ்சிவிடவில்லை. அணுகுண்டு சோதனைகளை வெவ்வேறு விதங்களில் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறது. அது தன்னை அணுசக்தி நாடாக நிலைநிறுத்திக்கொள்ள விரும்புகிறது. எனவே, தென் கொரியாவும் ஜப்பானும் தங்களுடைய தற்காப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் ஏவுகணைகளை வாங்க ராணுவக் கொள்முதலை அதிகரித்துவருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தைத் தணிக்க விரும்பும் தென் கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே-இன், அமெரிக்காவின் ஏவுகணைப் பாதுகாப்புத் தற்காப்பு ஏற்பாட்டை வாங்க முடிவு செய்திருக்கிறார். ஆனால், தென் கொரியாவில் பலர் இதை எதிர்க்கின்றனர்.

வட கொரியாவில் கிம் குடும்ப ஆட்சி 33 ஆண்டுகளாகத் தொடர்கிறது. மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் இல்லை. அதே சமயம், இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த கிம் ஜோங்-உன் மூன்றாவது தலைமுறை சர்வாதிகாரியாக ஆட்சிக்கு வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகாலத்தில் இந்தக் குடும்பம் என்னதான் செய்தது என்ற கேள்வி மக்களுக்குத் தோன்றாமலிருக்க, நாடு பெரிய ராணுவ வல்லரசாகிவிட்ட மனப் பிரமையை ஏற்படுத்தப் பார்க்கிறார் கிம் ஜோங்-உன். இராக்கிலும் லிபியாவிலும் சர்வாதிகார ஆட்சியை அகற்றப் பிற நாடுகள் தலையிட்டதைப் போல வட கொரியாவிலும் தலை யிட்டுவிடக் கூடாது என்று எண்ணுகிறார். அதற்காக அணு ஆயுத நாடு என்று வட கொரியாவை அணுஆயுத நாடாகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

வட கொரியாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளை ட்விட்டரில் எச்சரித்திருக்கிறார் ட்ரம்ப். அது சீனாவுக்கான மறைமுக எச்சரிக்கை. வட கொரியாவில் செல்வாக்குள்ள ஒரே நாடு சீனாதான். அமெரிக்க எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் வட கொரியாவுடன் உறவைத் தொடர்வதில் சீனா உறுதி யாக இருக்கிறது. ஒருவேளை, வட கொரியா ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டால், கோபத்தில் அது அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், அளவிட முடியாத சேதம் நேரக்கூடும். இந்த நிலையில் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா, சீனா, தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகள் நேரடியாகப் பேசி பதற்றத்தைத் தணிக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் தான் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x